Friday, February 19, 2010

கி.பி.2050 இல் நமது இந்தியா

இந்தியா 2050

இந்தியா 2025 ஐ எழுதி விட்டு, இது சாத்தியம் தானா இல்லை ஒரு நிறுவனத்தின் கற்பனையா என்ற ஐயத்துடன் Goldmansachs இணையத்தளத்துக்கு சென்று அந்த அறிக்கையினைப் பார்த்த பொழுது, இது சாத்தியமாவதற்கான வாய்ப்பு ஓரளவு இருப்பதாகவே தோன்றியது.

அப்படி என்னத்தான் சொல்கிறது அந்த அறிக்கை ?

2050ம் ஆண்டு உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசுகள்

சீனா
அமெரிக்கா
இந்தியா
என்ன நம்பமுடியவில்லையா ? எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.

Goldmansachs நிறுவனம் அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம். அதன் BRIC Report என்ற இந்த அறிக்கையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்து கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையை இம் மாதம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

அந்த அறிக்கையின் சாராம்சம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுதுள்ள பணக்கார நாடுகளான G6 நாடுகளின் (US, UK, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி), பொருளாதாரத்தை விட BRIC நாடுகளின் பொருளாதாரம் அதிகமாக இருக்கும்.
2050ஆம் ஆண்டு உலகின் ஆறு பெரிய பொருளாதார வல்லரசுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் தவிர மற்ற G6 நாடுகள் காணாமல் போய்விடும்.
2050 ஆம் ஆண்டிற்கு பிறகு மற்ற BRIC நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மட்டும் 3% மாக இருக்கும்.
இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பணக்கார நாடாக இருக்காது. ரஷ்யாவைத் தவிர்த்து மற்ற BRIC நாடுகளில் ஏழ்மை இருந்து கொண்டு தான் இருக்கும்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் அதிக அளவில் உயரும். அதனால் உலகில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் அதிகமாக கார்கள் இருக்கும். அமெரிக்கா கூட இந்தியாவிற்கு அடுத்த நிலையில் தான்.
இது சாத்தியம் தானா ?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருந்தன. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்த நாடுகள் வளர்ச்சிப் பெற்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிஞ்சி விடும் என்று கருதப்பட்டது. ஆனால் இது நடைபெறவில்லை. ஒரு நாட்டின் நீண்ட கால வளர்ச்சி விகிதத்தில், வளர்ச்சியும் தேக்க நிலைகளும் தோன்றுவது இயல்பு. தற்பொழுது சீனாவின் வளர்ச்சி விகிதம் 8% . இதே அளவில் கணக்கிடும் பொழுது சீனா 2050ஆம் ஆண்டு அமெரிக்காவை விட 25 மடங்கு வளர்ச்சி அடைந்ததாக கணக்கு வரும். ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சி அவ்வாறு நடைபெறுவதில்லை. இத்தகைய நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டே BRIC நாடுகளின் வளர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் வேலை செய்யும் வயதுடைய இளைஞர்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். இந்தியா மற்றும் பிரேசில் தவிர மற்ற நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் இருக்கும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2050 ஆம் ஆண்டு சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தாலும், தனி நபர் வருமானம் மற்ற எல்லா நாடுகளை விட குறைவாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையை விட 35 மடங்கு உயர்ந்து இருக்கும்.

இத்தகைய வளர்ச்சி உண்மையிலேயே சாத்தியம் தானா என்பதை அறிய 1960 ல் தொடங்கி அடுத்து வந்த 50 ஆண்டுகளுக்கு இதே முறையில் கணக்கிடும் பொழுது, தற்பொழுதுள்ள வளர்ச்சி விகிதத்திற்கு நெருக்கமாகவே முடிவுகள் வந்துள்ளதாம். அதனால் இது கனவு அல்ல நடைமுறையில் சாத்தியமான ஒன்று தான் என்று Goldman sachs நிறுவனம் தெரிவிக்கிறது. தற்பொழுதுள்ள வளர்ச்சி நிலையே இந்த இலக்கை எட்டுவதற்கு போதுமானது. எந்த வித அற்புதங்களையும் இதற்காக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்த நிலையை எட்ட தேவையானவை

குறைந்த அளவிலான பணவீக்கம்
நிலையான ஆட்சி
தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம்
அந்நிய முதலீடு
படிப்பறிவு – இந்தியாவில் தான் படிப்பறிவு மற்ற BRIC நாடுகளை விட குறைவாக இருக்கிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்விகள் எழுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் கணக்கிடப்பட்டிருக்கிறது. இது தற்பொழுதய நாட்டின் வளர்ச்சி விகிதமான 6%-6.5% விட குறைவு. நாட்டின் வளர்ச்சி 7% என்ற இலக்கை கடக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். ஆனால் இதனை வேகமாக செய்ய வேண்டும். முதலில் விமான போக்குவரத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிகள் பிறகு பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கப்சிப் ஆகி விட்டனர். அரசு உத்தேசித்துள்ள தொலைத் தொடர்பு மற்றும் காப்பீடு மட்டுமின்றி பிற துறைகளிலும் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

படிப்பறிவு – கிரமப்புறங்களில் படிப்பறிவை அதிகரிப்பது மிகவும் அவசியம். அரசாங்கம் அதிக அளவில் கல்விக்காக செலவிடவேண்டும். இந்த ஆண்டு பட்ஜட்டில் சில நல்ல திட்டங்கள் இதற்கென அறிவிக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் இது மட்டுமே போதாது. மோசமாக உள்ள கிராமப்புற கல்விக்கூடங்கள் சீர்செய்யப்படவேண்டும். அரசாங்கம் அளிக்கும் கல்வியின் தரம் உயர வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் மனிதவளமேம்படு மிகவும் முக்கியமான ஒன்று.

விவசாயம், இந்தத் துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இப்பொழுது தான் அரசுக்கு வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் மிகவும் முக்கியம். நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த படுமா ? (நிச்சயமாக இது நிறைவேறாது தானே ?)

இலக்கு எட்டிவிடும் தூரத்தில் இல்லை தான். ஆனால் சரியாக திட்டமிட்டு நகர்ந்தால், எட்டி விடுவோம். எட்டுவோமா ?

Goldman sachs ன் அறிக்கையைப் படிக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள்

http://www.gs.com/insight/research/reports/99.pdf
நன்றி:http:://thamizhsasi.wordpress.com/2004/10

No comments:

Post a Comment