Monday, July 6, 2015

தேவாரம் திருவாசகம் திருப்பதிகங்களில் திருவையாறு:



அனைத்து புகழுக்கும் உரித்தான இந்த புனிதத் தலம் திருவையாறு எனப் பெயர் பெற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தலத்தைப் பஞ்சநதம் என்று அழைப்பதோடு, இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு பஞ்சநதீஸ்வரர் அல்லது ஐயாறப்பர் எனப் பெயர் விளங்குவதாலும் இங்கு பாயும் ஐந்து நதிகளையொட்டியே இந்தப் பெயர் வந்ததாக ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே இவ்வாறுகள் முறையே வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் இவற்றையொட்டியே இந்தப் பெயர் வந்ததாகக் கருதலாம். இத்தலத்தின் பெயரே இங்கு கோயில் கொண்டுள்ள இறைவருக்கும் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலத்தின் தலபுராணப்படி சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய்நுரை எனப்படும் நந்திதீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் இங்கு கலப்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் செய்திகள் உண்டு. 'ஐயாறு' எனும் சொல்லுக்கு அகன்ற ஆற்றையுடைய ஊர் என்ற தெளிபொருளும் உண்டு. இதன்பொருட்டே

நல்லாறும், பழையாறும், கோட்டாற் றொடு
நலந்திகழும் நாலாறும், திருவையாறும், தெள்ளாறும் ...

என்று தனது திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் கூறுகிறார்.

திருவையாற்றுக்கு பஞ்சநதம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன் முக்திபுரம் எனப் பல பெயர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். 'ஐ' என்றால் மேலான, உயர்வான என்றும் 'ஆறு' என்பதற்கு வழிகள், மார்க்கங்கள் என்றும் பொருள் உண்டு. இவற்றை மூலாதாரம், ஸ்வாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பலப்பல பெயர்க்காரணங்கள் கூறப்பட்டாலும், திருவையாறு எனும் பெயர் பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்டது.

இத்திருத்தலத்தைக் குறித்துப் பாடப்பெற்று நமக்குக் கிடைக்ககூடிய நூல்கள் அனைத்துமே சைவ இலக்கியங்கள்தான். தேவாரம் பாடிய மூவர் காலம் முதல் இன்றுவரை இத்தலம் மிகச் சிறந்த சைவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரிநாத சுவாமிகள் இத்தலைத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பெருமானும் 'திருவாசகம்' கீர்த்தித் திருவகவலில் "ஐயாறதனில் சைவனாகியும்" என்று இங்கு சிவபெருமான் தனக்கு பூசை செய்யும் ஆதிசைவர் காசிக்குச் சென்றிருந்தபோது அவர் உருவில் வந்து தனக்கே பூசித்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் தேவாரம்

இப்படிப்பட்ட புனிதமான நகருக்கு தேவாரம் பாடிய மூவரும் வந்து பாடியிருப்பது மிகமிகச் சிறப்புடையது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவையாற்றுத் தலத்தைப் போற்றி ஐந்து திருப்பதிகங்கள் பாடியுள்ளார். இப்பதிகங்கள் முதல் இரு சைவத்திருமுறைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர் திருவையாற்றின் இயற்கை எழிலையும், கலைச் சிறப்புக்களையும், ஐயாறப்பரின் அளப்பரிய கருணையையும் விரிவாக எடுத்தியம்புகிறார். ஆடற் கலையும் இசைக் கலையும் இத்தலத்தில் எங்ஙனம் செழித்து வளர்ந்தது என்பதை மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். காலை வேளைகளில் ஆலயத்தில் இன்னிசை முழக்கம்தான். இளமாதர்கள் கோயிலை வலம்வந்து நடனமிடுகின்றனர். திருஞானசம்பந்தப் பெருமான் இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை புரிந்தபோது, இவ்வூர் மக்கள் ஊரை நன்கு அலங்கரித்து வாயில் தெளித்து கோலங்கள் போட்டு, தோரணங்கள் கட்டி பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். நந்தி அருள்பெற்ற நன்னகராம் இவ்வூரினுள் வரும்போது தான் கண்ட வளங்களை திருஞானசம்பந்தர் பாடும் அழகைச் சிறிது காண்போமே!

"மனிதனை நல்வழிப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய ஐம்புலன்களும் தங்கள் கடமை கெட்டு, வழிதவறி, அறிவிழந்து செய்யும் தவறால் வருந்துகின்ற காலத்தில் வந்து அபயம் தரும் ஐயாறப்பன் வாழும் கோயில் இது. அடடா! இந்த ஆலயம்தான் எத்தனை அழகு! இக்கோயிலை வலம் வருகின்ற பெண்கள் நடனமிடுகிறார்கள். அந்த நடனத்துக்கு பக்க வாத்தியங்கள் முழங்குகின்றன. அந்த முழவின் அதிர்வினைக் கேட்டு அங்குள்ள வனங்களில் அலையும் குரங்குகள் மழை வருகின்றதோ, அதற்காக இடி முழங்குகின்றதோ என்று அந்த முழவோசையை இடியென எண்ணி, வானத்தில் மேகத்திரள் உள்ளதோ என்று பார்க்க மரத்தின் உச்சிக்குச் சென்று வானத்தை அண்ணாந்து பார்க்கின்றனவாம்."

"இந்தக் கோயில் இருக்கிறதே இது தழல் உருவான சிவபெருமான் தங்குகின்ற கோயில். இங்கு வளம்பொருந்திய வனத்திடை மான்கள் பாய்கின்றன. அந்த ஓசை கேட்டோ என்னவோ அங்கு நிறைந்துள்ள மந்திகளெல்லாம் மரம் ஏறிப் பாய்கின்றன. அப்படி அவைகள் பாய்கின்ற வேகத்தினால் அங்கு இருக்கும் ஏராளமான தேன்கூடு களிலிருந்தெல்லாம் தேன் பாய்ந்து தெளிக்கிறது, அத்தேன்துளிகள் விழுந்ததால் மடுக்களில் உள்ள மீன்கள் துள்ளிப் பாய்கின்றன. அந்தச் சலசலப்பால் மடுவில் இருந்த தாமரை மொட்டுக்கள் மலர்கின்றன".

"கங்கையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டிருக்கின்ற சிவபெருமானார், அடியார்கள் பூசித்த வில்வம், எருக்கம்பூ முதலியவற்றைத் தன் சடையில் அணிந்துள்ளார். அப்படிப்பட்ட தத்துவனார் தங்கும் கோயிலிது. அடடா! இவ்வாலயத்தைச் சுற்றிலும் வானளாவிய தருக்கள் நிறைந்த சோலையாகக் காட்சி தருகின்றது. இங்குள்ள வீதிகளிலெல்லாம் அரங்கம் அமைத்து அங்கு மகளிர் நடனம் பயில்கின்றனர். காந்தாரத்தில் பண் அமைத்துப் பெண்கள் பாட, அதற்கேற்ப ஆடலரசியர் அரங்கேறி நடனம் புரிகின்றனர். எங்கோ இருக்கும் மலையில் குயில் கூவ, அங்கிருந்து புறப்பட்டு மெல்ல தவழ்ந்து வரும் தென்றல் காற்று வழிநெடுக தேனின் மணத்தை எடுத்துக் கொண்டு வந்து வயல்களில் விளைந்து நிற்கும் கரும்புப் பயிர்களைத் தாலாட்டுகிறது. இலங்கை வேந்தன் இராவணன் சிவபெருமான் வாழும் கயிலை மலையை அசைக்க நந்தியெம்பெருமான் காலால் அழுத்த அதில் சிக்கிக்கொண்டு அவன் கதற, அவனைக் கண்டு இரங்கி அவனுக்கு அருள்செய்த ஐயன் வாழும் கோயில் இருக்கும் திருவையாற்றில், தோப்பில் எருமை மேய்கின்றபோது அங்கு ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காயொன்று கீழே விழ, அதனைக் கண்டு பயந்து அந்த எருமை ஓடி நெல்வயலை மிதித்துத் துவம்சம் செய்துப் பின் தாமரை முளைத்த வயலில் சென்று படியும் ஐயாறு. இப்படி இயற்கை அழகும், வளமும், ஆடலும், பாடலும் நிறைந்து நிற்கின்றது திருவையாறு.

இவையெல்லாம் திருஞானசம்பந்தர் பார்த்து ரசித்துப் பாடிய தேவார பாடல்களில் காணப்படும் வருணனைகளாகும்.

திருநாவுக்கரசர் தேவாரம்

இனி திருநாவுக்கரசப் பெருமான் திருவையாற்றைக் கண்ட காட்சியினைச் சிறிது காணலாம். இவர் திருவையாறு பற்றி பன்னிரெண்டு திருப்பதிகங்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே நான்காம் திருமுறையில் எட்டும், ஐந்தாம் திருமுறையில் இரண்டும், ஆறாம் திருமுறையில் இரண்டுமாக அமைந்துள்ளன. இவ்வூரின் வளங்கள் அனைத்தையும், கலை மேன்மையையும், இறைவன் பெருமையையும் அழகாக எடுத்துக் கூறுகிறார். திருவையாற்றைச் சுற்றி காவிரியின் கிளை நதிகள் பாய்ந்து நீர்வளம் மிக்கதாகச் செய்வதாகக் குறிப்பிடுகிறார். இவை எல்லாவற்றையும் விட அப்பர் பெருமான் தான் இறக்கும்போது "சிவாய நம:" என்னும் பஞ்சாக்ஷரத்தைத் தம் உள்ளத்தில் தோன்ற அருள் புரிய வேண்டுமென்கிறார்.

வாகீசப் பெருந்தகை கயிலை மலையைக் கண்டு சிவபெருமானைத் தரிசிக்க விரும்பி வடக்கு நோக்கி கால்கள் தேய நடந்து முடியாமல், பின் கைகளால் ஊன்றி நகரவும் கைகள் சிதைந்து போகப் பின் மார்பால் தவழ்ந்து செல்ல மார்பும் நைந்து போக, உடல் ஊன் கெட உருண்டு புரண்டு செல்லும்போது சிவபெருமான் ஓர் முதியவர் வடிவம் தாங்கி அவர் முன் தோன்றி, 'மானுடர் உடலோடு கயிலை செல்வது முடியாத செயல் என்பதைச் சொல்ல', கயிலை சென்று தரிசிப்பதன்றி, இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதி பூண்டார் அப்பரடிகள். அப்போது விண்ணிலிருந்து கேட்ட ஒலி "நாவினுக்கு அரசனே! எழுந்திரு!" எனச் சொல்ல, நாவுக்கரசர் எழுந்து "ஐயனே! கயிலையில் நின்ற நின் கோலத்தை நான் தொழும்படி அருள்புரிவீராக!" என்றார். "அம்முறைமை திருவையாற்றில் காண்" என்று பரமேஸ்வரன் குரல் வந்தது. மகிழ்ந்த அப்பர் பெருமான் எழுந்திருந்து அங்கிருந்த குளத்தில் மூழ்கி ஐந்தெழுத்தை ஓதிப்பின் வெளியெழுந்த போது, தான் திருவையாற்றில் எழுந்து நிற்பதையும், எதிரே சிவபெருமான் அம்மையுடன்கூடி ரிஷபத்தின் மீது எழுந்தருளியிருந்து கயிலைக்காட்சி கொடுக்க, சிரம் மேல் கரம்கூப்பித் தொழுது மனமுருகிப் பாடினார்.

திருநாவுக்கரசர் திருவையாற்றில் கைலைக் காட்சியைக் கண்டு பாடிய பதிகம் இது.

மாதர்ப் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

இந்தப் பாடலை சிறந்த நாவலாசிரியரான 'கல்கி' அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" எனும் நெடுங்கதையில் சிவகாமி எனும் நடனப்பெண் சிவபெருமானின் அருளொன்றே உள்ளத்திற்கு ஊக்கமும் உறுதியும் தருவது என்று பாடுவது போலவும், வாழ்க்கையில் புதிய பாதையை நிர்ணயித்துக் கொண்டது போலவும் மிக அருமையாக அமைத்திருக்கிறார். அது போலவே மேலும் சில தேவாரப் பாடல்களையும் சிவகாமி பாடுவதாகத் தன் கதையில் அமைத்திருப்பது மிகவும் சிறப்பு.

இறைவன் திருவையாற்றில் அப்பருக்கு கயிலைக் காட்சியை வழங்கியருளியதை ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை தினத்தன்று இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அதுபற்றிய செய்திகளை இவ்வாலய திருவிழாக்கள் எனும் தலைப்பில் பார்க்கலாம்.

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்

இனி சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இங்கு ஏற்பட்ட அனுபவத்தையும் இப்போது பார்ப்போம். சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் வழியில் திருவையாற்றையடுத்த திருக்கண்டியூர் வந்து பிரம்மசிரக்கண்டீசரைத் தரிசிக்கிறார். அங்கிருந்து ஆலயத்துக்கு வெளியே வந்த போது தொலை தூரத்தில் திருவையாற்று கோபுரம் தெரியக் கண்டார். உடன் வந்த சேரமான் பெருமாள் அங்கு சென்று வழிபடலாம் என்று கூற இருவரும் காவிரிக் கரையை அடைகின்றனர். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. என்ன செய்வோம், இறைவா, தங்களை தரிசிக்க இயலாமல் இந்த ஆறு இப்படி தடைசெய்கின்றதே என்று: "பரவும் பரிசொன்றறியேன் நான், பண்டே உம்மைப் பயிலாதேன்" எனும் பாடலைப் பாடுகின்றார். இறைவர் மனமிரங்கி காவிரி வெள்ளம் விலகி வழிவிட சுந்தரர் அவ்வழியே சென்று ஐயாறப்பரை தரிசித்தார். சுந்தரர் ஆற்றின் தென் கரையில் நின்றுகொண்டு பதிகம் பாடிய பொழுது "ஐயாறடிகளோ" என்று விளிக்க, வடகரையில் எழுந்தருளியிருக்கும் விநாயப்பெருமான் அவருக்கு விடையிறுக்கும் விதமாக பதில் ஓலமிட்டதாகவும், அதுமுதல் அவருக்கு 'ஓலமிட்ட விநாயார்' என்று பெயர் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இந்த ஓலமிட்ட விநாயகர் சந்நிதியை ஆலயத்தின் தெற்குக் கோபுர வாயிலில், ஆட்கொண்டார் சந்நிதிக்குப் பக்கத்தில் இப்போதும் தரிசித்து வழிபடலாம்.

மாணிக்கவாசகர் திருவாசகப் பாடல்

மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் குறிப்பிடும் இந்தப் பகுதி படித்து இன்புறத்தக்கது.

"கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை யெங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்கா ணம்மானாய்"

கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்கவும், காதில் அணிந்திருக்கும் தோடுகள் அசையவும், கருமையான கூந்தல் புரளவும், அணிந்துள்ள மலர்களிலிருந்து தேன் பெருகவும், அதை நாடிய வண்டுகள் ரீங்காரமிடவும் செய்கின்றன. சிவந்த நிறமுடையவனை, வெண்ணீறு அணிந்தவனை, நெருங்கிப் பழகுவோராலும் முழுதும் அறிந்துகொள்ள முடியாதவாறு ஆழ்ந்த இயற்கை நடைமுறைத் திட்டத்தை உடையானை, எங்கும் நிறைந்திருப்பவனை, அன்பர்க்கு மெய்ப்பொருளாய் இருப்பவனை, அன்பர் அல்லாதார்க்கு இருந்தும் இல்லாதவன் போன்றவனை, அறிவுப் பொருளை, திருவையாற்றில் எழுந்தருளியிருப்பவனைப் பாடி அம்மானை ஆடுவோமாக!

இது எட்டாம் திருமுறையாக விளங்குகின்றது. இவர்கள் தவிர அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் தன் 11ஆம் திருமுறையில், பட்டினத்தடிகள், ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். 'திருவையாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி' எனும் பாடலிலும் திருவையாற்றுப் பெருமை பேசப்படுகின்றது.

திருவையாற்றின் சிறப்புக்கு மகுடமாக விளங்குவது இங்கு நடைபெறும் "சப்தஸ்தானம்" என்று வழங்கும் ஏழூர் திருவிழாவாகும். திருவையாற்றைச் சுற்றிலும் அமைந்துள்ள ஏழு ஊர்கள், அதாவது திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இவ்வேழூருக்கும் உலா வரும் சப்தஸ்தானத் திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருநந்தியெம்பெருமான் திருமழபாடியில் நடைபெற்ற திருமணத்தையடுத்து சுயம்பிரகாசை யம்மையோடு வெட்டிவேர் சிவிகையில் திருவையாறு வந்து, இங்கிருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியோடு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பல்லக்கிலும் இந்த ஏழு ஊர்களுக்கும் சென்று, அந்தந்த தலமூர்த்திகளோடு சேர்ந்து ஏழு ஊர்களுக்கும் வலம் வரும் காட்சியே சப்தஸ்தான விழாவாகும். இத்திருவிழாக் காலத்தில் திருவையாறு மக்கள்வெள்ளத்தில் மூழ்கிப் போகும்.!!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி.!!
சீரார் திருவையாறா போற்றி போற்றி.!!

No comments:

Post a Comment