Thursday, March 11, 2010

இந்துக்கோயில்களுக்கு ஐ.எஸ்.ஓ.:தேவையற்ற முட்டாள்த்தனம்

"இந்து கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று வழங்க, தமிழக அரசு இந்து அறநிலையத்துறை ஏற்பாடுகள் செய்வது, கோவில்களை பாகுபடுத்தும் செயல். ஐ.எஸ்.ஓ., பெற கோவில்கள் வர்த்தக நிறுவனங்களா?' என, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.


தமிழகத்தில் இந்து கோவில்களை, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வகித்து வருகிறது. வருவாய் மிகுந்த, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் என கோவில்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. வருவாய் மிகுந்த கோவில்கள் மற்றும் நடுத்தர வருவாய் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. தற்போது வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்று, கோவில்களுக்கும் ஐ.எஸ்.ஓ., சான்று (சர்வதேச சீர்படுத்துதல்) வழங்க ஏற்பாடு நடக்கிறது.


சிதிலமடையும் கோவில்கள்: தமிழகத்தில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க நூற்றுக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றன. அவற்றை மறுநிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகளை அறநிலையத்துறை எடுக்கவில்லை. கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சீர்கேடுகளை களைவதற்கு பதிலாக, வருவாய் மிகுந்த கோவில்களை அடையாளம் கண்டு, அவற்றிற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற இந்து அறநிலைத்துறை முயன்று வருகிறது. இதற்காக, ஐ.எஸ்.ஓ., குழுவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏப்., 15க்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கிய கோவில்களுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்று வழங்கப்படவுள்ளது. பின், படிப்படியாக அனைத்து முன்னணி கோவில்களும் ஐ.எஸ்.ஓ.,சான்று பெறும். ஐ.எஸ்.ஓ.,வில் சர்வதேச குழுவினர் இடம் பெற்றுள்ளனர். அக்குழு பல மாதங்கள் தங்கியிருந்து கோவில்களை ஆய்வு செய்யும். இதற்கான செலவை அறநிலையத்துறை ஏற்கும். இச்செலவை "சரிகட்ட' பல வழிகளில், பலவிதமாக, பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ., முத்திரை வழங்க கோவில்கள் வியாபார இடமல்ல. தொழிற்சாலைகள் போன்று இங்கு பொருட்கள் உற்பத்தி எதுவும் நடக்கவில்லை.


மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்று சேவைப்பணியும் நடக்கவில்லை. எனவே, பழமையான, புராதன கோவில்களை தரம் பிரித்து அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம். ஐ.எஸ்.ஓ.,விற்காக கோவிலின் பழமையை கூட மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இது பக்தர்கள் மனதை புண்படுத்தும். அரசின் நிர்வாகத்தில் இருக்கிறது என்பதற்காக இந்து கோவில்களை இப்படி பிரிக்கலாமா? அரசிற்கு ஏன் இந்த எண்ணம் வந்தது? "ஐ.எஸ்.ஓ., தரம் பெற்ற கோவில், பெறாத கோவில்'என்று வேறுபடுத்தி பார்த்தா பக்தர்கள் வழிபட போகிறார்கள்? வழிபாட்டு தலங்களில் கூட "ஏழை - பணக்காரன்' என பாகுபாடுபடுத்தும் விதமாக, அரசு எடுத்துள்ள இந்த முடிவு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்து அறநிலைய மதுரை மண்டல இணை ஆணையர் சுதர்சனம் கூறும்போது, ""கோவில்களில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்பதை பக்தர்களுக்கு உத்தரவாதமாக அளிக்கும் வண்ணம், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறப்படவுள்ளது. இதனால், கட்டணம் எதுவும் உயராது. மீனாட்சி அம்மன் கோவிலை அடுத்து படிப்படியாக முக்கிய கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறப்படவுள்ளது,'' என்றார்.


இளங்கோ, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை கமிஷனர்: 400 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற்று விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தரச்சான்று என்ற கருத்துக்கே இடமில்லை.


இந்து அமைப்புகளின் கருத்துக்கள்: * சின்மயா சோமசுந்தரம், விஸ்வ இந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர்: இந்துகோவில்கள் என்பதால் தான் அரசு தலையிடுகிறது. இதுவே பிறமத வழிப்பாட்டு இடங்கள் என்றால் அரசு பரிசீலனை கூட செய்யாது. கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., வழங்குவது, சர்வதேச அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு ஒப்பாகும். கோவில்கள் ஐ.எஸ்.ஓ., ஆக்கப்படுவதால், பன்னாட்டு பணம் வரத்துவங்கும். இதன் மூலம் ஊழல் தான் பெருகும். இதுதொடர்பாக முடிவெடுக்கும் போது, இந்து சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.


*சசிராமன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர், ராஜரத்தினம், மதுரை நகர தலைவர்: கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கு சென்றுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோவில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று வழங்குவதன் மூலம் இந்து சமுதாயத்தை முடங்கச் செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.


*மணிகண்டன், திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலர்: தற்போது ஜாதிய ரீதியாக பிளவுபட்டுள்ள மக்களை, கோவில்களுக்கான தரவரிசை மூலம் மேலும் பிரிவினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


*திருமலை பாலாஜி, திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., தலைவர்: ஐ.எஸ்.ஓ., தரம் பிரிப்பு முறை இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து பிரிவினையை தூண்டும். கோவில்களை வருமானம் ஈட்டக்கூடிய கேந்திரமாக அரசு கருதுகிறது. தரம் பிரிப்பு மூலம் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதா என்பதை விளக்க வேண்டும். பூஜை நடக்காமல் முடங்கி கிடக்கும் கோவில்களை அரசு கண்டு கொள்ளவில்லை.


*லோகன்துரை, தேனி மாவட்ட பா.ஜ., தலைவர்: மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்பது, எல்லா மதத்தினருக்கும் ஒன்று தான். இந்த அரசு மற்றவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு செயல்பட அனுமதிக்கிறது. இந்து கோவில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைப்பது கண்டிக்கத்தக்கது. எல்லா கோவில்களிலும் இறைவன் ஒன்று தான். அவரவர் தகுதிக்கு ஏற்ப வழிபட்டு வருகின்றனர். இவற்றை பாகுபடுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.


*கே.ராமராஜ், தேனி மாவட்ட இந்து முன்னணி செயலர்: இறைவனுக்கும் தரச்சான்று கொடுக்கும் அரசை கண்டிக்கிறோம். கோவில்களுக்கும் ஒரு பொருளைப் போல் ஐ.எஸ்.ஐ., சான்றிதழ் என்பது வேடிக்கையானது.


*பாலமுருகன், தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலர்: இந்து கோவில்கள் எல்லாமே ஒன்றுதான். தரம் பிரிப்பது என்பது இந்துக்களை இழிவுபடுத்தும் செயல்.


* ராமமூர்த்தி, ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி செயலர்: கடவுளை தரம் நிர்ணயம் செய்ய யாருக்கும் தகுதி இல்லை. பக்தியை வியாபாரமாக்கும் போக்கு அரசிடம் அதிகரித்து வருகிறது. தரச்சான்று என்ற பேச்சு எழுந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


*பிரபாகரன், ராமநாதபுரம் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர்: விற்பனைப் பொருட்களைப்போல் கடவுளுக்கும், கோவிலுக்கும் தரச்சான்று வழங்குவது அநியாயம். இதனால் தான், கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.


* சிவசாமி, விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர்: மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல், பல கோவில்கள் உள்ளன. கோவில் வருமானத்தை மட்டுமே பார்க்கும் அறநிலையத்துறை, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ததே இல்லை. அடிப்படை வசதிகள் செய்ய முடியாத அறநிலையத்துறை, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுக்கு எப்படி பரிந்துரை செய்ய முடியும்.
நன்றி:தினமலர் 10.3.2010 நமது ஆன்மீகக்கடலின் கருத்துப்படி,இந்த திமுக அரசு தனது அமைச்சர்களுக்கும்,அமைச்சகங்களுக்கும் ஐ.எஸ்.ஓ.வாங்கட்டும்.அரசின் ஒப்பந்தப்பணிகளில் ஐ.எஸ்.ஓ.9002 ஐ வாங்கட்டும்.அப்புறம் இந்துக்கோயில்களுக்கு வரட்டும்.

No comments:

Post a Comment