First Published : 24 January 2013 04:35 PM IST
எதற்கும் கீழ்ப்படியாமல் நடப்பவர்களை விட, எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்ளும் நபர்களிடம் தான் பிரச்னை அதிகம். அதெப்படி, எதற்கும் கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்குத்தானே பிரச்னைகள் அதிகம் என்று கேட்டால் அதற்கு பதில், இல்லை என்பதுதான்.
பொதுவாக ஒருவர் யார் சொல்வதையும் கேட்காமல், தான்தோன்றித் தனமாக நடப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் அவர் செய்யும் எந்த செயலுக்கும் அவர் மட்டுமே காரண கர்த்தாவாகிறார். அவர் செய்யும் காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு. எனவே, அவர் தான் செய்யும் காரியம் மீது மிகுந்த அக்கறை காட்டுவார். அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்றும் சிந்தித்து வைத்திருப்பார்.
ஆனால், யார் எது கூறினாலும் அதை தனது மனதுக்குப் பிடிக்காவிட்டாலும், தனது மூளை அது தவறு என்று கூறினாலும் ஒருவர் கூறிவிட்டார் என்பதாலேயே அதனை செய்யும் நபருக்குத்தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதற்குக் காரணமும் இருக்கிறது.
ஒருவர் தனக்குப் பிடிக்காத காரியத்தை மற்றவர்களின் தூண்டுதல் காரணமாக செய்யும் போது அதனை ஆர்வத்துடன் செய்ய இயலாது. மேலும், அதன் சாதக, பாதகம் குறித்து ஆராய்ந்திருக்க மாட்டார். அதே சமயம் அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் உடனடியாக, அதை செய்யச் சொன்னவரின் பேரில் பொறுப்பை போட்டுவிடலாம் என்ற அலட்சியமும் இருக்கும். இந்த சூழ்நிலையில்தான், ஒருவருக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், தனக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது, அவரது மனம் அவரை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும். அவரது மனம் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்.
எனவே, ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அதனை மறுத்துவிடுங்கள். உங்களை செய்யச் சொல்லும் விஷயத்தில் சாதக பாதகங்களை அலசி ஆராயந்து, அதில் சாதகம் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், அதனை செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறி விடுங்கள்.
உங்கள் நண்பர்கள் உங்களை சினிமாவுக்கு அழைக்கிறார்கள். உங்களுக்குப் போக விருப்பமில்லை. ஆனால் நண்பர்களுக்காக செல்வீர்கள். இது ஒரு சாதாரண காரியமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் செய்வதால், காலம், பணம் விரயம் தான் ஏற்படுமேத் தவிர, அது உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.
இது எல்லா விஷயத்துக்குமே பொருந்தும். ஒரு விஷயத்தை நீங்கள் வேண்டாம் என்று நினைத்தால், அதனை தெளிவாக உறுதியாக வேண்டாம் என்று கூற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தவறான கண்ணோட்டம்
ஒருவர் நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை நாம் மறுப்பதால், அவர்களுக்கு எதிராக நாம் செயல்படுவதாக அவர்கள் அர்த்தம் கொண்டுவிடுவார்களோ என்று நீங்கள் நினைப்பீர்கள். அதுதான் தவறு. ஒரு வேலையை ஆரம்பத்திலேயே மறுப்பதால், நம்மிடம் வேலை செய்யச் சொன்னவருக்கு மிகப்பெரிய பாதிப்போ, அதிருப்தியோ ஏற்பட்டுவிடாது. அதையே அரைகுறையாக செய்துவிட்டு, அதன்பிறகு அதனை செய்ய ஆர்வமில்லை என்பதை வெளிப்படுத்தினால்தான் பிரச்னை ஏற்படும். எனவே எதையும் ஆரம்பத்திலேயே தெரிவித்துவிட்டால் நல்லது.
பணிவோடு சொல்லலாம்
முடியாது, வேண்டாம், கூடாது என்பது போன்ற வார்த்தைகளை பணிவோடு கூறலாம். இது தான் காரணம், எனவே என்னால் இதனை செய்ய இயலாது, என் சூழ்நிலை இப்படி இருப்பதால் என்னால் செய்ய முடியாது என்று பணிவோடு ஒரு விஷயத்தை மறுக்கும் போது அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, உறவோ, நட்போ பாதிக்கும் என்று பயப்பட வேண்டாம். சினிமாவுக்கு அழைக்கும் நண்பர்களிடம், இன்று சினிமாவுக்கு வரும் மனநிலையில் நான் இல்லை. அடுத்த முறை உங்களுடன் முதல் ஆளாகா நான் இருப்பேன் என்று கூறி அவர்களை சிரித்த முகத்துடன் சினிமாவுக்கு அனுப்பி வைக்கலாம். இதுபோல ஒரு சூழ்நிலையை சரியான முறையில் வேண்டாம் என்ற பதிலுடன் கொண்டு செல்ல எல்லோராலும் முடியும்.
இதேப்போல விருப்பம் இல்லாத ஒருவரை, ஒரு வேலையை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் தவறுதான். எனவே, உங்களது சுதந்திரத்தில் மற்றவர் தலையீட்டை நிராகரிப்பது போல, மற்றவர் சுதந்திரத்தில் உங்களின் தலையீட்டையும் தவிர்க்கலாம்.நன்றி:தினமணி செய்தித்தாள்
No comments:
Post a Comment