Tuesday, February 28, 2012

ஜனநாயக கோவிலில் புளூ பிலிம் பார்க்கும் அரசியல்வாதிகள்: கெஜ்ரிவால்


புதுடில்லி : "" பார்லிமென்ட்டும், சட்டசபையும், ஜனநாயக அமைப்பின் கோவிலைப் போன்றவை. ஆனால், அரசியல்வாதிகள், இந்தக் கோவிலுக்குள் அமர்ந்து கொண்டு ஆபாசப் படம் பார்க்கின்றனர்' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பார்லிமென்ட்டுக்கு எதிராகவும், எம்.பி.,க்களுக்கு எதிராகவும், கருத்து தெரிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் நேற்று கூறுகையில், " பார்லிமென்ட் நடைமுறை மீது நம்பிக்கை இல்லாவிட்டால், பின் எந்த வகையான நடைமுறை மீது, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை விளக்க வேண்டும். பார்லிமென்ட் சரியில்லை என்றால், பின் எது சரி? சர்வாதிகாரா ஆட்சியா? ராணுவ ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? எதைத் தான் ஹசாரே குழுவினர் நம்புவர்' என்றார்.

வழக்கு உள்ள எம்.பி.,க்கள்
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலை தளத்தில் கூறியுள்ளதாவது: எம்.பி.,க்களையும், பார்லிமென்டையும், நான் விமர்சித்ததாக சில அரசியல் தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? கட்சித் தலைமை என்ற பெயரில் சர்வாதிகாரம் நடக்கும் சூழலுக்கு, இந்தியா தள்ளப்பட்டுள்ளது.தற்போதைய பார்லிமென்டில் உள்ள எம்.பி.,பிக்களில் 15 பேர் மீது, கொலைக்குற்ற வழக்கு உள்ளது. 23 பேர் மீது, கொலை முயற்சி வழக்கு உள்ளது. 11 பேருக்கு எதிராக, மோசடி வழக்கு உள்ளது. 13 பேர் மீது, கடத்தல் வழக்கு உள்ளது. உ.பி., சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்களில், 5 பேர் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள். இதுபோன்ற சூழ்நிலையில், ஊழல் இல்லாத இந்தியாவை எப்படி உருவாக்க முடியும்.

ஆபாச படம்
பார்லிமென்டும், சட்டசபையும் ஜனநாயக அமைப்பின் கோவிலைப் போன்றவை. அரசியல்வாதிகள் இந்தக் கோவிலுக்குள் அமர்ந்து கொண்டு, ஆபாசப்படம் பார்க்கின்றனர். மசோதாக்களை கிழித்து எறிகின்றனர். நாற்காலிகளைத் தூக்கி வீசுகின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பார்லிமென்ட் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என, கேள்வி எழுப்புகின்றனர்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

thanks:dinamalar 28.2.12

1 comment:

  1. நண்பரே சித்தர்கள் ஆட்சி இந்த் பூமியில் வரும் வரை இப்படித்தான் இருக்கும் .ஆனால் விரைவில் சித்தர்கள் ஆட்சி வரும்

    ReplyDelete