Friday, August 7, 2015

தீர்த்தங்களுக்கு சக்தி உண்டா ? எல்லாம் தண்ணீர் தானே ?


 சதுரகிரி, மகேந்திரகிரி, கொள்ளிமலை, அத்திரிமலை போன்ற மலைகளில் பயணம் செய்யும் போது ஒவ்வொரு இடங்களிலும் ஓடும் நீரை ஒவ்வொரு தீர்த்தங்கள் என்று மக்கள் பயன்படுத்தி மகிழ்வதைப் பார்த்திருக்கிறேன். சில தீர்த்தங்களுக்குப் புராணக் கதைகள் உண்டு. வியாதிகளைப் போக்கியதாகவும், பாவங்களைப் போக்கியதாகவும், ஞானம் கொடுப்பதாகவும் பலவாறு புராணங்கள் சொல்லப்பட்டிருக்கும். எனது நண்பர் ஒருவர் சிறு வயதில் சதுரகிரியில் வாழ்ந்த ஒரு வைத்தியருக்கு உதவியாளராக இருந்து, வைத்தியம் கற்றுக் கொண்டார். அந்த வைத்தியரின் மறைவுக்குப் பிறகு ஊருக்கு வந்தவருக்கு திருமணம் செய்து வைத்து விட ஏராளமான குழந்தைகளைப் பெற்று பெரிய குடும்பி ஆகி விட்டார். அவர் குடும்பஸ்தனான காலத்தில் வைத்தியம் அவருக்கு போதிய வருமானத்தை தரவில்லை. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் படித்த வைத்தியர்களுக்கு இருக்கும் வரவேற்பு, மற்றும் வருமானம் இவருக்கு போதவில்லை. பார்த்தார் மனிதர், இப்போது நெல்லையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு சமயம் அவர் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்த போது, அவருடைய மருத்துவ, ஆன்மீக அறிவைக் கண்டு வியந்து போனேன். அன்றிலிருந்து நெருங்கிய நண்பராகிவிட்டார். உயிர் பிழைக்காது என்று கைவிடப்பட்டவர்களைக் கூடகாப்பாற்றியிருக்கிறார். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர் வைத்தியத் தொழிலை முழுமையாகச் செய்ய முடியவில்லை. அவர் சொல்வது என்ன வென்றால் மலைகளில் பாறை இடுக்குகளில், பள்ளங்களில் தேங்கி பிறகு சிறிது சிறிதாக நிரம்பி வரக்கூடிய தண்ணீர் அந்த பாறைகளில் உள்ள தனிமங்களின் குணத்தைப் பெற்றுவிடும். அது ஓடி வரக்கூடிய பாறைகளில் உள்ள தனிமங்களையும் கரைத்து எடுத்துக் கொள்வதால் அதில் தினமும் குளிப்பதாலும் அல்லது குடிப்பதாலும் அந்த தனிமங்களின் சக்தியினால் வியாதிகள் குணமாகும். சில இடங்களில் சில குறிப்பிட்ட மரங்களின் வேர்கள் உள்ள பள்ளங்களில் தேங்கி வரும் தண்ணீரில் அந்த வேரில் உள்ள மருத்துவ குணம் இருப்பதாலும் சில குறிப்பிட்ட வியாதிகள் நீங்கும். ஆனால் ஒரு நாள் குடிப்பதாலோ, குளிப்பதாலோ அது நிகழாது. குறைந்தது ஒரு மண்டலமாவது பயன்படுத்தினால் வியாதியின் தீவிரத்தைப் பொறுத்து குணமாகும். ஆனால் எந்தெந்த நீரைக் குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
எல்லா நீரையும் அப்படியே உபயோகிக்கக் கூடாது என்றார். காடுகளில் உதகநீர் என்று ஒன்று இருக்குமாம் அதைக் குடித்தால் உள் உறுப்புகள் கடினத் தன்மை அடைந்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றார்.
அதாவது மழை நீரைக் குடித்தால் குளிர்ச்சி, நல்லறிவு, சுக்கில சுரோணித உற்பத்தி இவையாவும் ஏற்படும்,
ஆலங்கட்டி மழை நீரைக் குடித்தால் சிலேஷம்ப் பிரமேகப் பெரும்பாடு, கண்களுக்கு புகைச்சல், கைகால் எரிதல், விக்கல், மயக்கம் இவைகள் நீங்கும். குளிர்ச்சி உண்டாகும்.
பனிநீரை சூரியன் உதிக்கும் போது அருந்தினால் சொறி, சிரங்கு, கிரந்தி, குஷ்டம், தாபம், காசம்,கிராணி, தனிவாதம், திரிதோஷம், தேகவறட்சி, நீரழிவு இவையெல்லாம் அடியோடு நீங்கும்.
ஆற்றுநீரைக் குடித்தால் வாதம், பித்தம், கப தோஷம், தாகம இவையெல்லாம் நீங்கும். சுக்கில விருத்தி உண்டாகும்.
குளத்துநீரைக் குடித்தால் வாதநோயை அதிகரிக்கும், மதுப் பிரமேகசலம், சீதளம் போன்ற குற்றங்கள் உண்டாகும்.
ஏரி, சுனைநீரைக் குடித்தால் வாயுவை உற்பத்தி செய்யும். வாத, பித்த தோஷங்களை உண்டாக்கும். ஒருநாள் எடுத்து வைத்திருந்து மறுநாள் அருந்தினால் உடலில் அதிக உஷணத்தை உண்டாக்கும்.
ஓடைநீரை அருந்தி வர தாகம் உண்டாகும், புஜபலம் பெருகும்.
கிணற்றுநீர் தாகம், உஷணம், அழற்சி, சூலை, சரீர வலி, இடுப்பு வலி, மயக்கம், வீக்கம்,பித்தம், போன்றவற்றை போக்கும்.
சுனைநீர் இருமலோடு கூடிய ஜுரம், வாதம், கபவாதம், பயித்தியம் போன்றவற்றை உண்டாக்கும்.
ஊற்றுநீர் மிகுந்த தாகம், அதிகப் பித்தம் போன்றவற்றை உடனே செய்யும்.
பாறை நீர் அதிக குளிர்ச்சி, வாதம், ஜுரம் உண்டாக்கும்.
அருவிநீர் அருந்த ஜலப் பிரமேகம் விலகும், பித்த ரோகம் விலகும், சிலேஷ்மத்தை உண்டாக்கும், தேகபலம் உண்டாகும்.
இவ்வாறாக பலவிதமான நீருக்கு பலவிதமான வியாதியைப் போக்கவோ அல்லது உண்டாக்கவோ கூடிய தன்மைகள் உண்டு என்று விளக்கினார். எனவே மலைகளில் யாத்திரை செய்பவர்கள் நீரைக் கொண்டு செல்வது நல்லது. அது முடியாத பட்சத்தில் காய்ச்சி வடிகட்டியாவது குடிக்கலாம்.

No comments:

Post a Comment