Wednesday, January 11, 2012

அந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8.1.12

அவர் ஒரு காஷ்மீர் பண்டிட்... 37 ஆண்டுகளுக்கு முன், புலம் பெயர்ந்து, இங்கிலாந்து நாட்டில் செட்டில் ஆனவர். அங்கேயே, வெள்ளைக்கார பெண்மணி ஒருவரை திருமணம் செய்து, லண்டன் மாநகரில் வசித்து வருகிறார். 25 வயதில் ஒரு மகன் இருக்கிறான் அவருக்கு!
லண்டனில் டாக்டர் தொழில் செய்யும் 
நண்பர் ஒருவர் மூலம், இந்த அன்பருடைய தொடர்பு கிடைத்தது. இந்தியா வரும் போதெல்லாம் என்னை சந்திப்பார். அவ்வப்போது, தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்வார்.
இம்முறை, நான் லண்டன் போகும் தகவலை, இ-மெயில் மூலம் முன்பே அவருக்குத் தெரிவித்து இருந்தேன். கண்டிப்பாக தன் வீட்டுக்கு விருந்து உண்ண வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். "சரி' எனக் கூறி இருந்தேன்.
லண்டன் ஹியூஸ்டன் ரயில் நிலையம் அருகில் இருந்த பெர்னாட்ஷா பிளாசா என்ற ஓட்டலில் தங்கி இருந்தோம் நானும், லென்ஸ் மாமாவும்! அங்கிருந்து இந்த அன்பருக்கு போன் போட்டேன்... தம் லேட்டஸ்ட் பென்ஸ் காரில் வந்து இறங்கினார்.
லென்ஸ் மாமாவுக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறியதால், நான் மட்டும் அவருடன், அவர் இல்லத்திற்குச் சென்றேன்... வீட்டில் நுழைந்ததுமே, காஷ்மீரத்து உணவு வகை
களின் வாசனையும், பாசுமதி அரிசி வெந்து கொண்டிருக்கும் வாசனையும் மூக்கைத் துளைத்தது!
அவரது மனைவி வரவேற்றார்; மகன், எங்கோ வெளியில் சென்று இருந்தார்.
வீட்டிலேயே, "பைவ் ஸ்டார்' ஒட்டல், "பார்' போல செட் செய்திருந்தார்... இங்கே நம்மூரில், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் ராமசாமி வீட்டில் அதே போன்ற, "பார்' பார்த்திருக்கிறேன்...
உட்கார்ந்தால் புதைந்து போய் விடும் அளவு, "சாப்ட்' ஆன சோபாவில் அமர வைத்து, பிரான்ஸ் நாட்டு கட் கிளாசில், அயர்லாந்து நாட்டு, ஜெமிசன் விஸ்கியை ஊற்றி, இரண்டு ஐஸ் கட்டிகளை போட்டுக் கொண்டார்...
எனக்கு, செயற்கை உரம் - பூச்சி மருந்து போடாமல் வளர்க்கப்பட்ட மரங்களில் இருந்து பறிக்கப்பட்ட ஆரஞ்சு பழங்களில் இருந்து பிழிந்த ஜூஸ் தந்தார்.
இப்படி பயிரிடப்படும், "ஆர்கானிக்' பயிர் வகைகளில் இருந்து கிடைக்கும் காய்கறி, பழம், கோதுமை போன்றவற்றுக்கு விலை ரொம்ப அதிகம்... ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இப்போது இவ்வகை உணவுப் பயிர் பாப்புலராகி வருகிறது.
பேச ஆரம்பித்தார் அன்பர்...
"ஏன் இன்னும் காஷ்மீர் பிரச்னையைத் தொடர விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?' என ஆரம்பித்து, அரசியல்வாதிகளை, குறிப்பாக, நேரு குடும்பத்தை ஒரு பிடி பிடித்தார்... "இப்படியெல்லாம் நடக்குமென்பது தெரிந்து தான் அன்றே நாட்டை விட்டு கிளம்பி விட்டேன்...' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, டின்னருக்கு அழைத்தார், அவர் மனைவி.
என்ன தான் லண்டனில் வாழ்ந்தாலும், எவர்சில்வர் பிளேட்டில், கையால், தான் சாப்பிடு
கிறார் அவர்... முள் கரண்டி, கத்தி எல்லாம் கிடையாது! அவரது மனைவியும், மகனும் கூட அப்படித்தானாம்!
காஷ்மீரிகள் நம்மைப் போல் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி, துவையல் குழம்பு, ரசம் என்று சமைக்க மாட்டார்கள்... அவர்களது உணவு அனைத்துமே, "செமி சாலிட்' ஆகத்தான் இருக்கும்...
குழம்பை ஊற்றி பிசைந்து, பொரியலையோ, கூட்டையோ, கீரையையோ தொட்டு நாம் சாப்பிடுவது போல் அல்லாமல், எல்லாவற்றையும் சாதத்தின் மீது ஊற்றி அப்படி அப்படியே பிசைந்து சாப்பிடுவர்.
அதாவது, பிளேட்டில் நாம், காய், பொரியல் வைக்கும் இடத்தில் மொத்தமாக சாதத்தை குவித்து, நாலு ஐட்டம் செய்து இருந்தால், ஒவ்வொன்றையும், குவியலின் ஒரு இடத்தில் ஊற்றி சாப்பிடுவர்; வினோதமாக இருக்கும்!
அன்று, பசலைக் கீரையில் ஒரு ஐட்டம், தாமரைத் தண்டில் ஒன்று, பனீரில் ஒன்று, பருப்பும், காய்ந்த வெந்தயக் கீரையும் சேர்த்து ஒரு ஐட்டம் என, சைவத்தில் நான்கும், அவர்களுக்கு சிக்கன் மற்றும் பன்றி இறைச்சியில் இரண்டு அடிஷனல் ஐட்டமும் இருந்தது.
சுவைத்து சாப்பிட ஆரம்பித்தோம்...
அன்பர் தொடர்ந்தார்: இப்போ, அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உனக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...
குளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
இனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலை
சேஷன்...
இன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...
வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... நீங்கள் - இந்தியர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை கவலைக்கிடமாகி விடும்.
ஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள், 
ஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... "அன்லஸ், அதர்வைஸ்' நீங்கள் விழித்துக் கொண்டாலன்றி...
உங்கள் ஊரிலேயே தயாராகும் பொருட்
களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே உங்களிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தை 
சீரழிக்கும் செயல் இது. கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், உங்கள் தாகம் தீருமா? அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...
மல்டி நேஷன் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், "கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...
இன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும் எனக் கூறி முடித்தார்.
பின்னர், ஓட்டல் அறையில், என்னை கொண்டு விட்டார். நேரம் இரவு, 9:00 மணி. அப்போது தான், சூரியன் மறையத் துவங்கி இருந்தான்!
ஊர் திரும்பியதும், விளம்பர ஏஜென்சியில் பணியாற்றும் நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, வெளிநாட்டு பொருட்கள் எவை, எவை... அவற்றுக்கு ஈடான இந்திய தயாரிப்புகள் எவை என, ஒரு லிஸ்ட் வாங்கினேன்.
இதோ அது:
வெளிநாட்டு சோப்பு, பாத் ஜெல் போன்றவை: கேமி, பாமொலிவ், லக்ஸ், லைப்பாய், லிசான்சி, ஹமாம், ரெக்சோனா, லிரில், பியர்ஸ், டோவ்...
இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள்: நீம், மார்கோ, சிந்தால் உட்பட கோத்ரெஜ் கம்பெனி
களின் சோப்புகள், சந்தூர், விப்ரோ சிகக்காய், மைசூர் சாண்டல், எவிட்டா, நிர்மா பாத், சந்திரிகா, மெடிமிக்ஸ், கங்கா...
வெளிநாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்: சிபாகா, பெப்சோடன்ட், போர்ஹான்ஸ், குளோசப், கோல்கேட், மென்டாடென்ட்... 
நம் தயாரிப்புகள்: வீகோ வஜ்ர தந்தி மற்றும் டாபரின் பற்பசைகள், நீம், பபூல், பிராமிஸ், புரூடென்ட்...
பல் துலக்கும் பிரஷ்கள், வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகள்: போர்ஹான்ஸ், பெப்சோடன்ட், கோல்கேட், குளோசப்... 
நம்முடையவை: புரூடென்ட், அஜந்தா, பிராமிஸ்...
ஷேவிங் க்ரீம் மற்றும் பிளேடு வெளிநாடு: பாமொலிவ், ஓல்டு ஸ்பைஸ், கில்லட், செவன் - ஒ - கிளாக், 365.
நம்முடையவை: கோத்ரெஜ், இமானி, சூப்பர் மேக்ஸ், டோபாஸ், லாசர், அசோகா...
வெளிநாட்டு முக பவுடர்: பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், ஷவர் டு ஷவர்... 
நமது: சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிளஸ்.
வெளிநாட்டு ஷாம்பு: ஹென்கோ, ஆல்கிளியர், நைசில், சன்சில்க்... 
நம்மவை: லாக்மே, நிர்மா, வெல்வெட்...
— நம் நாட்டு பொருளாதாரம் சீராக, இரண்டு வருடங்களுக்காவது நம் தயாரிப்புகளையே வாங்கி, நாட்டுக்கு நம்மாலான சிறு தொண்டைச் செய்வோமா?
*** 

2 comments:

  1. REally we have to think about it...

    ReplyDelete
  2. plz translate this in english mail to all our friends bec thr millions of people will know abt this .i will also translate this and post on facebook.

    ReplyDelete