Thursday, October 27, 2011

மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது : அணுஉலை எதிர்ப்பு குழு தலைவர் பேச்சு


நாகர்கோவில் : நாகர்கோவில் தலைமை போஸ்ட் ஆபீஸ் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி இயக்க அமைப்பாளர் உதயகுமார் தமிழர்களை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது என பேசினார்.

கூடன்குளம் அணு உலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில் தலைமை போஸ்ட் ஆபீஸ் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பாளர் உதயகுமார் பேசும்போது கூறியதாவது: நமது எதிர்கால சந்ததியில் நல்வாழ்விற்காக இங்கு எழுச்சி விழா நடக்கிறது. அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி கடந்த 2 வாரமாக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்யப்பட்டது. தெரு பிரசாரம், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போது ஒருமித்த குரலுடன் இங்கு பல்லாயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.

அரசில் கட்சிகள் பிரியாணி, பணம் கொடுத்து கூட்டம் கூட்டுவது போன்ற கூட்டம் அல்ல இது. என்ன கொடுத்தாலும் கூட்ட முடியாத கூட்டம் இது. சில விஷமிகள் இதற்கு களங்கம் கற்பிக்கின்றனர். இந்த போராட்டம் மீனவர்களின் போராட்டம் என கூறுகின்றனர். இது மீனவர்களின் போராட்டம் அல்ல. அனைத்து சமுதாயத்தினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் உலையை எதிர்க்கும் போராட்டம். சிலர் கிறிஸ்தவர்களின் போராட்டம் என கூறுகின்றனர். இங்கு போராட்டம் நடத்தும் நான் கிறிஸ்தவன் அல்ல. என்னைப்போல் இந்து, முஸ்லீம் மதத்தை சேர்ந்த பலர் இங்கு உள்ளனர். இப்போராட்டம் பச்சை தமிழர்களின் போராட்டம்.

அதன் பின்னர் சொன்னார்கள் இது தி.மு.க.வினர் தூண்டிவிட்ட கூட்டம் என கூறினார்கள். தி.மு.க. ஆட்சி காலத்திலேயே இந்த போராட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.வில் இருந்த எம்.பி. கனிமொழி பார்லிமென்டில் பேசிய பேச்சிற்கு எதிராக நாங்கள்தான் குரல் கொடுத்தோம். இதனால் எங்களுக்கு லைபிரரி சந்தா துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட பல பிரச்னைகள் வந்துள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த போது நான் கூறியது, தமிழக அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. எனவே நீங்கள் தீர்மானத்தை செயல்படுத்த கூறுங்கள். உங்களையும் மதிக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து பின்வாங்குங்கள் என கூறினோம்.

மத்திய அரசு தமிழர்களை எப்போதும் மாற்றாந்தாய் பிள்ளை போல் தான் நடத்துகிறது. ஈழத்தமிழர் பிரச்னையில் ராஜபக்சே அரசுக்கு மத்திய அரசு உதவிகள் செய்தது. தமிழக சட்டசபையில் இலங்கை கடற்படையால் இதுவரை 550 மீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானத்தையும் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு இருந்து என்ன பயன், அந்த அரசு கவிழட்டும்.

கூடன்குளம் அணு உலை பிரச்னை 8 கோடி தமிழர்களின் பிரச்னை. இந்த பிரச்னைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு எதிராக சிலர் பேசி வருகின்றனர். போராட்டத்தில் உள்ள எனக்கு அமெரிக்க அரசு 1000 கோடி ரூபாய் தந்ததாக கூறுகிறார்கள். நான் கேட்கிறேன். போராட்டம் நடத்தும் எனக்கே ஆயிரம் கோடி தந்தார்கள் என்றால், அணு உலை அமைக்க அனுமதித்த பிரதமருக்கு பிரான்ஸ் அரசும், ரஷ்ய அரசும் எத்தனை ஆயிரம் கோடி தந்தார்கள்.

தொண்டு நிறுவனம் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். நான் இப்போது கூறுகிறேன். எந்த ஒரு தொண்டு நிறுவத்திலாவது ஒரு ரூபாய் வாங்கி இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் நிரூபித்தால் இதே திடலில் இத்தனை ஆயிரம் மக்களை கூட்டி அவர்கள் முன்னிலையில் தீ குளிக்க தயாராக இருக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பத்தினரை மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் பயபடமாட்டோம். அணு உலையை மூடாமல் விட மாட்டோம்.

மா.கம்யூ.,வை விரட்ட வேண்டும் : பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சில கட்சிகள் மட்டும் குழப்பத்தில் இருக்கின்றன. இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கப்படும் அணு உலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் கூடங்குளம் அணு உலைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாசாங்குத்தனம் செய்யும் மா.கம்யூ.,வை குமரி மாவட்டத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.

கூடங்குளத்திற்கு பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் எடுக்க மாட்டோம் என கூறுகிறார்கள். ஆனால் பல இடங்களில் ரகசியமாக குழாய் பதித்துள்ளனர். பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் எடுக்காவிட்டால் கூடங்குளம் அணு உலை நடத்த முடியாது என ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார். அணு உலை நன்னீர் உபயோகத்திற்கு பேச்சிப்பாறை தண்ணீர் கண்டிப்பாக எடுக்கப்படும். அதற்காகத்தான் ரகசிய குழாய்கள் இப்போதே பதித்துள்ளனர். நம் நீர் வள ஆதாரத்தை காக்க வேண்டும்.

இந்த போராட்டம் இத்தோடு முடிவடையப்போவதில்லை. நம்மை பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி நாடுகளிடம் விற்கும் கூட்டம் ஆட்சி செய்கிறது. அவர்களை எதிர்த்து நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு குமரி,நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமல்ல வேலூர், திருச்சி, மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் அணு உலை வேண்டாம் என மம்தாபானர்ஜி கூறி வருகிறார். ஜெர்மனி நாடு வரும் 2022ம் ஆண்டிற்குள் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிடுவதாக கூறியுள்ளது. இத்தாலி நாடு 95 சதவீதம் மக்கள் அணு உலை வேண்டாம் என கூறியுள்ளதாக கூறியுள்ளது. அனைத்து நாடுகளும் அணு உலைகளை நிறுத்தும் போது, நம் பிரதமர் அணு உலை பாதுகாப்பானது என கூறுகிறார். 5 அடுக்கு பாடுகாப்பு, 7 அடுக்கு பாதுகாப்பு என கூறுகின்றனர். இத்தனை பாதுகாப்பு இருக்கிறது என கூறுவதாலேயே அதில் ஆபத்து இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பற்றி விளக்கம் கேட்கவில்லை. அதில் இருந்து வெளியாகும் கழிவுகளைப்பற்றிதான் கேட்கிறோம். அந்த கழிவுகளால் பயிர் வளம், கால்நடை வளம், கடல்வளம் பாதிக்கப்படுவதை தடுக்கத்தான் கேட்கிறோம். 30 அல்லது 40 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பின் அந்த உலைகளை பாதுகாக்க வேண்டுமே. பயன்பாடற்ற உலைகளை காங்கிரீட் கலவையால் மூடி பல நூற்றாண்டுகளுக்கு பாதுகாக்க வேண்டும். அதற்கு உண்டாகும் செலவுகளை கணக்கிட்டு பாருங்கள்.

நாடு வளரவேண்டும். அடிக்கும் வெயிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாமே. அதற்கு அதிக செலவாகும் என கூறுகிறார்கள். நீங்கள் அறிவாளிகள் தானே செலவை குறைப்பது எப்படி என்பதை யோசியுங்கள். போராட்டத்தை கைவிட டாக்டர் அப்துல் கலாமை அனுப்புவதாக கூறியுள்ளனர். அப்துல் கலாம் எல்ல கடவுளே வந்து சொன்னாலும் கேட்கமாட்டோம். அப்துல்கலாயம் யார். இந்தியாவிற்காக அணு உலைகள் தயாரித்தவர் அவர். மன்மோகன் சிங் அரசு கவிழும் நிலையில் இருந்த போது முலாயம்சிங் யாதவிடம் பேசி அரசை தூக்கி நிறுத்தியவர் அவர். அவர் பேச்சை கேட்கமாட்டோம். 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்கள். அத்தனைபேரும் அணு கழகத்தில் வேலை செய்தவர்கள் அல்லது அணு கழகத்திடம் இருந்து பணம் பெற்றவர்கள். நாம் நமது சார்பாக குழு அமைப்போம். தொடர்ந்து போராடுவோம்.

தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அது அ.தி.மு.க.வின் தீர்மானம் அல்ல. 8 கோடி மக்களின் தீர்மானம். அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். முதலில் கூடங்குளத்தில் நடக்கும் வேலையை நிறுத்த வேண்டும். அதன்பின் வல்லுநர் குழு பற்றி பேசலாம். நமக்குள் ஜாதி, மதம் கிடையாது. நாம் அனைவரும் தமிழர்கள். நமது போராட்டம் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

thanks:dinamalar 27.10.11

No comments:

Post a Comment