Tuesday, April 12, 2016

ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம்!


கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!

யார் கடந்த மூன்று பிறவிகளாக ஈசனை மட்டும் வழிபட்டு வந்தார்களோ,அவர்களும்;

யார் கடந்த மூன்று பிறவிகளுக்குள் ஒரே ஒரு பிறவியிலாவது சித்தர் ஒருவரிடம் சீடராக இருந்தாரோ அவர்களும்;
மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பது சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் சித்தரின் வாக்கு ஆகும்;

அசைவம் சாப்பிடுவதும், மது அருந்துவதும்,புகை,போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தெய்வீக முயற்சிகளையும் தகர்த்துவிடும்;சுலபமாக பிறரின் பொறாமை அல்லது கருமார்க்கத்தின்(மாந்திரீகம்) தாக்குதலுக்குள் வர வாய்ப்புக்கள் அதிகம்;

எனவே,யார் இவைகளை நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும் பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;

தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.




No comments:

Post a Comment