Thursday, January 6, 2011

Problems of MNC to INDIA

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாம் அதிகமாகப் பேசியிருக்கிறோம், சாதி - குறிப்பாக பிராமணர் ஆதிக்கம் என்பது பற்றி. பெரியார்கள் போன்றவர்களெல்லாம் அதற்கான தீவிர முயற்சி எடுத்தார்கள் என்றெல்லாம் பார்க்கிறோம். ஆனாலும் கூட ஆரியத்தினுடைய செல்வாக்கு என்பது பெரும் அளவிற்கு இன்று வரை குறைந்த மாதிரி தெரியவில்லை. பல அம்சங்களில், பல கூறுகளில் அவர்களுடைய ஆதிக்கம் நிலவுகிறது. கலைஞர் இவற்றை முற்றாக மறுக்கிறாரா என்று சொன்னால், அவ்வப்போது சில விமர்சனங்களை முன்வைப்பாரோயொழிய, எந்த வகையிலும் அதை அவர் உதறிக்கொள்வதாகவோ, மறுப்பதாகவோ தெரியவில்லை.







இதுஒருபுறமிருக்கட்டும், அடிப்படையில் நான் சொல்வது, ஆதிக்கம் எந்த வடிவத்திலும் வேண்டாம் என்று சொன்னால், இந்து மதமோ இன்னொரு மதமோ, பிரமாண சாதியோ வேறுவொரு வகையான சாதியோ, அது ஒரு சமயம் ரெட்டியாராக இருக்கலாம், மற்றவர்களாக இருக்கலாம், கவுண்டராக இருக்கலாம் அந்த ஆதிக்கமும் இங்கு வேண்டியதில்லை. அதேபோல ஆண் ஆதிக்கம் என்று சொல்லக்கூடியது பெண்ணை அடிமைப்படுத்த வேண்டாம். ஆதிவாசிகளை நாம் அடிமைப்படுத்த வேண்டாம். எந்த ஆதிக்கமும் தேவையில்லை, அப்பொழுதுதான் மனித விடுதலை சாத்தியம் என்பது உண்மைதான். ஆனால் நிலவக்கூடியதை பார்த்தீர்களானால், ஒன்றைச் சொல்லலாம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இங்கு வருகின்றன, இந்திய முதலாளிகள் பெருமளவிற்கு அவர்களோடு ஒத்துழைக்கிறார்கள் என்றால், அதனுடைய விளைவுகள் என்னவென்று பாருங்கள்.






இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டால், பேராசிரியப் பெருமக்கள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. சிறு முதலாளிகள் வரை இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. காவல்துறையைச் சார்ந்தவர்கள் இந்த ஆதிக்கத்திற்கு எதிராக இல்லை. எல்லோருமே எப்படியாவது ஒரு வகையில் ஏவல் செய்யக்கூடியவர்களாக - ஏனென்று சொன்னால் நிறைய அதிக கூலி கிடைக்கிறது, அதிக லாபம் கிடைக்கிறது, பதவி உயர்வு கிடைக்கிறது, சம்பாத்தியம் அதிகரிக்கின்றது. அதேபோல கணினி தொழில்நுட்பம் என்று சொல்லி பெரிய அளவிற்கு, கலைஞர் போன்றவர்களோட தூண்டுதலோடு நடைபெற்று கடைசியில், லட்சங்களை சம்பாதிக்கலாம் என்ற கனவோடு இளைஞர்கள் மேற்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.






அடிப்படையில் பார்த்தீர்களென்றால், ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்து, தமிழை ஓரத்திற்கு ஒதுக்கினால் என்ன ஆகிறது என்று பார்த்தால் தமிழுக்கு பள்ளிக்கூடங்களில் மரியாதை இல்லை. தமிழ் வரலாறு பற்றி - நான் இப்படிச் சொல்ல விரும்புகிறேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் பசங்களுக்கு திருக்குறள் மீது ஏதாவது பற்று இருக்குமா? தேவாரத்தின் மீது ஏதாவது அக்கறை ஏற்படுமா? சங்க இலக்கியங்களைப் படிப்பார்களா? தமிழ்நாட்டினுடைய இயற்கை வளங்களைப் பற்றி காவிரியைப் பற்றி அக்கறை உண்டா? தமிழ்நாட்டு விளைச்சலைப பற்றி அக்கறை உண்டா? கிராமத்து மக்கள் மீது ஈடுபாடு ஏற்படுமா?






ஆங்கிலம், அதிகாரம், பதவி, பணம் என்கின்ற உணர்வையே மையப்படுத்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிவற்றில் கல்வி அமைத்திருக்கும் போது, தமிழ் மக்களை, தமிழ் நிலத்தை, தமிழ்நாட்டு இயற்கையை, தமிழ்நாட்டில் வாழக்கூடிய பழங்குடியின மக்களை, தமிழ்நாட்டுப் பெண்களை, குழந்தைகளை யார் பொருட்படுத்துவார்கள். இந்த இளைஞர்கள் மற்றவர்களெல்லாம் எந்த வகையானப் பொறுப்புகளை எடுத்துக்கொள்வார்கள்? அரசு இதையெல்லாம் ஊக்குவிக்கும்போது பார்த்தீர்களானால், தமிழ்நாடு எதிர்காலத்தில் என்ன ஆகும்?






இப்பொழுது தமிழ்நாடு எவன் எவனுக்கோ அடிமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்த நிலைமை இன்னும் கடுமையாகும்...



No comments:

Post a Comment