Wednesday, July 22, 2015

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம்,கர்ம வினையும் கடக்கும் வழிகளும் 1


வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - மனம்
முந்தைய பதிவுகளில் இரண்டு தளங்களான உடல்,ப்ராணன் பற்றி ஓரளவு தெளிவு பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.இப்பொழுது அதற்கு அடுத்த தளமான மனம் பற்றி பார்க்கலாம்.
பிராணனை விட அதி நுட்பமான சக்தி நிறைந்த அடுக்கே மனம்,மனம் செயல்படும் வரை மட்டுமே நம் உடலில் உயிர் நிற்கும்.
உதாரணமாக:-
உடல்+மனம் = உயிர்
உடல்-மனம் = பிணம்
கோமா நிலையில் உள்ளவர்களுக்கும் கூட மனம் உறக்க நிலையில் இருக்கும்.மனம் அறவே தன் செயல்பாட்டை நிறுத்தி விட்டால் மரணம் ஏற்படும்.
இத்தனை அவசியமான யாவற்றையும் அறியவும்,அறிந்ததை நினைவில் இருத்தவும்,அவற்றைத் தேவையான தருணங்களில் நினைவு கூர்ந்து செயல்படவும் மனமே அவசியம்.மனம் இன்றி எதுவும் செய்ய முடியாது.
அநேகர் மனதை அடக்க வேண்டும் என்று கடினமாக முயற்சிக்கின்றனர் அப்படி அடக்கினால் மட்டுமே இறைவனை அறியவும்,ஆன்மீகத்தில் உயரவும் முடியும் என்று நினைக்கின்றனர்.உண்மை அதுவல்ல.மனதை அடக்க முடியாது அப்படி அடக்கியதாக நினைத்துக் கொண்டாலும் அது தற்காலிகமானதுதானே தவிர நிரந்தரமல்ல.
மனம் தன் இயல்பில் வெறும் களிமண் போன்றது அது நன்மையானதோ தீமையானதோ இல்லை அது நடுநிலையானது.நாம் வாழும் முறையில் இருந்தே அது தன்னை சரியாகவோ,தவறாகவோ வடிவமைத்துக் கொள்கிறது.
உதாரணமாக நாம் ஒரு நபரை அடிக்கின்றோம் நாமே இறுதியில் வெற்றி பெற்றோம் என வைத்துக்கொள்வோம்.இதில் நமக்கு அந்நியமான ஒருவரை தாக்கி வெற்றி பெற்றோம்.இதற்கு பதிலாக கண்ணாடியில் தெரியும் நம் உருவையே எதிரியாக பாவித்து அதை தாக்கினால் நம் கைகளில் கண்ணாடி உடைந்ததால் காயம் ஏற்படுமே தவிர அந்த உருவம் எந்த பாதிப்பும் இன்றி முன்போலவே இருக்கும்.அதுபோல நாம் மனதை வலிந்து அடக்கினால் மூளைக்கோளாறு,இயல்பாக வாழமுடியாமல் போய் வாழ்வே சாபமாகும்.
நண்பன் நம் சொல்லை கேட்பானா அல்லது எதிரி நம் சொல்லை கேட்பானா.நண்பனே கேட்பான்.எனவே முதலில் செய்ய வேண்டியது முறையான பயிற்சிகளின் மூலம் மனதை நட்பாக்கிக் கொள்ளவேண்டும்.
மனதை ஏதோ எதிரியாகவும்,மிக தவறானதாகவும் பார்ப்பதை நிறுத்தவேண்டும்.இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர் வினை உண்டு எனவே மனதை எதிரியாக நினைத்தால் அது உங்களிடமும் எதிர் இயல்பாக செயல்பட்டு இணக்கமற்ற சூழலை உண்டாக்கும்.
மனம் அதன் செயல்பாடுகள் பற்றிய தெளிவு இல்லையென்றால் சரியாக ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கி நடத்தவோ,வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடவோ முடியாது.
கர்மவினை:-
கர்ம வினை மூன்று வகை.
1.சஞ்சித கர்மா
2.பிராரப்த கர்மா
3.ஆகாம்ய கர்மா
1.சஞ்சித கர்மா - மனிதனாய்,மிருகமாய்,மரமாய் என பல்லாயிரம் பிறவிகளில் நாம் பிறந்து வாழ்ந்த வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களின் சேர்க்கையே சஞ்சித கர்மா.
2.பிராரப்த கர்மா - இந்தப் பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வந்த வினைகள் .
3.ஆகாம்ய கர்மா - இந்த ஜென்மத்தில் புதிதாக சேர்க்கும் வினைகள்.
உதாரணமாக:-
சஞ்சித கர்மா எனப்படும் முற்பிறவிகளில் நீங்கள் செய்த நன்மை தீமைகளின் கணக்கு 80,000 நன்மைகள் 20,000 தீமைகள் என்று வைத்துக்கொள்வோம்.மொத்தம் 1 லட்சம் பதிவுகள்.
எப்படி 3 வேளைக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் உண்ண முடியாதோ அதுபோல் பல ஜென்மங்களில் செய்த கர்மாக்களை மொத்தமாய் இந்த ஒரு பிறவியிலேயே கழிக்கமுடியாது.எனவே அதில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொண்டு (உதாரணமாக:ஒரு பத்தாயிரம் பதிவுகள்=8,000 நன்மைகள்,2,000 தீமைகள்) இந்த ஜென்மத்தை அனுபவிக்கப் பிறந்து வருகிறோம் இது பிராரப்த கர்மா.
இந்த ப்ராரப்த கர்மாவில் உள்ள பதிவுகளின்படி நன்மை ,தீமைகள் நம் வாழ்வில் நடக்கும்.அவை நடப்பதற்கான சூழல்,மற்றும் எண்ணங்களை ஏற்படுத்துவதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.
எனவே தெய்வங்களையோ நவக்ரஹங்களையோ திட்டுவதோ, குறை கூருவதோ கூடாது.நாம் கொண்டு வந்த நமது சொந்த (கர்மா) செயல்களுக்கான பலன்களை நாம் அனுபவித்துக் கழிக்க உதவுகின்றனரே அன்றி நம்மை வதைப்பது அவர்களின் நோக்கமல்ல.உதாரணமாக:நாம் பூர்வ ஜன்மத்தில் ஒருவருக்கு மோசமான உடல்நிலையால் பாதிப்படைந்த சமயம் உதவி செய்திருக்கிறோம் என்றால் நமது ப்ராரப்த கர்மத்தில் அந்த பதிவு இருந்தால் அதற்கான நன்மை நமக்கும் தேவையான நேரத்தில் யாரிடமேனும் இருந்து உதவி வரும்.இதுபோல் நன்மை தீமைகளை அடையச் செய்வதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.எனவே அவர்களுக்கு கர்ம தாதா எனப்பெயர்.
இங்கு தான் நாம் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வருகிறது.
பிறப்பு எடுத்து வந்தது முன்வினையில் ஒரு பகுதியை கழிக்க ஆனால் நாம் இந்தப் பிறவியில் மேலும் வினைகளை கூட்டவே செய்கிறோம்.அப்படி கூடும் வினைகளுக்கே ஆகாம்ய கர்மா என்று பெயர்.
உதாரணமாக:-
சஞ்சித கர்மா = 1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.
பிராரப்த கர்மா =10 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்.
எஞ்சிய கர்மா சஞ்சிதத்தில் = 90000 இருக்கும்.
மனமுதிர்ச்சி இன்றியும் , இறை வழிபாடு என்ற பெயரிலும் எந்த துன்பத்தையும் அனுபவிக்க மாட்டேன் அப்படி அனுபவித்தால் நீ என்ன வலிமையான தெய்வம் என்று இஷ்ட தெய்வத்தையோ இறைவனையோ குறை கூறி நிந்தனை செய்யும் அளவுக்கு மன முதிர்ச்சி இன்றி குழந்தைகளாகவே இருக்கிறோம்.என்னதான் இறைவழிபாடு செய்தலும் சில கர்மாக்களின் பலனை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும்.இறைவழிபாடு அந்த கர்மாக்களைத் தள்ளி வைக்கும் ஆனால் முழுமையாகக் காப்பாற்றாது இன்றில்லாவிட்டால் இன்னொரு நாள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும்.தவமும் தியானமும் மட்டுமே அவற்றைக் கடக்க உதவும்.
நமக்கு சிறு வயது முதலே நம் பெரியவர்கள் மற்றும் சமுதாயத்தால் அனேக விஷயங்கள் இப்படி,இதெல்லாம் செய்யக்கூடாது எனக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி, எதைச் செய்யவேண்டும் ,சரியாக வாழ்வது எப்படி கற்பிக்கக் கூடியவர்கள் நம் குடும்பத்திலோ,வெளியிலோ யார் உள்ளார்கள் என்று தேடித்தான் பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment