இளைஞர்களின் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவதோடு, அவர்களின் தற்சார்புள்ள வாழ்வுக்கு வழிகாட்டுவதிலும் அரும்பணியாற்றுகிறது நேரு யுவ கேந்திரா (என்.ஒய்.கே.). 2010-11-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் இளைஞர்கள், பெண்களுக்கு குறுகிய கால தொழிற் பயிற்சி அளிக்கும் (என்.சி.வி.டி.) திட்டத்தை நேரு யுவ கேந்திரா செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா நிறுவனத்தின் இயக்குநர் எம். ஷடாட்சரவேலு கூறியதாவது: தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் என்.சி.வி.டி. திட்டத்தின் கீழ் 395 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை, இதர மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் அணுகி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பூர்விகத் தொழிலில் திறன் பெற்றவர்களுக்கும்...
பல்வேறு தொழில் பிரிவுகளில் இளமையிலிருந்தே அனுபவபூர்வமாகவோ அல்லது முன்னோர் வழியாகப் பரம்பரையாகத் தங்களது பூர்வீகத் தொழில் திறன் பெற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இவர்கள் குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேருவதன் மூலம் மத்திய அரசின் சிறு, குறு தொழில் அமைச்சகத்தின் சான்றிதழுடன் தங்களது திறமைக்கு அங்கீகாரம் பெற முடியும்.
360 பிரிவுகளில் தொழிற் பயிற்சி: தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ.) கொத்தனார், தச்சர் உள்ளிட்ட 360 தொழிற் பிரிவுகளுக்கான பயிற்சியில் சேரலாம். இந்த ஆண்டு, ஆண்களுக்கு கணினி, எலக்ட்ரீμயன், ஃபிட்டர், ப்ளம்பர், இரு மற்றும் மூன்று சக்கர வாகன மெக்கானிக் ஆகிய புதிய பிரிவுகளிலும், பெண்களுக்கு கணினி, அழகுக்கலை, தையல், அடிப்படை செவிலியர் ஆகிய பயிற்சிப் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி: 5 முதல் 8 வகுப்பு வரை படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு: இந்த ஆண்டுக்கான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 400 பேர் தேர்வு செய்யப்படுவர். இதுதவிர புதுச்சேரியைச் சேர்ந்த 75 மாணவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர். மொத்த தொழிற்பயிற்சி இடங்களில் 50 சதவீ தம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: இந்தப் பயிற்சி வகுப்புகளில் 15 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் சேரலாம். நேரு யுவகேந்திராவின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இளைஞர் மன்றங்கள், மகளிர் மன்றங்கள், சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே இந்தப் பயிற்சியில் சேர முடியும்.
இதுகுறித்த விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நேரு யுவ கேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை அணுக வேண்டும். இலவச விண்ணப்பங்களையும் பெறலாம். உணவு, தங்கும் இடம் இலவசம்: பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான கட்டணமும் இல்லை. இந்த ஆண்டு ஆகஸ்டு , செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு தினமும் 3 வேளை தரமான உணவுடன் தங்குமிடமும் இலவசம்.
தொழிற் பிரிவுகளுக்கு ஏற்ப 20 முதல் 90 நாள்கள் வரை இந்த குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி நிறைவடைந்த பின் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு... அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இந்தச் சான்றிதழ்களைப் பதிவு செய்யலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தொழில் பிரிவுகளில் திறன் மிகுந்த பணியாளராக வேலை வாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இதற்கான வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
உள்நாட்டில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான தொழிற் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள், தளவாடங்களை வாங்கவும், சுயவேலைவாய்ப்புக்கும் வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: www.nyks.org.in தொ.பே. எண்கள்: 044-24510215
No comments:
Post a Comment