Thursday, July 23, 2015

அகத்தியர் ஈயாய் இறைவன் வழிப்பட்ட -திருஈய்கோய்மலை :



>> திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள தொட்டியத்திற்கும், முசிறிக்கும் நடுவில் அமைந்து உள்ளது திருஈங்கோய்மலை திருத்தலம்...மூலவர் மரகதாலேஸ்வரர் மரகதம் போன்று பச்சை நிறத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் செய்கிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பிகை என்பதாகும். நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்... திரு ஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 63வது தலம் ஆகும்.
>> ஒரு சமயம் தென்திசை வந்த அகத்தியர் சிவபெருமானை வழிபட இந்த கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது கோவில் நடை அடைக்கப்பட்டு விட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவபெருமானை அகத்தியர் வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடியபோது, ‘ஈ’ வடிவம் பெற்றார். பின்னர் இந்த மலை மீது பறந்து வந்து கோவில் சன்னதியில் கதவின் சாவித் துவாரம் வழியாக உள்ளே நுழைந்து சுவாமியை தரிசனம் செய்தார். பிறகு மீண்டும் தனது பழைய வடிவம் பெற்று திரும்பினார் என்பது தல புராணம் சொல்லும் செய்தி .

>> அகத்தியர் ‘ஈ’ வடிவில் வழிபட்ட தலம் என்பதால் ‘திருஈங்கோய்மலை’ என்றும், சிவனுக்கு ‘ஈங்கோய்நாதர்’ என்றும் பெயர் உண்டு. அகத்தியர் வழிபட்டதற்கு பின்னர் திருஞானசம்பந்தர் இங்கு நேரில் வந்து வழிபட்டு ‘திருஈங்கோய்மலையாரே’ என்று ஆரம்பிக்கும் 10 பாடல்களையும், நக்கீரர் 70 பாடல்களையும் பாடியுள்ளனர்.
>> அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது.சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது 'ஈங்கோய் எழுபது ' என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.
>> பிருகு முனிவர் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வழிபடாதவர். ஈசனின் அருகில் வீற்றிருக்கும் அம்பாளைக் கூட தரிசனம் செய்ய மாட்டார். தனது சக்தியே, அம்பாள் தான் என்றிருக்கும் போது, பார்வதி தேவியை பிருகு முனிவர் தரிசனம் செய்யாமல் செல்வதால் பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று கருதிய சிவபெருமான், பிருகு முனிவர் மீது அம்பாள் கோபப்படும்படி செய்தார். இந்த திருவிளையாடலுக்கு கட்டுப்பட்ட பார்வதிதேவி, பூலோகம் வந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஈங்கோய்மலைக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். தவத்தின் வலிமையை மெச்சி, அம்பாளுக்கு தனது உடலின் இடப்பாகத்தையும் தருவதாக இத்தலத்தில் அம்பாளுக்கு ஈசன் உறுதி அளித்தார். சிவனுடன் சக்தி இரண்டற கலந்த சிவ-சக்தி சொருபத்தை பிருகு முனிவர்க்கு உணர்த்திய தலம் இது ..
>> அடிவாரத்தில் பழமைவாய்ந்த சிவாலயத்தில் இறைவன் கைலாய நாதர்-அம்பாள் ஸ்ரீ கருணாகடாஸ்சி காட்சி தருகிறார்கள் .அதற்கு அருகாமையில் போகர் சன்னதி உள்ளது.. பக்கத்தில் வெட்டவெளியில் விநாயக பெருமான் அருளுகிறார். மலைமேல் இறைவன் சன்னதி அருகே அகத்தியர் திருஉருவம் உள்ளது ..அன்னை மரகதாம்பிகையை சுற்றிலும் சித்தர்கள் போற்றும் சக்தி வடிவங்கள் அழகாய் உள்ளது . வழிபட வரும் அடியார்கள் குறைவாய் உள்ளது .இறை திருவுருவங்களுக்கும் கவனிப்பு குறைவாய் உள்ளது ..
>> அமைவிடம் : திருச்சி - சேலம் பெருவழிப் பாதையில் முசிறிக்கு அண்மையில் இத்தலம் உள்ளது. திருச்சி - நாமக்கல் - சேலம் பேருந்துகளில் செல்லலாம்.இந்த கோவிலுக்கு தொட்டியத்தில் இருந்தும், முசிறியில் இருந்தும் சென்று வரலாம். முசிறியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு முசிறியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு.

No comments:

Post a Comment