Tuesday, January 19, 2010

PT

பி.டி. கத்தரிக்காய்: கர்நாடகமும் எதிர்ப்பு
செவ்வாய், 19 ஜனவரி 2010( 13:55 IST )


FILEமரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்தரிக்காய்க்கு தமிழ்நாடு அரசு ‌சிவ‌ப்பு க‌ம்பள‌ம் விரித்து வரவேற்பு கொடுக்கும் நிலையில், அதற்கு கர்நாடக அரசு வேளான் துறை மாநில அரசிற்கு அளித்த அறிக்கையில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கும் பயிரிடுவதற்கும் மத்திய அரசின் மரபணு மாற்ற விதைகளுக்கான அனுமதிக் குழு ஏற்பளித்துள்ள நிலையில், அது குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க மக்கள் சந்திப்புகளை மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த மக்கள் சந்திப்பு வரும் 26ஆம் தேதி கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி அளிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கர்நாடக அரசிற்கு அம்மாநில வேளாண்துறை அறிவுரையளித்துள்ளது.

“கத்தரிக்காய் ஒரு தோட்டப்பயிர், மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தி கத்தரிக்காய் சாகுபடி செய்யும் அளவிற்கு பூச்சிப் புழு பாதிப்பு அதிகமில்லை. பி.டி. கத்தரிக்காய் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பாக வேளாண் துறையிலேயே கருத்து மாறுபாடு இருந்தது. அதன் காரணமாகவே அறிக்கை அளிப்பதில் தாமத‌ம் ஏற்பட்டது” என்று கர்நாடக அரசின் வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளேடு கூறியுள்ளது.

எவ்வளவு தெளிவான அணுகுமுறை! மரபணு மாற்ற பயிர்கள் தொடர்பாக தங்களுக்குள் கருத்து மாறுபாடு இருந்தாலும், அரசிற்கு ஆலோசனை வழங்கும்போது, ‘அவசரம் காட்ட வேண்டாம்’ என்று அறிவுறுத்தியிருப்பது அம்மாநில வேளாண் துறை கர்நாடக விவசாயிகள் மீது கொண்டுள்ள பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில்... தமிழக அரசு முதல் வேளாண் பல்கலைக் கழகம் வரை எல்லோரும் ஒருமித்த குரலில் வா பி.டி. விதையே வா என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கின்றனர்.

சட்டப் பேரவையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், “பி.டி. கத்தரிக்காய் விதைகளை பயன்படுத்தலாம், அதனால் தீங்கேதும் ஏற்பட்டால் பிறகு நீதிமன்றத்திற்கு போகலாம்” என்று கூறுகிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தினால் நன்மை ஏற்படுமா, தீதாகுமா என்பது குறித்து உறுதியான முடிவு செய்யாமலேயே, விதையுங்கள் பார்க்கலாம் என்று பொறுப்பற்று பேசினார் தமிழக வேளாண் அமைச்சர்.


FILEமரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை கோவையிலுள்ள வேளாண் பல்கலை விதைத்து சோதனை செய்து பார்த்ததாகவும், கத்தரிக்காய்கள் விளைந்த பிறகு, அதில் பூச்சி அடித்த கத்தரிக்காய்களை (!) ஆட்களை வைத்துப் பிரித்தார்கள் என்றும், அவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் சென்னையில் நடந்த கருத்தரங்கில் கூறினார்.

கத்தரிக்காயைத் தாக்கும் தண்டுப் புழுவைத் தடுக்கும் நோக்கிலேயே பி.டி. கத்தரிக்காய் அறிமுகப்படுத்தப்படுவதாக, அதனை கண்டுபிடித்த மான்சாண்டோ நிறுவனம் கூறுகிறது. ஆனால் சோதனை சாகுபடியில் அந்தக் கத்தரிக்காய்களையும் தண்டுப் புழுத் தாக்கியுள்ளது என்ற விவரத்தை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசோ அல்லது வேளாண் பல்கலைக் கழகமோ வெளியிடாதது ஏன்?

கத்தரிக்காயை அதிகமாகப் பயிரிடும் மேற்கு வங்கமும், பீகாரும் பி.டி. கத்தரிக்காயை நிராகரித்து விட்டன. கர்நாடக மாநிலம் அவசரம் காட்ட வேண்டாம் என்கிறது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு மட்டும் விதையுங்கள் பார்க்கலாம் என்கிறது.
thanks:tamilwebdunia 19.1.2010

No comments:

Post a Comment