Tuesday, October 4, 2011

காட்டுக்குள் ஓர் அதிசயம்! _








இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ
 மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம்.

 சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும்
 பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும்
 தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
 இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம்
 என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது
 பயணம் ஆரம்பமானது.

 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி
 காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் அடையாளம்'
 என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.

 யானை உருக்கொண்ட ஆல மரம் என்றதும் எமது எதிர்பார்ப்பு அதிகமானது.
 நகரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் தூரப் பயணம். சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை
 கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். காட்டுவழியே கால்நடையாகச் செல்லும்போது
 கவனமாக செல்லும்படியும் குரங்குகளின் அட்டகாசம் அதிகம் என்றும் கங்கொடையில்
 கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளாகள் கூறினார்கள்.

 உயர்ந்த மலை. அதிகாலைப் பொழுதில் சில்லென்ற காற்றோடு பனி படர்ந்து உள்ளத்தையும்
 நனைக்கிறது. காட்டுக்குள் கரடுமுரடான பாதையில் வெகுதூரம் நடந்த பின்னர்
 தெரிகிறது அந்த ஆலமரம்.
 ஆம்! அந்தப் பெரியவர் சொன்ன ஆலமரமாகத் தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டோம்.
 ஆனாலும் அந்த இடத்திற்குச் செல்வதற்கு பாதை இருக்கவில்லை. பாதை எங்கே எனத் தேடியபோதுதான் மலைப்பாறைக்கு உச்சியில் சிறியதாய் ஓர் ஆலமரம் இருப்பதும்
ஓங்கியுயர்ந்த தென்னைமரத்தோடு கீழே கடவுள் சிலைகள் இருப்பதற்கான அடையாளம்
 இருப்பதையும் கண்டோம்.
 கோயிலுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் பழைமையை
 எடுத்துக்காட்டின.
 பாதையை அமைத்துக்கொண்டு செல்வோம் என உறுதிகொண்டு ஆலமரத்தை நோக்கிய எமது நடையை
 ஆரம்பித்தோம்.

 என்ன அதிசம்? ஆலமரத்தின் ஒரு கிளை யானைத் தந்தத்தைப் போலவே காட்சியளிக்கிறது.
 மற்றொரு கிளையும் அவ்வாறுதான். யானையின் கண்களைப் போலவே இயற்கை படைப்பின்
 அடையாளங்கள் விளங்கின.

 பரந்த உலகில் எல்லைகளற்ற அதிசயங்களோடும் அழகோடும் மனித சக்திக்கு
 அப்பாற்பட்டிருக்கும் இயற்கையில் இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறதா என
 வியப்புச் சிந்தனை துளிர்ந்தது.
 அங்கிருந்து சாதாரண தூரத்தில் தான் அந்தக் கோயில் இருந்தது. எனினும்
 முட்செடிகளுக்குள்ளே நடக்கவேண்டிய கட்டாயம்.

 சரி ஆகட்டும் என எண்ணிக்கொண்டு கோயிலை நோக்கி சென்றோம். முற்றுமுழுதாக
 பரந்ததொரு பாறையின் மீதிருக்கிறது கோயில். மிக மிக பழைமையான படிக்கட்டுகள்
 உடைந்த நிலையில் எம்மை வரவேற்றன. பாதணிகளை அகற்றிக்கொண்டு நாம் மேலே சென்றபோது,
 தூரத்தே தெரிந்த மலைகள் அனைத்தும் மிக அருகில் தெரிவது போலிருந்தது.
 மென்மையான காற்று அமைதி கலந்து வீசியது. அது ஆழ்மனதின் மையங்களை
 தொட்டுச்செல்வதாய் ஓர் உணர்வு. கவனிப்பாரன்றி பாழடைந்த நிலைமையில் மிகச்சிறிய
 இலிங்கச் சிலையோடு இன்னும் சில இந்துத் தெய்வச் சிலைகள் இருந்தன.
 யாரோ பற்றவைத்துவிட்டுப்போன ஊதுவர்த்தியும் சில காட்டுப்பூக்களும் வாசனை
 வழங்கிக்கொண்டிருந்தன.
 நாமும் கடவுளை வணங்கிவிட்டு இந்த ஆலயம் பற்றி மேலதிக தகவல்களை யாரிடம் பெறலாம்
 என எண்ணிக்கொண்டிருந்தவேளை தூரத்தே ஒரு பெரியவர் களைப்போடு
 நடந்துவந்துகொண்டிருந்தார்.

 'என்னோட பெயர் தேவராஜ். வயசு 68ஆகிறது. நான் சின்னவயசில இருந்து இங்கதான்
 இருக்கேன். காட்டுப் பக்கத்தில தான் என்னோட வீடு இருக்குது. 1800
 வருஷத்திலிருந்து இந்தக் கோயில் இருக்கிறதா எங்க தாத்தா சொல்லுவாரு.
 நல்ல சக்தியுள்ள கோயிலுங்க. இப்போ யாருமே கவனிக்கிறதில்ல. கங்கொடையில உள்ள
 சின்னப் பிள்ளைங்க இங்க வந்து விளையாடுவாங்க. அந்த ஆல மரத்த பார்த்தீங்களா? அத
 பார்த்தாலே உங்களுக்கு இந்தக் கோயிலோட அதிசயம் விளங்கியிருக்கும்.
 காட்டுக்குள்ள ஆறு ஒன்னு இருக்குது. அதுக்கு மூலிகை ஆறு னு பெயர். சிங்கராஜ
 காட்டுக்குள்ள மூலிகை கலந்து வருது. அதுதான் இந்தக் கோயிலோட தீர்த்தம். இன்னும்
 ஒரு கிலோ மீற்றர் நடந்திங்கன்னா அதையும் பார்த்து குளிச்சிட்டு வரலாம். நோய்
 தீர்க்கக் கூடிய ஆறு அது' .

1 comment:

  1. கொழும்பு
    இலங்கையில் இப்படி ஒரு அதிசயமா? நன்றி.

    ReplyDelete