உருவமில்லா இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததெனும் கருத்தை உருவாக்கி மரங்களை கடவுளின் மறு உருவங்களாக வழிபட்டனர்.
வைணவ ஆச்சாரியர்கள், திருத்தலங்களில் வளர்கிற மரம், செடி, கொடிகளைக் கூட கடவுளின் அடியவர்களாக கருதினர்; "இறைவா ! திருவேங்கட மலையில் நான் ஒரு செண்பக மரமாக வேண்டும்' என்று குலசேகர ஆழ்வார் பெருமாளை வேண்டி நின்றதும் இதனால்தான்.சங்க இலக்கியங்களும் மரங்களை கடவுள்களின் பிம்பங்களாக வகைப்படுத்துகின்றன. புன்னை மரத்திலும், ஆலமரத்திலும் கடவுள் வாழ்வதாக அகநானூறும், நற்றிணையும் கூறுகின்றன. வேம்பு காளி தேவிக்குரியதாக போற்றப்படுகிறது.பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, குபேரன் ஆகியோருக்கு ஆலமரம்; ராமன், நாராயணன் ஆகியோருக்கு துளசி; சிவன், துர்கை, சூரியன் ஆகியோருக்கு வில்வமரம், கிருஷ்ணனுக்கு கடம்ப மரம்; கோவிந்தனுக்கு மாமரம்; வனதேவதைகளுக்கு அரசு, இந்திரனுக்கு அசோக மரம் உகந்ததாக அதர்வன வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்தான், வைணவ கோயில்களில் துளசியும், சிவன் கோயிலில் வில்வ இலைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பனம் பூ, அத்தி பூ, வேப்பம் பூ ஆகிய பூக்களை தங்களின் அரச அடையாளமாக பயன்படுத்தியதாகவும், "காவல் மரம்' வளர்த்து வணங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.அந்த மரத்திற்கு, மன்னனுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் முற்றங்களில் உள்ள தல விருட்சத்தை தொட்டு வணங்குவதும், வீட்டிலுள்ள துளசியை சுற்றி வணங்குவதும், அந்த தெய்வீக பண்பாட்டின் தொடர்ச்சியே.இன்றைக்கு இந்த புனித தன்மை வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காவும் பின்பற்றப்படுகிறதே ஒழிய மரங்களை போற்றி வளர்க்கும் எண்ணம் மறைந்து போனது.
மரங்களை புனிதமாக பார்த்தவர்களின் சந்ததி, இன்று அதை சந்தைப்பொருளாக பார்ப்பதால் இயற்கையின் அரண்களாக இருந்த மரங்கள், விறகாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிப் போனது. நீர், நிலம், காற்று அனைத்தும் விஷமாகி போன இந்த விஞ்ஞான பூமியில், மரங்கள் மட்டுமே மாற்று மருந்து. கோடி மரங்களை வெட்டத் துணிந்த மனித குலம், ஒரு ஜோடி மரங்களைக் கூட நட தயாரில்லை என்கிற வருத்தத்தை பகிர்ந்து கொண்டோமே தவிர அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், கோவையை பசுமையாக்க "ஒரு மரமாவது வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்' என்கிற ஒற்றை கோரிக்கையோடு பசுமை பணியில் களமிறங்கியிருக்கிறது "பசும்புலரி' அமைப்பு.இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஒரு மரம் என்ன ஓராயிரம் மரங்களை வளர்க்க தயார், என்று பசும்பலரிக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார் செலக்கரிச்சல் வேலுச்சாமி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இந்த 76 வயது மனிதர், தன் பென்ஷன் பணம் முழுக்க மரங்களுக்காக செலவிடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக மரம் நட்டு வளர்க்கும் பணி செய்து வரும் இவர், தனி ஆளாக 1000 மரக் கன்றுகளுக்கு மேல் நட்டு மரமாக்கியுள்ளார்.
இனி மரம் நட ஊரில் இடமில்லையே என்கிற கவலையோடு இருந்த இவர், இப்போது "பசும்புலரி'ன் உதவியோடு ஊரைச் சுற்றி மரக்கன்று நடும் பணியை துவக்கியுள்ளார். அவரை சந்தித்த போது ...
நான், பெற்ற தாயை விட அதிகம் நேசிப்பது இயற்கையைதான். ஆசிரியராக பணியாற்றியபோது, பாடத்துடன் சூழல் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றி அதிகம் சொல்லிக் கொடுப்பேன். பணியிலிருந்தபோது, மரம் நடுவதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை; பணி ஓய்வுக்குப் பிறகு, கடந்த இருபதாண்டுகளாக மரம் வளர்ப்பதையே முழு நேர பணியாக செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் என் பணிகளை மக்கள் ஏளனமாக பார்த்தனர்; அதைப்பற்றி கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தேன். பென்ஷன் பணத்தின் பெரும்பகுதியை, மரக்கன்றுகள் வாங்கவும், வேலிக்கான இரும்பு வலை வாங்கவும்தான் செலவு செய்துள்ளேன். இது வறட்சியான பகுதி என்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால் விவசாயக் கிணறுகளிலிருந்து சைக்கிள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, இவற்றை உயிராக்கினேன். அதன் விளைவாகத்தான், செலக்கரிச்சல் இன்று 1000க்கும் மேற்பட்ட மரங்களோடு பசுமையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.தற்போது, மக்கள் என் லட்சியத்தை புரிந்து கொண்டதுடன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கராஜன், பழனிக்கவுண்டர் உள்ளிட்டோர் என்னோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.
சிறுதுளியின் தலைவர் வனிதாமோகன் என்னை தொடர்பு கொண்டு, என் பணியைப் பாராட்டியபோது, அவரிடம் என் ""ஆயுளுக்குள் இன்னும் 1000 மரங்களையாவது நட்டு வளர்க்கும் ஆசை உள்ளது; நடத்தான் இங்கு இடம் இல்லை'' என்றேன். அதற்கு அவர் ""அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; உங்களை போன்றவர்களைத்தான் பசும்புலரி தேடிக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாட்டை பசும்புலரி மூலம் செய்து தருகிறோம்; உங்கள் பணியை துவங்குங்கள்'' என்று உற்சாகப்படுத்தினார்.முதல் கட்டமாக, பசும்புலரி மூலம் 300 மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை தோண்டியுள்ளேன், என்றவர், "நான் பெற்று வளர்த்தது 3 மகள்களை; நட்டு வளர்த்ததோ 1000 மகன்களை; இந்த மரங்கள்தான் என் ஆண் பிள்ளைகள்; என் வாரிசுகள்' என்று உற்சாகமாகக் கூறினார் அந்த பசுமை நாயகன்.
அரசன் மரங்கள் : அரசனுக்குரிய கடமைகளை வரையறுக்கும் "சுக்கிர நீதி' என்னும் பழங்கால சட்ட நூல், அரசன் என்னனென்ன மரங்களை எங்கெங்கு நட்டு வளர்க்கவேண்டும் என விளக்குகிறது.அத்தி, அரசு, ஆல், புளி, மா, சந்தனம், எலுமிச்சை, வெண்கடம்பு, அசோகம், மகிழம், கடவிளம், சிந்தில் விளா, ராசாதனம், புன்னை, பூவரசு, செம்பகம் கடம்பு, கோகாமிரம், சரணம், மாதுளை, கரு, பிடகம், நாரத்தை, சிஞ்சபம், சிம்பு, இலந்தை, வேம்பு, பாலை, பேரீந்து, புன்பு, பேயந்தி, நெல்லி, தாமலம், சிம்பலம், மலையத்தி வெள்ளிக்கொடி, கமுகு, கொம்மபட்டி, தெங்கு, வாழை,மலைஅத்தி, தேக்கு, கொங்கு, பெருவாகை, வெளவுவம், தமாலம், ஆக்கா, வெட்டபாலை, வெள்வேல், மருது, புரசு, ஏழிலைப்பாலை, வன்னி, நந்தி, காஞ்சிரை, குமில், பங்கம்பாலை, திந்துகம், பீசகாரகம், கிடு, சே, சம்பாகம், இலுப்பை போன்ற நல்ல பழங்களையும், நறுமணம் தரும் மலர்களையும் தரக்கூடிய மரங்களை, கிராமங்களில், நகரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்க வேண்டும் என்று "சுக்கிரநீதி' கூறுகிறது.
மரக்கன்று வேண்டுமா?கோவை நகரை "குளுகுளு' நகராக மாற்ற உங்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கலாம்; வெறும் விருப்பம் மட்டும், வெப்பத்தைக் குறைக்காது; பசும்புலரியில் நீங்களும் கை கோர்க்கலாம். உங்கள் வீட்டில் அல்லது அருகிலுள்ள பூங்காவில், ஏதாவது ஓரிடத்தில் ஒரே ஒரு மரக்கன்றை வைத்து வளர்க்க நீங்களும் இன்றே உறுதி எடுக்கலாம். இந்த மண்ணுக்கேற்ற மரத்தை வளர்க்க, நீங்கள் செய்ய வேண்டியது ஓர் அழைப்புதான்.
பசும்புலரியில் இணைந்து செயல்பட விரும்புவோர், மரக்கன்றுகளை இலவசமாக பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்; 0422 - 4241830, இணையதளம்: callcenter.www.greencoimbatore.com
No comments:
Post a Comment