Tuesday, January 10, 2012

வள்ளலார் வலியுறுத்திய விரதம்

வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.


வள்ளலார் இராமலிங்க அடிகளார்


வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள். ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”

- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.


திருத்தணிகை முருகன்

செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.

“திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “

-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும்

No comments:

Post a Comment