காசி இந்துக்களின் புனிதத் தலம். மிகப் புராதனமான நகரம். ஆதிசங்கரர், ராமானுஜர், குமரகுருபரர், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் என பலரது வருகையால் பொலிவுற்ற புண்ணிய பூமி. கிறித்துவர்களின் ஜெருசலேம் யாத்திரை, இஸ்லாமியர்களின் மெக்கா யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது காசி யாத்திரை. காசி நகரத்தின் வடக்கிலிருந்து வாரண் நதியும், தெற்கில் அஸ்ஸி நதியும் க்ங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால் வாரணாசி என்ற பெயரும் இந்த நகருக்கு உண்டு.

காசி விஸ்வநாதர் ஆலயம்

முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் காசியும் ஒன்று. இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம். இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையாக கோயில் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம். காலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது. குறிப்பாக இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில் அகில உலகத்தும் உணவளிக்கும் அன்னை அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள். காசி விஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம் என்பதும், அபிஷேகம் செய்யலாம் என்பது மற்றொரு சிறப்பு.


அன்னபூரணி ஆலயம்

காசியில் அவசியம் தரிசக்க வேண்டிய முக்கியமான ஆலயம் இது. இவ்வாலயம் வட இந்தியச் சிற்பக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் சர்தார் சந்திரசூட் அவர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

காசி விசாலாட்சி ஆலயம்

காசி விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் வேறு பகுதியில் உள்ளது. தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். காசி நகர் முழுதும் இந்த அன்னையின் ஆட்சிதான். இக்கோயில் நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தஜாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது. இது அன்னையின் 52 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


காசியில் ஒரு மாலை நடை…

கால பைரவர் ஆலயம்

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தின் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.

கங்கையும் காசியும்

கங்கை

கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 80க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. இவற்றில் குளிப்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் கரையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கும் ”கங்கா ஆரத்தி” மிகச் சிறப்பானது. இந்தியாவில் ஓடும் நதிகளிலேயே மிகப் புனிதமான நதி கங்கை.

”காசம்” என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல ”காசி” என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தரும் என்பதற்கு குமரகுருபரர், சுப்ரமண்ய பாரதியார் தொடங்கி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.

ஆத்திகரோ, நாத்திகரோ அவசியம் வந்து செல்ல வேண்டிய இடம் காசி