Tuesday, October 25, 2011

மறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.

மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

சிறப்புச் செய்தி

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.




நன்றி:நக்கீரன்


5 comments:

  1. where is the temple located?

    ReplyDelete
  2. இந்த ஸ்தலம் கும்பகோணம் அருகில் அமைந்திருக்கும் ராகு ஸ்தல திரு நாகஸ்வரம் அருகில் உள்ளது.

    ReplyDelete
  3. exact place name (village ) please

    ReplyDelete
  4. திருவிடைமருதூர் அருகே இந்தக் கோவில் இருப்பதாகத் தெரிகிறது.

    ReplyDelete
  5. OM NAMAH SIVAYA.
    From Aduthurai to kumbakonam, get down at "AmmaChathiram" stop which is near a junction. Take the road that leads to railway crossing (about 1.5kms). 50mts from the crossing follow the sign board for the temple. Temple is under renovation. Please help in this effort.
    SIVAYA NAMAH OM.

    ReplyDelete