Thursday, September 15, 2011

நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7









எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.





நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.





யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.





குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.





இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.





இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.





தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே



நாவினால் சுட்ட வடு.



என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.





ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.





இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.





அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.





பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது” என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.





சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.





எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.





எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’ கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.





மேலும் படிப்போம்.....





-என்.கணேசன்





நன்றி: வல்லமை













1 comment:

  1. Dear Sir

    Really Fantastic and superb, but, these these does not realise by a human beings Even by Genius people, only after crossing such situation, and after parting only they could Realise

    Really Do U have any "Tools" for this probs? if so please... give it to us


    Palanisamy
    mugapair
    chennai

    ReplyDelete