Monday, February 13, 2012

ஒன்னுமே புரியல உலகத்திலே: புலம்புகிறது சீனா


பீஜிங்: ஆசிய பசிபிக் நாடுகளில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மெல்ல மெல்ல செலுத்த முற்பட்டு வரும் வேளையில், தனது நட்பு நாடுகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை என சீனா புலம்பியுள்ளது.

சீனாவின் வெளியுறவு மற்றும் நட்பு நாடுகள் குறித்த அறிக்கை ஒன்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: தற்போது அமெரிக்கா ஆசிய பசிபிக் நாடுகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடனான அதன் இணக்கம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், சீனாவின் நட்பு நாடுகளாக கருதப்பட்டு வரும் வடகொரியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம், மேற்கத்திய நாடுகளின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாக கருத வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவைப் பொருத்தவரையில், சீனா அந்நாட்டிற்கு பல மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. எனினும் வடகொரியா எக்காலத்திலும் சீனாவை ஒரு நட்பு நாடாக பார்த்ததேயில்லை. அதன் நோக்கம் தற்போது அமெரிக்காவுடன் பலமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதிலேயே உள்ளது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவுடன் ஒப்பிடுகையில், எந்த ஒரு பெரிய நாடும் சீனா அளவிற்கு பிற நாடுகளுக்கு செலவழித்ததில்லை. அதே நேரம் சீனா போன்று குறைவான பலனையும் பெற்றதில்லை. வடகொரியாவின் புதிய தலைவராக கிம் ஜாங் உன் பதவியேற்றுக்கொண்டுள்ள நிலையில், எந்த அளவிற்கு வடகொரியா சீனாவை மரியாதையுடன் பார்க்கிறது என்பது இதுவரை புலப்படவில்லை.

வெளியுறவு விவகாரத்தைப் பொறுத்தவரையில், சீனாவுக்கு மிகப்பெரிய வியப்பு மியான்மர் தான். மியான்மர் நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் பைப்லைன் போன்ற பணிகளுக்கு இதுவரை சீனா ஏராளமான அளவில் முதலீடு செய்துள்ளது. அப்படியிருக்கையில், தற்போது மியான்மர் நாடும் தனது நிலையை மாற்றிக்கொண்டு அமெரிக்காவின் நட்பு வளையத்திற்குள் வரவே முயற்சி செய்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆங்சாங் சுகி விடுதலை செய்யப்பட்டது, மிஸ்டோன் புனல் மின் நிலைய பணிகளுக்கான உதவிகளை சீனா அளிப்பதை நிறுத்தியது உள்ளிட்ட விஷயங்களை இதற்கு உதாரணமாக அந்த அறிக்கை காட்டுகிறது. இது தொடருமானால், மியான்மரும் மேற்கத்திய நாடுகளின் கரங்களில் சிக்கி விடும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், அது சீனாவின் நட்பு நாடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அதே வேளையில், இந்த ஒரு விஷயமே, அமெரிக்கா, பாகிஸ்தான் மீது தன் கவனத்தை செலுத்த ஒரு மிக முக்கிய புள்ளியாக உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் எல்லையில் நடந்த வான்வெளி தாக்குதலில் சில பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் யார் பாகிஸ்தானின் நண்பன் என்பதை பாகிஸ்தானுக்கு புரிய வைக்கும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு ஆசிய நாடும், சீனாவின் கலாச்சாரத்தை மதிப்பதுமில்லை. சீனாவின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் இல்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் பட்சத்தில், அந்நாட்டின் மீதான ஈர்ப்பு அனைத்து நாடுகளுக்கும் குறைந்து விடும். அமெரிக்கா ஒருபோதும் ஆசியாவை விட்டு விடப்போவதில்லை. எனவே அமெரிக்காவும், சீனாவும் இப்பிராந்தியத்தில் அமைதியாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர் 13.2.12                                                                                                                       ஆன்மீகக்கடலின் கருத்து: ஏம்பா சீனா, 400 வருடமாக அமெரிக்கா வல்லரசு நாடாக இருக்குது.ஆயுத அரசியல் மூலமாகவும்.பல நாடுகளின் உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்தும் தனது வல்லரசுங்கற கெத்தை நிலைநிறுத்திட எவ்வளவு பாடு பட்டிருக்கும்.நீ நேத்துதான்(2000 லிருந்துதான்) வல்லரசுங்கற நிலையையே எட்டியிருக்கே.அதுக்குள்ளே நீ எல்லோரையும் பகைச்சுக்கறே.உனக்குத்தான் எல்லாமே தெரியும்ங்கற மாதிரி பீலா விட்டுக்கிட்டு இருக்கிறே.முன் யோசனையே இல்லாம சுண்டைக்காய் நாடுகளிடம் பல கோடியுவான்களை வாரி இறைச்சுகிட்டு வர்றே.உலக அரசியலில் நீ வல்லரசுங்கற பெயர் வாங்குனா மட்டும் பத்தாது;இந்தியாவிடமிருந்து நீ கத்துக்க வேண்டியது நிறைய்ய்ய்ய்ய்ய இருக்குது.இல்லேன்னா நீ சீக்கிரமே ஓட்டாண்டிதான்.

No comments:

Post a Comment