Wednesday, March 10, 2010

யோகாவும் தியானமும் உதவும் :மனோதத்துவடாக்டர் ருத்ரன் அவர்களின் வலைப்பூவிலிருந்து

யோகாவும் தியானமும் உதவும்

மனநோய்களுக்கு யோகாவும் தியானமும் உதவும் என்பது இப்போது பரவலாக விளம்பரப்படுத்தி விற்கப்படும் ஒரு பொய்.
நோய் என்றாலே அதற்கு மருந்து அவசியம். மருந்தே வேண்டாம், யோகா செய், 'மெடிடேஷன் பண்ணு" என்று கூறுவது இப்போதெல்லாம் மிகவும் பிரபலம்.

அப்படியே செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், என்ன/எதைச் செய்யப் போகிறார்கள்? நான் என் சக்திக்குப் படித்ததில், 100க்குமேற்பட்ட யோகமுறைகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்களுக்காக மூன்று நூல்கள்- 1 Vignyana bhairava tantra, 2.Sivasutras, 3.SpandaKarika. என்னைப்போல் ஸம்ஸ்க்ருதம் தெரியாமல் ஆங்கிலம் தெரிந்தவர்கள் Jayadev Singh எழுதிய உரைகளைப் படிக்கலாம். "பார் நான் இதையெல்லாம் படித்திருக்கிறேன்" என்று காட்ட அல்ல இந்தப் பட்டியல், இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் இவை குறித்துப்பேசுகிறேன் என்பதற்காகத்தான்.
ஒரு நோய்க்கு ஒரு மருத்துவன் ஒரு மருந்து தருமுன் அதேபோல் உள்ள பல மருந்துகள் அந்தக்கணநேரத்தில் மனச்சல்லடையில் விழுந்து ஒன்று மட்டும் தேர்வாகிறது. யோகா "டீச்சர்ஸ்" இப்படி யோசித்து இத்தனை சாத்தியங்களை எண்ணிப்பார்த்துவிட்டுத்தான் சொல்லித்தருகிறார்களா? ஆம் என்றால் மிக்க மகிழ்ச்சி!

தெருவுக்குதெரு மலிந்து விரைந்து பரவி வரும் "டீச்சிங்" மையங்களில் உள்ள "மாஸ்டர்" பதஞ்சலி பெயரைத் தெரிந்து வைத்திருப்பார், (என்னிடம் கூட பதஞ்ச‌லியின் சிலை ஒன்று இருக்கிறது). படமோ சிலையோ வைத்திருக்கவும் கூடும். வியாக்ரபாதர் பதஞ்ச‌லி உறவு பற்றியும் தெரிந்துவைத்துப் பேசக்கூடும்...பதஞ்ச‌லியின் யோக சூத்திரங்களைப் படித்திருப்பாரா? (புரிந்து கொண்டிருப்பாரா என்பது உபகேள்வி). எனக்கு அந்த ஞானம் கிடையாது, இருப்பதாய் சொல்லிக்கொள்வதும் கிடையாது.இப்போது மூன்று நூல்களைப்பற்றிச்சொன்னேனே அவற்றைப் படித்திருக்கிறேன் புரிந்து கொண்டதில்லை. எனக்குத் தொடர்பில்லாத தொழில்குறித்து மூன்று பெயர்களை நானே சொல்ல முடியும் போது, "மாஸ்டர்" இன்னும் கூடச் சொல்லலாம். பெயர்களை உதிர்க்க படிக்கவேண்டும் என்றில்லை.
"மாஸ்டர்", "டீச்சர்" ஆகியோர்தான் schizophrenia என்பதற்கும் depression என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுவது அதிகம். இரண்டுமே ஒன்று என்று உளறுவதும் அதிகம், இவற்றுக்கு மருந்துகள் வேண்டாம், சில ஆசனங்கள், சில மூச்சுப்பயிற்சிகள் போதும் என்றும் தங்கள் "சென்டர்"களைப் பற்றிச்சொல்லிக்கொள்வதும் அதிகம். "மாஸ்டர்", "டீச்சர்" என்று நான் சொல்வது, இவர்களது "ஃபேஷன்" என்பதால் மட்டுமல்ல, "ஃபேஷன்"னுக்காக இவர்களிடம் செல்பவர்களுக்கு எளிதாக இருக்குமே என்பதற்காக.
மருந்துகள் தேவையில்லை என்பதும் இப்போது பரவி வரும் ஒரு "ஃபேஷன்"தான்.
ஆனால், மருந்துகள் இன்றைய இவர்களுக்கு ஒவ்வாத 'அலோபதி' மருந்துகள் மட்டுமா? சரகரும் ஸுஷ்ருதரும் ரிஷிகள்தானே, யோகத்யான முறைகளை முற்றும் தெரிந்தவர்கள் தானே அவர்கள் ஏன் மருந்துகளைத் தந்தார்கள்?
அகத்தியர் முனிவர் தானே? பரமசிவனோடு நேரடியாய் தொடர்பு வைத்திருந்தவராமே, அவர் எதற்கு யோகா செய், தியானம் செய் போதும் என்று விட்டுவிடவில்லை? பல மருத்துவக்குறிப்புகளுக்கு ஆதியாசானாக அவரை இன்னும் சிலர் சொல்வதில்லையா? நம் சித்தர்கள்? மருந்துகள் பற்றி எழுதவில்லையா?

அவர்கள் மேதைகள், எதற்கு எது அவசியம் என்று தெரிந்தவர்கள், இன்றைய அரைவேக்காட்டு வியாபாரிகளைப்போல், சகலரோகநிவாரணி விற்காதவர்கள்.
இன்னும் பேசலாம், பின்னால்.
நன்றி:www.rudhrantamil.blogspot.com

No comments:

Post a Comment