Sunday, August 23, 2015

புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....



புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்-மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சி-யாகவே ‘தமிழ்ப் பதிப்புலகம் 1800_2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்ட-துடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தக-மாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.
புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.
வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்-களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள்/பதிப்பாசிரியர்-களுக்குச் சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்-தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.
புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்-திற்கு இணையாக வெகுசனத் தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன.
தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்-களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதி-லுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் பதிப்புலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்ட-தாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடர-வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.

No comments:

Post a Comment