Monday, February 15, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி 76 வயதான மூதாட்டி, கொதிக்கிற நெய்யில் கைவிட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் நேற்று முன் தினம் தங்கள் குலதெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். ஸ்ரீவி., முதலியார் பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொதிக்கும் நெய்யில் கையினால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதில், அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து, ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த 76 வயதான முத்தம்மாள் 90 நாள்கள் விரதமிருந்தார். பின், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி, அப்பம் சுடும் பணியில் ஈடுபட்டார்
முத்தம்மாளுக்கு பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அவர் கொதிக்கிற நெய்யில் போட்டார். பின், கரண்டி பயன்படுத்தாமல் கையால் அப்பத்தை புரட்டி, வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் அவற்றை மீண்டும் கையால் வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் இருந்தனர். தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால் கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை காண, பக்கத்து கிராமங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம் பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நன்றி:தினமலர் 14/2/2010

No comments:

Post a Comment