இது வடநாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ஒரு ஹிந்து குடும்பத்தில் புஷ்பா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதற்கு 2 வயது நடக்கும் போது அதற்கு முற்பிறவியின் நினைவுகள் அதிகம் வர ஆரம்பித்தன. தனது பெயர் புஷ்பா அல்ல என்றும், தனது பெயர் ’மந்தீப் கௌர்’ என்றும் தனக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருப்பதாகவும் கூற ஆரம்பித்தாள். மேலும் கத்தி, அரிவாள் மனை போன்ற சமையலறைச் சாதனங்களைக் கண்டாலே நடுங்க ஆரம்பித்தாள். காரணம் என்னவென்று கேட்டதில் தனது முற்பிறவியில் தனது கணவனே கத்தியால் தன்னைக் குத்திக் கொன்று விட்டதாக அவள் பயத்துடன் தெரிவித்தாள்.
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் மந்தீப் கௌர் என்னும் பெயருடைய சீக்கியப் பெண் அண்டை கிராமத்தில் வாழ்ந்து வந்ததும், சில வருடங்களுக்கு முன்னால் அவள் கணவனாலேயே குத்திக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அவளின் மறுபிறவி தான் புஷ்பா என்பதை பெற்றோர் உணர்ந்து கொண்டனர். மேலும் புஷ்பா ஹிந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வளர வளர சடங்கு, வழிபாடு போன்றவற்றில் சீக்கியக் குடும்ப முறைகளையே பின்பற்ற ஆரம்பித்தாள். அதுமட்டுமல்ல; தனது மூன்றாவது பெண்ணின் திருமணம் நடந்த போது பத்து வயதான புஷ்பா அதில் கலந்து கொண்டு மகளை ஆசிர்வதித்தாள்.
உங்களால் இதை நம்ப முடிகிறதா?
இதுபோன்ற விஷயங்கள் நாம் அறிந்ததைப் பற்றி மட்டுமே பேசக் கூடியதான “அறிவியலின்” எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இவற்றை “Para Psychology” மற்றும் “Occult Science” என்னும் துறைகளில் உள்ளடக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விர்ஜினியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதுபோன்ற ஆயிரக்கணக்கான மறுபிறவி சம்பவங்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருவதுடன், ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியாவிலும் பெங்களூருவில் உள்ள NIMHANS பல்கலைக்கழகம் இத்துறை குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகிறது. மேலும் The Foundation for Reincarnation and Spiritual Research என்ற அமைப்பு அகமதாபாதிலிருந்தும், INTERNATIONAL CENTRE FOR REINCARNATION AND SURVIVAL RESEARCHES என்ற அமைப்பு இந்தூரிலிருந்தும் மறுபிறவிச் சம்பவங்கள் குறித்து பல ஆண்டு காலமாக ஆராய்ச்சிகள் செய்து வருகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை தற்காலத்தில் டாக்டர் பானர்ஜி, டாக்டர் கே.எஸ். ராவந்த், டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா, டாக்டர் ஷிகா, பேராசிரியர் திரிவேதி போன்ற ஒரு சிலர் மட்டுமே இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெங்களூரின் NIMHANS (National Institute of Mental Health & Neurosciences) பேராசிரியர் சத்வந்த் பஸ்ரிச்சா தலைமையிலான குழு 1974ம் ஆண்டு முதலே இதுபோன்ற முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இவர்கள் மூலம் ஆராயப்பட்டு அவற்றுள் 77% உண்மை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் வடநாட்டிலேயே இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆதாரச் செய்திகள் மிகக் குறைவு.
No comments:
Post a Comment