அண்ணாமலை. நெருப்பு மலை, அக்னி மலை, அருணாசலம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இம்மலை, ’நினைக்க முக்தி தரும் மலை’ என்று போற்றப்படுகிறது. இம்மலையில் பல்வேறு அதிசயங்களும் உள்ளன.
இது பற்றி பகவான் ரமணர் அவ்வப்போது தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். பக்தர்கள் சிலருக்கும் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
‘இங்குள்ள மலையில் கௌரீ வனம் என்ற ஒரு வனம் உண்டு. பார்வதி தேவி தவம் செய்த அப்பகுதிக்குச் செல்பவர் தம் வசமிழந்து விடுவர். அங்கே செல்பவர்கள் தங்கள் வந்த பாதையையும், நோக்கத்தையும் மறந்து, வந்த வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்க நேரிடும்’ என்கிறது தல புராணம். ஹம்ப்ரீஸ் போன்ற ரமண பக்தர்கள் சிலருக்கு இவ்வகை அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. வழி தெரியாமல் சுற்றித் திரிந்து களைத்து, இறுதியில் ஒரு விறகு வெட்டியின் மூலம் சரியான பாதையைக் கண்டு அவர்கள் ஆசிரமம் திரும்பியிருக்கிறார்கள்.
”வேண்டியதை வேண்டியவாறு தருகின்ற ஒரு வகுள விருக்ஷம் அண்ணாமலையின் நடுவே உள்ளது. இதில் வாமதேவர் எப்போதும் மோன நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறார்” என்கிறது தல புராணம்.
அண்ணாமலையின் வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அங்கே அருணாசல யோகியாக, அருணகிரிச் சித்தராக ஸ்ரீ அண்ணாமலையாரே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இறைவனை நோக்கி இறைவனே தவம் செய்யும் ஒரே தலம் உலகில் அண்ணாமலை ஒன்று தான். பகவான் ரமணர் இந்த மரத்தைக் காண ஒருமுறை சென்று குளவி கொட்டியதால் அல்லலுற்றுத் திரும்பி விட்டார். யாராலும் காண முடியாத ஓரிடத்தில் இந்த விருட்சம் அமைந்திருக்கிறதாம். அங்கே பல சித்தாதி யோகியர்கள், முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பர் என்கிறார் ரமணர்.
ஆமைப் பாறை, வழுக்குப் பாறை, மயிலாடும் பாறை போன்றவை காணத் தகுந்தவை. மலையின் மேல் பல ரகசிய குகைகள் உள்ளன. அவற்றில் அரூப நிலையில் சித்தர்கள் தவமியற்றி வருகின்றனர். பிராப்தம் உள்ளவர்களுக்கு அவர்களது காட்சி பல்வேறு வடிவில் கிடைத்திருக்கிறது.
இது தவிர இன்னும் பல அற்புதங்களைத் தன்னகத்தே கொண்ட அதிசய மலை அண்ணாமலை. அங்கு எடுத்த படங்கள் சில கீழே…
ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!
No comments:
Post a Comment