Thursday, January 12, 2012

திருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

தேசிகரின் வாழ்வில்

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு. அதற்கேற்ப அந்த இறைவனின் அருளோடும் ஆசியோடும் பிரம்ம ஞானியாக உயர்ந்தவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்சான்ய ஞா ஸ்ரீ ஈன தேசிகர். திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்ற பெருமையையுடைய இம்மகான், 1750 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றியவர். இயற்பெயர் கந்தப்பன்.

சிறு பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான் பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார். பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். பல சாதுக்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின் சிதம்பரம் தலத்தை அடைந்தவர் அங்கு வாழ்ந்த பிரம்ம யோகி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். குருவின் பாதங்களைப் பணிந்து, அவரிடமே பல ஆண்டுகாலம் இருந்து வேத, வேதாந்த உண்மைகள், ப்ரம்ம தத்துவங்கள், உலக வாழ்க்கை ரகசியங்கள் என சகலத்தையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்ற இவர் மிகச் சிறந்த அனுபூதிச் செல்வரானார். தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் துவக்கினார்.

“ஜனனாத் கமலாலயே” என்று சிறப்பிக்கப்படும் முக்தி தரும் தலங்களில், பிறக்க முக்தியைத் தரும் தலமான திருவாரூருக்குச் சென்றார். அங்கே சிறந்த தவயோகியும், சித்த புருஷர்களில் ஒருவரும், இறைவனின் காட்சியையும், அம்பிகையின் அருளையும் நேரே பெற்றவருமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பின் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு உறையும் சிங்கார வேலனைத் தரிசனம் செய்தார். பின் அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான ‘உகண்ட லிங்க ஞான தேசிகர்’ என்னும் மகா குருவின் ஆசியையும் பெற்றார். பின் தனது பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீ தேசிகர், திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்ட வலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். பின்னர் திருவண்ணாமலை தலத்தை அடைந்து நீண்ட காலம் தவம் செய்து வந்தார்.

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

விஷமிகளாலும், போலி பக்தர்களாலும் இவரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணா முலையம்மனும் புலி உருவில் வந்து இவரைக் காவல் காத்தனர் என்பது வரலாறு. விஷமிகள் எவரேனும் அப்பகுதிக்கு வந்தால் புலிகள் உரத்த குரலில் உறுமி அவர்களை பயமுறுத்தி விடும். அதனால் அவர்கள் அப்பக்கம் வரத் தயங்குவர். நல்ல எண்ணம் கொண்ட பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கி விடும். சில சமயம் ஸ்ரீ தேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் தேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. இவரது பெருமையைக் கேள்வியுற்று பலரும் அவரை நாடி வந்தனர். மகானும் தனது தவ ஆற்றலால் தம்மை நாடி வந்தவர்களது நோய், நோடிகளை நீக்கினார். வல்வினைகளைப் போக்கினார். பலருக்கு ஞானகுருவாக இருந்து அவர்கள் தம் ஆன்ம வளர்ச்சி உயர வழி வகுத்தார்.

ஸ்ரீ தேசிகரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. இவர் பிறப்பால் ஆங்கிலேயரானாலும் மனத்தால் இந்தியராக வாழ்ந்தவர். தன்னிடம் உள்ள நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேசுவரர் ஆலயத்திற்கு அளித்ததுடன் பல உற்சவங்களையும் முன்னின்று நடத்தினார். அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்காக தம் சொந்தச் செலவில் பல்வேறு திருப்பணிகளை மேற் கொண்டார். வருடம் தவறாமல் அண்ணாமலையாரின் தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஐடன் துரை, அண்ணாமலையாரின் தேர்த் திருவிழாவினையும் மிக விமர்சையாக நடத்தி வந்தார்.

ஒருநாள்.. அண்ணாமலை தீபத்தைக் காண மிக ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. ஆனால் அப்போது பலத்த மழை பெய்திருந்ததால், அவர் வரும் வழியில் ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்து தான் அண்ணாமலைக்குச் வர வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த துரை, ‘சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கி விட்டனர்.

அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் காரணத்தை வினவினர். ஸ்ரீ தேசிகரோ அதற்கு, ‘நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!’ என்று கூறி விட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

சில மணி நேரம் சென்றது. ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரையேறினர். ஐடன் துரை, குருநாதரை தரிசித்து, அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் அளப்பரிய ஆற்றலையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.

ஸ்ரீ ஞான தேசிகர், அண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாது அங்கேயே தொடர்ந்து தவம் செய்து வந்தார். அந்த இடம் மலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்ததாலும், அது ஈசான்ய திசையைக் குறிக்கும் இடமாக இருந்ததாலும், அப்பகுதி நாளடைவில் ‘ஈசான்ய மடம்’ என்று அழைக்கப்படுவதாயிற்று. ஸ்ரீ தேசிகரும் ’ஈசான்ய ஞான தேசிகர்’ என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்த இம்மகான் 1829 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் 26 ஆம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது உடல், அவர் எப்போதும் தவம் செய்து வந்த வில்வ மரத்தின் அடியிலேயே சமாதி செய்விக்கப் பெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் இறுதியில், ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், ஸ்ரீ அம்மணி அம்மாள் சமாதி ஆலயத்தை அடுத்துள்ள ஈசான்யக் குளக்கரையில் அமைந்துள்ளது இச்சமாதி ஆலயம். ரமணர் உட்படப் பல மகான்களால் புகழப் பெற்ற இந்த ஸ்ரீ ஈசான ஞான தேசிகர் மடம், அளவற்ற ஆன்ம அமைதியையும், அற்புத ஆற்றல்களை தரக் கூடியது. பல மகான்களின் ஜீவ சமாதிக்களையும், ஆன்ம அருளையும் தன்னகத்தே கொண்டது.

மகான்களின் பெருமை எண்ணவும் இனிதே!

1 comment:

  1. மிக அருமையான தகவல். திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்கள் மட்டுமல்லாது பிற இடங்களில் வாழ்ந்த மகான்கள் வரலாறுகளையும் சேகரித்து வெளியிடுங்கள். இந்த புனித புமியில் வாழ்ந்த மகான்களை அனைவரும் அறிந்து மதம் மாறிச் சென்ற சகோதரர்கள் திரும்பி வரட்டும்.

    ReplyDelete