Thursday, February 18, 2010

இலங்கையில் அழியும் சைவம்:அடைக்கல திட்டம்



அழியும் சைவம்... அடைக்கல திட்டம்!



இலங்கையில் போர் முடிந்தாலும், ஈழத் தமிழனின் சோகம் தீரவில்லை. தமிழர்களின் கோயில்கள் எல்லாம் தரை யோடு தரையாக சிதிலமாகிக் கிடக்கின்றன. இந்நிலையில், அவர்களைப் பலமுனைகளிலும் மதமாற்றம் செய்யும் முயற்சிகளும் அதிவேகம் பிடிக்க... 'அதைத் தடுத்து நிறுத்த, இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் திருமுறை வேள்விகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் ஆன்மிகவாதிகள் சிலர்..!' என்றொரு செய்தி வந்தது. இது என்ன புது சோதனை என்று விசாரித்தோம்.







தமிழ்நாட்டின் காஞ்சி மடத்தோடு சேர்ந்து அகில இலங்கை இந்து மாமன்றம், இந்திய இலங்கை தமிழர் கூட்டமைப்பு ஆகியவைதான் இந்தப் பணியில் குதித்திருக்கின்றன.



முதலில் அகில இலங்கை இந்து மாமன்ற உதவிச் செயலாளர் கார்த்திகேயனிடம்



பேசினோம். ''உக்கிரமான போர் முடிந்து, மக்கள் மீள் குடியேறி வரும் சூழலிலும் ஏகக் குழப்பங்கள்! இங்குள்ள இந்துக்கள் பெரும்பாலும் சைவர்களே. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட இலங்கையில் எதுவுமே இல்லை. 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்பார்கள். ஆனால், எல்லா கோயில் களுமே இடிக்கப்பட்டு விட்டன. அதனால், சைவர்களான தமிழர்கள் எங்கு போவதென்று தெரியாமல் குழப்பமுற்று இருக்கின்றனர். அதனால் மாற்று மதத்தினர், எம் மக்களை மதம் மாற்றத் துடிக்கின்றனர். எம் மக்கள் அவர் களின் சூழ்ச்சிக்கு முழுதும் இரையாகிவிடுவார்களோ என்று அச்சமாயிருக்கிறது. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் 'திருமுறை வேள்விகள் செயல் திட்டம்' என்பதை வடிவமைத்தோம்!'' என்றார்.



இந்திய-இலங்கை தமிழர் கூட்டமைப்பின் தலைவரும், 'காந் தளகம்' பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளருமான சச்சிதானந்தம் நம்மிடம், ''இலங்கைத் தமிழர் பூமியில் இப்போது, தமிழும் இல்லை; அவர்கள் மதமான சைவமும் இல்லை. எங்களுக்கு சமயம் என்றால் சைவம்தான், கோயில் என்றால் சிதம்பரம்தான். பல நூறு ஆண்டுகளாக ஈழமும், தமிழகமும்தான் தமிழ் வளர்த்த இடங்கள், சைவத்தைப் போற்றிய இடங்கள். அப்படிதொல்பெருமை கொண்ட எம் ஈழத்தில் இன்று சைவத்தை அழித்தொழிக்கும் வேலைகள் முழுமூச்சில் நடந்துவருகின்றன. மீள்குடியமரும் தமிழர் பகுதிகளில் நுழையும் என்.ஜி.ஓ-க்கள், மதமாற்ற வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். 'உங்கள் மதம் உங்களைக் காப்பாற்றவில்லையே, உங்கள் தாய்நாடு உங்களைக் காப்பாற்றவில்லையே... இந்தோனேஷியாவில் கிழக்கு தீமோர் மக்கள் கிறிஸ்துவத்தை மேற்கொண்டதால்தான் அவர்களைப் பிரித்து, தனி நாடாக்க முடிந்தது. இப்பவும்கூட உங்கள் தாய்நாடு போராட்டத்தை கிறிஸ்துவ நாடுகள் மட்டும்தானே ஆதரித்தது?' என்றெல்லாம் சொல்லியே கிறிஸ்துவ மதத்தின்பால் ஈர்க்கிறார்கள்.



இஸ்லாமியர்களும் அவ்வாறே செய லாற்றுகிறார்கள். மட்டக்களப்பில் தமிழர் பெருவாரியாக வசித்த பகுதி ஒன்றின் பெயர், இப்போது 'சதாம் உசைன் நகர்.' இன்னொரு இடம், 'அயத்துல்லா நகர்.' வேறொரு இடத்தில் சவூதி மன்னர் பைசலின் பெயரில் நகர் உருவாகிவிட்டது. அங்கிருந்த கோயில்கள், பள்ளிவாசல்களாக மாறிக் கொண்டுள்ளன!



புத்த மதத்தினரும் தங்கள் வேலையைக் காட்டு கிறார்கள். அங்கு பாதுகாப்புக்கு இருக்கும் படைவீரர்கள் தங்கள் வழிபாட்டுக்கு என்று சொல்லி, ஒரு புத்தர் சிலையை வைத்து, 'இது புத்தர் நடமாடிய நாடு, அவரது பொருள்கள் புழங்கிய இடம்' என்றெல்லாம் சொல்லி, மனதை மாற்றுகிறார்கள். அநாதைகளாக, ஆதரவற்று நிற்கும் எம் தமிழர்களை இப்படி மூன்று மதத்தினரும் முக்கோண நெருக்கடி கொடுத்து, முற்றிலுமாக இந்து மதத்தில் இருந்தும் சைவத்தில் இருந்தும் வெளியேற்றுகின்றனர். எங்களின் வறுமையைப் பயன்படுத்தி, நல்ல உணவும், கை நிறையப் பணமும் கொடுத்து முகம் நிறைய கள்ளச் சிரிப்புடன் வரும் மாற்று மதத்தினரிடம், எம் மக்கள் மந்தைகளாக சாய்ந்து கொண்டிருக்கிறார்கள்! இதை தடுக்கும் முதல் கடமையும் பொறுப்பும் அதே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் தமிழகத்துக்குத்தானே உண்டு?'' என்று ஆவேசமாகக் கேட்டார் சச்சிதானந்தம்.



அவர் இதுகுறித்து, இங்குள்ள ஆன்மிகப் பெரியவர்களிடம் பல நாட்கள் கலந்து பேசி, திட்ட மிட்டதில்... 'இலங்கையில் திருமுறை வேள்விகளும், சொற்பொழிவுகளும் நடத்தி, தமிழக சைவர்களும் தங்களோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டுவது..!' என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இதைத் தொடர்ந்து, இலங்கையில் அறுவடைக்காலம் முடியும் சித்திரையில் வேள்விகள் நடக்குமாம். இதற்காக கோவையை சேர்ந்த திருமுறை ஓதுவாரான கங்காதர் ஓதுவார் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் துறவிகள், ஓதுவார்கள், தொண்டர்கள் ஆகியோர் தலா ஐந்து பேர்! இவர்கள் இலங்கைக்குச் சென்று தமிழர்கள் வசிக்கும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, புத்தகளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய 14 மாவட்டங்களில் திருமுறை வேள்விகளை நடத்த உள்ளார்கள்.



மொத்தம் 150 இடங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு இடத்திலும் ஒருநாள் தங்கி, காலையில் திருமுறை வேள்வி களையும், மாலையில் சைவப் பெருமை சொல்லும் சொற் பொழிவுகளை நிகழ்த்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனை இலங்கையில் முன்னின்று வழிநடத்தப்போகும், உள்ளூர் அமைப்புகளை ஒருங் கிணைக்கும் பணியை அகில இலங்கை இந்து மாமன்றம் செய்து வருகிறது. தமிழகத்தில் வேள்விக் குழுவினரை தயார் செய்யவும், செலவுகளையும் காஞ்சி சங்கராச்சாரியார் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.



காஞ்சி மடத்தைதொடர்பு கொண்டபோது, மடத்துக்கு நெருக்கமானவரும் கும்ப கோணத்தை சேர்ந்தவருமான குருமூர்த்தி நம்மிடம், ''சைவத் தையும் தமிழையும் இணைத்து வளர்த்ததில் காஞ்சி மடம் உள்ளிட்ட ஆன்மிக மடாலயங்களின் பங்கு பெரிது. இப்போது இலங்கையில் நடக்கும் சமய அழித்தொழிப்பை தடுக்க... பெரியவர் உணர்ந்திருக்கிறார். இந்தத் திட்டம் உருவானதுமே ஆதரித்து, அதற்கான எல்லாவற்றையும் தாமே ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். ஆதரவற்றோர்களாக அங்கே கலங்குகிறவர்களுக்கு, இந்த திருமுறை வேள்விகள் மிகப்பெரும் ஆதரவு காட்டும்! இந்தக் குழுவில் செல்லப்போகிறவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, அவர்களுக்கான பாஸ்போர்ட், விசா ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கான எல்லா உதவிகளையும் மடம் செய்து கொடுக்கும்!'' என்றார் குருமூர்த்தி.



தங்கள் கனவான 'ஈழம்' உருவாகத்தான்தாய்நாடான தமிழகம் உதவவில்லை. தங்களின் 'சமயம் அழிவதையாவது தடுக்கும் முயற்சியில் ஈடுபட முன்வந்துள்ளதே!' என்று மகிழ்வுடன் இதை வரவேற்கக் காத்திருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள்!

No comments:

Post a Comment