Tuesday, July 31, 2012

சைவ சமயத்தை கேலி செய்யாதீர்!


எஸ்.தில்லை கார்த்திகேயசிவம், வைதிக சைவ சித்தாந்த மகா சபை, நிறுவனர், கள்ளக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், நடிகர் அஜித் நடித்த, "பில்லா-2' என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில், வில்லனாக வரும் நடிகர் இளவரசு, "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்று கூறுவது போல், காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர், புறவாழ்வில் மேற்கண்டவாறு கூறினாலும், அகவாழ்வில் சட்டத்திற்கும், சமூகத்திற்கும் புறம்பான செயல்களை செய்வது போல், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த காட்சி அமைப்பு, "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்று கூறுபவர்கள், புறவாழ்வில் நடிப்பவர்கள்; அகவாழ்க்கையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்பவர்கள் என்ற தவறான எண்ணத்தை, பொது மக்களிடம் ஏற்படுத்துவதாக உள்ளது.இதே போன்று, சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் கமல் நடித்த, "அன்பே சிவம்' படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நாசர், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்று கூறுவது போல், காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில், சைவ சமயம் நாதியற்று உள்ளது என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. இல்லையெனில், மேற்கண்ட காட்சிகளை படங்களில் அமைப்பதற்கு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தைரியம் வருமா?செந்தமிழ் நாட்டின், ஆதி சமயமே சைவம் தான் என்பது, திரு.வி.க., மறைமலையடிகள் போன்றவர்களின் கூற்று.தமிழகத்தில் தோன்றிய அருளாளர்களில், அகத்தியர், திருமூலர் தொடங்கி, 18 சித்தர்கள், நாயன்மார்கள், முற்கால, பிற்கால சோழர்கள், சேர, பாண்டிய மன்னர்களில் பெரும்பான்மையோர், சங்க கால புலவர்களாகிய நக்கீரர், பரணர், கபிலர் உள்ளிட்ட பெரும்பான்மையான புலவர்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார் என, பல அருளாளர்களும் சிவ வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கும், இன்றைக்கும் உள்ள பல அடியார்களுக்கும், "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்ற திருவார்த்தைகள், மகா மந்திரங்களாகும். அதேபோல், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற திருவாக்கு, சைவத்தின் மகுடமாகும்.
இந்த மகா மந்திரங்களை இகழ்வது போல், திரைப்படங்களில் காட்சி அமைக்கும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் தவறை உணர்வரா? திருந்துவரா? thanks:dinamalar 31.7.12

No comments:

Post a Comment