அஷ்ட லிங்கங்களின் வரலாறு
திருவண்ணாமலையில் கிழக்குக் கோபுரத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பது இந்திரலிங்கம் ஆகும்.இதுவே கிரிவலப்பாதையில் அமைந்துள்ள முதல் லிங்கம்.
நவக்கிரகங்கள்,தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக்கொள்ள திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.அப்படி அங்கப்பிரதட்சணம் செய்துவரும்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் அவரது உடல் தங்க நிறத்தில் மின்னத் தொடங்கியது.
அண்ணாமலையாரின் திரு அருள் என அறிந்த இந்திரன், தனது பதவி நிலைக்க அண்ணாமலைச்சிவனிடம் வேண்டினார்.அப்போது சுயம்பு லிங்கமாக இந்திரனுக்குக் காட்சியளித்தார் அண்ணாமலையார்.அதுவே இந்திரலிங்கமாக இருக்கிறது.
இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும்;செல்வ வளம் பெருகும்.பதவி உயர்வு,பணி மாற்றம்,பணிப்பாதுகாப்பு அனைத்தையும் தருவது இந்திர லிங்க வழிபாடு ஆகும்.இந்திரலிங்கத்தைச் சேர்ந்த இந்திரதீர்த்தம் அய்யங்குளம் என்று இருக்கிறது.
கிரிவலப்பாதையில் இரண்டாவதாக இருப்பது அக்னி லிங்கம்.(பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமே திரு அண்ணாமலை என்பதை இங்கு நினைவில் கொள்ளுங்கள்)
வெகுகாலமாக மூன்று ருத்ர மூர்த்திகள் கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.அவர்களின் திருமேனிகள் இதனால் ஜோதியாக மாறியது.ஒரு செவ்வாய்க்கிழமையன்று அவர்கள் கிரிவலம் வரும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கும்போது,பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர்.வியந்து அவர்கள் வணங்கி எழுந்த இடமே சுயம்பு லிங்கமே தற்போதைய அக்னி லிங்கம்.
அக்னி லிங்கத்தை வழிபட, நோய்,பயம் நீங்கும்.எதிர்கள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.கற்பு,சத்தியம்,தர்மம் இவற்றைக் காக்க வல்லது.அக்னி லிங்கத்தின் கீழ்த்திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது.எதிரில் இருப்பது அக்னி மண்டபம்.அக்னி லிங்கத்தின் அருகில் அமைக்கப்பட்டவையே ரமணமகரிஷியின் ஆசிரமம் மற்றும் சேஷாத்ரி மகரிஷியின் ஆசிரமம்.
கிரிவலப்பாதையில் மூன்றாவதாக இருப்பது எமலிங்கம்.எமதர்மன் திரு அண்ணாமலையை அங்கப்பிரதட்சணம் செய்த போது அவரது திருப்பாதம் பட்ட அடிச்சுவடுகல் எல்லாம் தாமரைப்பூக்களாக மாறின.அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது.அதுவே எமலிங்கம்.பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுப்பதற்கு எமதூதர்கள் வானுலகிலிருந்து பூமிக்கு இங்கு வந்து எமலிங்கத்தை வழிபட்டபின்னரே, உரிய பகுதிக்குப் பயணிக்கின்றனர்.ஆக,எமலோகத்திற்கும்,பூமிக்குமான போக்குவரத்து மையமாக எமலிங்கம் இருக்கிறது.ஆக,இறந்த ஆத்மாக்களை இதே பாதை வழியாகத் தான் மேல் உலகத்திற்கு அழைத்துச் செல்வார்களோ எம தூதர்கள்?
எமலிங்கத்தை வழிபட்டால்,எம பயம் நீங்கும்.நீதி நெறி நிலைக்கும்.பொருள் வளம் பெருகும்.எமலிங்கத்தின் தென் திசையில் எமதீர்த்தம் உள்ளது.
கிரிவலப்பாதையில் நான்காவதாக அமைந்திருப்பது நிருதி லிங்கம்.நிருதி என்பது மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப்பெயராகும்.அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்துகொண்டிருக்கும்போது இந்த இடத்தில் குழந்தையின் ஒலியும் பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது.நிருதீஸ்வரர் அங்கு நின்று அண்ணாமலையை வணங்கினார்.அப்போது அவர் எதிரே தோன்றியவரே நிருதி லிங்கம்.பார்வதிக்கு சிவபெருமான் காட்சி தந்தது இங்கேதான்.இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்.
நிருதி லிங்கத்தை வழிபட்டால்,தோஷங்கள் நீங்கும்.மகப்பேறு கிடைக்கும்.ஜன்ம சாபம் நீங்கும்.புகழ் வந்து நிலைக்கும்.இதன் அருகில் நிருதி தீர்த்தம் இருக்கிறது.
கிரிவலப்பாதையில் ஐந்தாவதாக அமைந்திருப்பது வருண லிங்கமாகும்.அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர் மழைக்கு அதிதேவதையாகிய வருணன்.வருணபகவான் கிரிவலம் வந்தார்.எப்படி முட்டுக்கால் போட்டும்,ஒற்றைக்காலால் நொண்டி நொண்டியும் கிரிவலம் வந்தார்.அப்படி கிரிவலம் வரும்போது ஓரிடத்தில் வானத்தை தொடுமளவிற்கு நீரூற்று ஒன்று எழுந்தது.அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட,அங்கு வருண லிங்கம் தோன்றியது.
வருண லிங்கத்தை வழிபட்டால்,சிறுநீரக நோய்கள்,சர்க்கரை நோய்,நீர் சார்ந்த சகல நோய்களும்,வேறு எல்லாவிதமான கொடூர நோய்களும் தீரும்.உடல் நலம் செழிக்கும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வருண லிங்கத்தின் அருகிலேயே வருண தீர்த்தம் இருக்கிறது. நிருதி லிங்கத்திற்கும் வருண லிங்கத்திற்கும் இடையில் சூரிய லிங்கம் இருக்கிறது.இந்த சூரிய லிங்கம் அஷ்ட லிங்கத்தின் வரிசையில் சேராது.
கிரிவலப்பாதையில் ஆறாவதாக அமைந்திருப்பது வாயுலிங்கம்.வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச்செய்தவாறு கிரிவலம் வந்தார்.அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும் ஓரிடத்தில் நறுமணம் வீசியது.அங்கே பஞ்சகிருத்திகாச்செடியின் பூக்கள் பூத்த நேரத்தில் சுயம்புவாக வாயுலிங்கம் உருவானது.இதன் அருகில் வாயு தீர்த்தம் இருக்கிறது.
வாயு லிங்கத்தை வழிபட்டால்,சுவாசம் சார்ந்த நோய்கள் தீரும்.இருதய நோய்கள் குணமாகும்.பெண்களுக்கு நலமும் மனநிம்மதியும் உண்டாகும்.கண்திருஷ்டி நீங்கும்.
கிரிவலப் பாதையில் ஏழாவதாக அமைந்திருப்பது குபேர லிங்கமாகும்.குபேரபகவான் கண் மூடி தியானித்து,தலை மீது கரம் குவித்தவாறு, குதிகாலால் பல யுகங்கள் கிரிவலம் வந்தார்.அப்படி வரும்போது,பல யுகங்கள் கழிந்த பிறகு ஒருநாள் திருமாலும் மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்ரபாணிகோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார்.அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கமாகும்.
முறையற்ற வழியில் பணம் சேர்த்தவர்களுக்கான பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கமாகும்.குபேர சம்பத்து தரும் இடம் இது.இதன் அருகில் குபேர தீர்த்தம் சூட்சுமமாக அமைந்திருக்கிறது.
கிரிவலத்தில் நிறைவாக இருப்பவர் ஈசான்ய லிங்கம்.இவர் எட்டாவதாக அமைந்திருக்கிறார்.அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்த போது அண்ணாமலையின் தரிசனம் இங்குதான் கிட்டியது.
பீனா நீச ருத்ரர் கண்களை மூடியவாறு கிரிவலம் வந்தார்.அவருக்காக இங்கு உருவான லிங்கமே ஈசானய லிங்கம் ஆகும்.
ஏழரைச்சனி (11.12.2011 வரை கன்னி ராசிக்காரர்களுக்கும்),அஷ்டமச்சனி (11.12.2011 வரை கும்ப ராசிக்காரர்களுக்கும்),பாதச்சனி (11.12.2011 வரை சிம்ம ராசிக்காரர்களுக்கும்), விரையச்சனி (11.12.2011 வரை துலாம் ராசிக்காரர்களுக்கும்), மற்ற சனியின் தொல்லையிலிருந்து அபயமளிக்கும் சந்நிதி ஈசான்ய லிங்கம்.தியானம் கைகூடும் இடம் இது.தவம் பலிக்கும்.சிவனருள் கிடைக்குமிடம்.இதனருகில் ஈசான்ய தீர்த்தம் உள்ளது.
நாம் இந்த பூமியில் யாருக்குமே தெரியாமல் ஒரு பாவம் செய்தாலும்,புண்ணியம் செய்தாலும் அவை அனைத்தையும் பதிந்து எமனிடம் ஒப்படைப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான்.இவர்களே இந்த அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியை முழுக்க கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே,நியாயமாக மட்டும் ஆசைப்படுவோம்.நிம்மதியாக யாருக்கும் எந்த விதமான கெடுதியும் செய்யாமல் பேராசைப்படாமல் வாழ்வோம்.
No comments:
Post a Comment