புதுடில்லி : "இந்து மத வரலாற்றைப் புதிய நோக்கில் விவரிப்பதாகக் கூறி கொச்சைப்படுத்தும் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டும்' என்று போர்க்கொடி எழுந்துள்ளது; எம்.பி., ஒருவர் பார்லிமென்டில் கோரிக்கை விடுத்துள்ளார்; தடைசெய்யக் கோரி ஆன்-லைனில் பலத்த பிரசாரமும் நடந்து வருகிறது.
பிரபல ஆங்கிலப் பதிப்பகமான "பெங்குயின்', சமீபத்தில், வெண்டி டோனிஜெர் என்ற பெண்மணி எழுதிய "தி ஹிண்டுஸ்: ஆன் அல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இது இந்து மத வரலாற்றை "வித்தியாசமான' கோ ணத்தில் அலசிப் பார்ப்பதாகக் கூறுகிறது. பார்லிமென்டில் கேள்வி நேரத்தின் போது பிஜு ஜனதா தளக் கட்சி எம்.பி., பர்த்ருஹரி மத்தாப்,"பெங்குயின் பதிப்பகம் இதை வாபஸ் பெற வேண்டும். இதில், இந்துமதம் பற்றி மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் தேவையில்லாத பதட்டத்தைத்தான் இது உருவாக்கும். இதுபோன்ற புத்தகங்கள் உருவாவதையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதையும் தடை செய்ய வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார். "இப்புத்தகம் முழுவதும் வக்கிரமான சிந்தனைதான் கொட்டிக் கிடக்கிறது. இந்து மதக் கடவுள்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் புனித நூலான வேதங்கள் இதில் திரிவுப்படுத்தப்பட்டிருக்கின்றன. பல விஷயங்கள் ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அறிவியல் உலகத்தில் ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட சிக்மண்ட் பிராய்டு என்பவரின் சிந்தனையின் அடிப்படையில் இந்துமதத்தை நூலாசிரியர் ஆய்வு செய்து எழுதியுள்ளார். அவர், நடைமுறையில் இந்துமதப் பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், அவை கூறும் தத்துவங்கள் போன்றவற்றைக் கணக்கில் எடுக்காமல் மனம்போன போக்கில் வரலாற்றைத் திரித்து எழுதியுள்ளார். வால்மீகி ராமாயணத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு வேண்டும் என்றே தவறான அர்த்தங்களை நூலாசிரியர் கொடுத்துள்ளார். மொத்தத்தில் நூல் முழுவதும் அபத்தக் களஞ்சியமாகவும், நூலாசிரியரின் மன வக்கிரத்தை வெளிப்படுத்துவதாகவும்தான் உள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு அத்தியாயங்களும், இந்துமதத்தை நன்றாக அறிந்தவருக்கு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். இந்துக்கள் மற்றும் இந்தியா பற்றிய தவறான அபிப்ராயத்தைப் புதியவர்களுக்கு ஏற்படுத்தும். மாணவர்கள் மத்தியில் இந்தியா மற்றும் இந்து வரலாறு குறித்து மோசமான கருத்தைத்தான் இது உருவாக்கும். எனவே, இதைத் தடைசெய்ய வேண்டும். பதிப்பகம் இப்புத்தகத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' இவ்வாறு இந்தப் புத்தகத்தை எதிர்த்து ஆன்-லைனில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment