Thursday, January 12, 2012

தடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்


இந்திய கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜன., 12ம் தேதியை இந்திய அரசு 1984ல் தேசிய இளைஞர் தினமாக அங்கீகரித்தது. இத்தினத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஊர்வலம், பேச்சுப்போட்டி, ஒப்புவித்தல் , இசை, கருத்தரங்குகள், யோகா, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

150வது பிறந்த தினம்: விவகானந்தர் 1863 ஜன., 12ம் தேதி கோல்கட்டாவில் பிறந்தார். இன்று இவரது 150வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்மசமாஜத்தில் உறுப்பினரானார். தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை சீடரானார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என அழைத்து அவர் பேசியது, இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. இதனால் உலகம் போற்றும் உன்னத ஆன்மீக நெறியாளராக விவேகானந்தர் கருதப்படுகிறார்.

விவேகானந்தரின் பார்வையில்: "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். மேலும் "நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எதிர்பார்ப்பு: இளைஞர்கள் சிலர் மது, புகையிலை மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு அரசு தகுந்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று, அர்ப்பணிப்பு, விளையாட்டு, கல்வி போன்றவற்றில் திறமையானவர்களாக உள்ளனர். திசைகாட்டியாக இருக்க வேண்டிய இளைஞர்கள், திசை மாறாமல் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என, இத்தினத்தில் உறுதிமொழி எடுப்போம்.


No comments:

Post a Comment