எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
போகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர், கொங்கணர்
கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார்.
தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது... திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க... சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது.
அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது.
இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார். ‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர். ‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’ ‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’ ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது..... ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’ ‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா...? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும்.
பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி... தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’ _ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது.
அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது. ‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்...’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன. அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின.
அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...! ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம்.
உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே...! இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது.
பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார். இப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘நான் ஒரு தவசியே இல்லை.... நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது...? ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்!’ என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது. மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது.
இவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்... அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும்.
துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்றார். ‘நான்’ என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும், மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது.
கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள். கற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்...’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்க, ஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது.
ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது! அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம்.
தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள்.
காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார். ஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல்! அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறு’ என்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள், வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர்.
கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது. அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்.நன்றி:www.ta.wikipedia.com 108 சித்தர்கள்
arumaiyana pathivu. Neenda vilakkathukku nandri
ReplyDelete