Thursday, July 12, 2012

இலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு!!!



கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால்,இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து,காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான்.இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி,வழிபட்டான்.பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால்,சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார்.வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்;பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு  இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார்.
இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார்.இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார்.பைரவ சன்னதியின் கபோத பகுதி கூடுகளில் பதினைந்து வகையான பைரவரின் திருக்கோலங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு சில கோவில்களில் மட்டுமே இருபுறமும் பைரவரின் பின்னால் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார்;அப்படிப்பட்ட பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர் ஆவார். இப்படிப்பட்ட பைரவரை 8 தேய்பிறை அஷ்டமிகளில் வரும் இராகு காலத்தில் வழிபட்டு வந்தாலே ஏவல்,பில்லி,சூனியம்,பேய்,பிசாசு முதலியவற்றினால் ஏற்பட்ட பிரச்னைகள் அடியோடு விலகிவிடும் என்று பைரவ உபாசகர்கள் கண்டறிந்த உண்மை ஆகும்.
இன்னொரு சிறப்பும் இலுப்பைக்குடி பைரவருக்கு உண்டு;இன்றைய வேதியியலின் முன்னோடித்துறையான ரசவாதத்தில் நமது சித்தர்கள் அளவற்ற ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்;அப்படிப்பட்ட ரசவாத ஆர்வத்தில் கொங்கண சித்தர் ஈடுபட்டிருந்தார்.அவருக்கு ரசவாதம் மூலமாக தங்கம் தயாரிக்கும் எண்ணம் இருந்தது;எனவே,அவர் கன்னியாக்குமரி அருகில் இருக்கும் மருத்துவாழ்மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் காகபுஜண்டரிடம் மாற்றுக்குறையாத தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுத்தரும்படி கேட்டார்.
அதற்கு காகபுஜண்டர் உயர்ந்த மாற்றுத்தங்கம் என்பது இறைவன் அருளும் வரம்! எனவே,தாங்கள் பூர்வஜன்மத்தில் தவமியற்றிய தலம் வடுகநாதபுரிக்கு அருகில் இருக்கிறது;அது இலுப்பைக்காடாகத் தோன்றும்;அங்கு தாங்கள் சென்று தவமியற்றினால் இறையருளால் கைகூடும் என்று வழிகாட்டியிருக்கிறார்.அது போன்றே கொங்கணரும் வடுகநாதபுரி என்ற வயிரவன்பட்டிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு பல ஆண்டுகள் தவம் செய்துவரும்போது,ஒரு குறிப்பிட்ட தவநிலையை எட்டியதும்,ஒரு ரிஷி  வடிவத்தில் பைரவப்பெருமான் வந்து,கொங்கணருக்கு ரசவாதம் கற்றுக்கொடுத்தார்.(நாம் பயன்படுத்தும் தங்கம் 24 காரட் தான் தரம் இருக்கும்)பைரவரின் அருளாசியால்,கொங்கணர் 500 காரட் தங்கம் ரசவாதத்தின் மூலமாக செய்திருக்கிறார்.கொங்கணருக்கு தங்கத்தின் மீதான ஆசை அதிகரித்துவிட்டது.கொங்கணர்  பைரவரின் அருளால் உயர்ந்த மாற்றுத்தங்கம் தயாரித்த இடமே இன்று மாத்தூர் என்ற பெயரில்  இருக்கிறது.பைரவப் பெருமான் தான் ரிஷி போல வந்திருக்கிறார் என்பதை கொங்கணர் உணரவில்லை;எனவே,பைரவப்பெருமான் திருவருள் புரிய திரு உள்ளம் கொண்டார்.
கொங்கணரிடம் இலுப்பைக்காடு போகலாம்;அங்கு சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றார்.இலுப்பைக்காடு என்ற சொல்லைக் கேட்டதும்,அவருக்கு  காகபுஜண்டர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது;அப்பெயரைக் கேட்ட உடனேயே அவரது மெய் சிலிர்த்தது.கொங்கணருக்கு அந்த கணத்திலேயே பைரவத் திருமேனியாகவே காட்சி கொடுத்தார்;10,00,00,000 சூரியப் பிரகாசத்துடன்பைரவப்பெருமானின் காட்சி கிடைத்ததும், கொங்கணருக்கு ஆசைகள் முற்றிலும் அற்றுப்போனது;அவர் தொட்டதெல்லாம் தங்கமாயிற்று;அட்டமாசித்திகள் அனைத்தும் கைகூடியது;நீண்டகால வாழ்க்கையும் மரணமில்லாதப் பெருவாழ்வும் சித்தியாகியது;அவரும் ஜோதி மயமாகி இலுப்பைக்குடியில் ஜீவசமாதியானார்;தமிழகக் கோவில்களில் இலுப்பைக்குடியில் மட்டுமே கொங்கண சித்தர்,வில்வ விருட்சத்து அடியில் பூஜை செய்யும் விதமான சிற்பம் இருக்கிறது;இக்கோவிலில் மட்டுமே கொங்கண சித்தரின் படிமம் இருக்கிறது.
இங்கே ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் அல்லது ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வந்து வழிபாடு செய்துவந்தால் பைரவரின் அருள் கிடைக்கும்;அப்படி வரும்போது பைரவப் பெருமானுக்கு செவ்வரளிமாலை,சந்தனாதித்தைலம்,புனுகு,அத்தர்,ஜவ்வாது போன்றவைகளுடன் வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் பைரவப்பெருமானின் அருள் கிட்டும்.பூர்வ புண்ணியம் இருப்பவர்களுக்கே இந்தப்பதிவு இணணயப்பெருங்கடலின் வழியே அகப்படும்;தகுதி இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வழிபாட்டைச் செய்ய இயலும்.
(படத்தில் இருப்பது இலுப்பைக்குடி அருள் மிகு           சுயம்பிரகாச ஈஸ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோவில் வாசல்!!!)
ஓம்சிவசிவஓம்

1 comment: