Sunday, July 26, 2015

விவசாயத் தோழர்களே விழித்துக்கொள்ளுங்கள்...


நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியிருந்தது. எத்தனை பேர் அதனை வாசித்தார்கள்,எத்தனை பேர் கண்களில் அது படாமல் நழுவியது என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டு விவசாய பூமி முழுதும்‌ கிட்டத்தட்ட மலடாகிவிட்டது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியுட்டுள்ள ஆய்வறிக்கை பற்றிய செய்திதான்‌ அது.
எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற அறிவியல் அரக்கர்களின்‌ பேச்சைக்கேட்டு பசுமைப் புரட்சி என்ற போர்வையில், அளவுக்கு அதிகமா வேதி உப்புகளையும், விசத்தையும் மண்ணில் தூவியதன் விளைவு இன்று நமக்கு பசியாற உணவு தந்த தாய்மண் மலடாகிக் கிடக்கிறது.
இயற்கை உரங்களான ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சாணம், இலை தழைகளின் மக்கிய உரம் ஆகியவற்றைப் புறந்தள்ளி வேதி உப்புகளை உரம் என்ற பெயரால் மண்ணில்‌ கொட்டினோம். வேப்பெண்ணை, வேப்பம் புண்ணாக்கு போன்ற பூச்சித் தடுப்பான்களை விடுத்து உயிர்க்கொல்லி மருந்துகளை செடிகளிலும் மண்ணிலும்‌ கொட்டினோம். விளைவு நமது மண் தனது உயிர் ஆதாரத்தை இழந்து மலடாகிவிட்டது.
தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, சேலம், இராமநாதபுரம் ஆகியநான்கு மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மண்ணின் வளமானது முற்றாக சிதைந்துவிட்டது என அந்த அறிக்கை கூறுகிறது.
மண்ணுக்கு உயிராக விளங்குவது அதில் அடங்கியுள்ள ஆர்கானிக் கார்பன் எனப்படும் உயிர்ச்சத்துக்கள். வளமான மண்ணில் குறைந்தபட்சம் 0.8% முதல் 1.2% வரையாவது இந்த சத்துக்கள் இருக்க வேண்டும். 19701ல் தமிழ்நாட்டில் 1.2% சதவீதம் இருந்த இந்த சத்துக்கள் 2002 ஆம் ஆண்டு பெரும்பாலான மாவட்டங்களிக் 0.68% ஆகக் குறைந்தது. ஆனால் இந்த ஆண்டு அது 0.5%க்கும் கீழே போய்விட்டது என அந்த அறிக்கை கூறுகிறது.
அதாவது கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட மலட்டுத்தன்மை அடைந்துவிட்டது.
வேலூர் 4.2%
ஈரோடு 4.04%
சேலம் 3.2%
இராமநாதபுரம் 2.6%
மேலே குறிப்பிட்ட நான்கு மாவட்டங்கள் மட்டுமே சராசரி அளவுக்கும் மேலாக உள்ளன. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஆர்கானிக் கார்பன்‌ அளவானது 0.5%க்கும் குறைவாகவே உள்ளது.
உரம் என்ற பெயரில் வேதியியல் உப்புக்களை மண்ணில் கொட்டுவதால் மண் தனது இயல்பை இழந்து களர் நிலமாக மாறுகிறது. களர் நிலத்தில் பயிர் வளருமா என சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி என்ற பெயரில் உயிர்க்கொல்லி விசங்களை மண்ணில் கொட்டுவதால் மண்ணும் பயிர்களும் அதில் விளையும்‌பொருட்களும் விசமாகவே நமக்குக் கிடைக்கின்றன. மேலும் விவசாயிக்கும்‌ பயிர்களுக்கும் நன்மை செய்யும்‌ பூச்சிகளும், மண்புழு மற்றும் நுண்ணுயிர்களும் கொன்று அழிக்கப்படுவதால் விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்து வருகிறது.
இதற்கெல்லாம் தீர்வு என்ன?
உடனடியாக நாம் செய்ய வேண்டியது இயற்கை விவசாயத்திற்குத் திரும்புவதுதான். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கையான பூச்சி விரட்டிகளை மட்டுமே தெளிக்கவேண்டும். பஞ்சகவ்யா போன்றவற்றை நாமே தயாரித்து உபயோகிக்கலாம். இத்தனை காலம் மண்ணை மலடாக்கிவிட்டு, இயற்கை விவசாயத்திற்கு மாறியவுடன் நமக்கு நன்மையும் லாபமும் கிடைக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. மலடான ம‌ண் மீண்டும் இயல்பிற்குத் திரும்ப சில காலம் தேவைப்படும். ஆனால் அதுவரை நாம் பொறுமை காக்கவேண்டும்.
இயற்கை விவசாயத்திற்கு பஞ்சகவ்யா பேருதவி புரிவதாக பல இடங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மேன்மைதனை உலகிற்கு எடுத்துரைத்த உத்தமர் ஆவார். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இயற்கை விவசாயத்தின் மேன்மையை உணர்த்த தனது அரசுப்பணியைத் துறந்து சேவை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர். வேம்புக்குக் காப்புரிமை பெற மேலை நாட்டவர் தீட்டிய திட்டத்தை முறியடித்தவர். அவரது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன்மூலம் மலடான நம் தாய்மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.
விவசாய நண்பர்களே விழித்துக் கொள்ளுங்கள்...
பணத்தைத் தின்ன முடியாது. காசைக் குடிக்க முடியாது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழவனின் பெருமையை இதைஇதைவிட சிறப்பாக யாராலும் கூற இயலாது. பசிப்பிணி போக்கும் மண்ணைக் காக்க இன்றே இயற்கை விவசாயம் நோக்கித் திரும்புவோம்.. நன்றி...

No comments:

Post a Comment