Wednesday, October 14, 2015

A BEAUTIFUL TREE IN TAMIL PART 1




இந்தியக் கல்வியின் வரலாறு பற்றி, குறிப்பாக 1930-40-களில், ஏராளமான ஆய்வு நூல்கள் வெளியாகின. ஒருவகையில் பார்த்தால், பிரிட்டிஷ் அதிகாரிகளாகவும் அறிஞர்களாகவும் இருந்தவர்கள் 19-ம் நூற்றாண்டின் மத்தியிலேயே இது தொடர்பாக எழுத ஆரம்பித்திருந்தனர். எனினும், இவற்றில் பெரும்பாலானவை பழங்கால இந்தியாவைப் பற்றியவை. சில நேரங்களில் 10 – 12-ம் நூற்றாண்டுகள் பற்றியவையாகவும் இருந்தன. எஞ்சியவை பிரிட்டிஷாரின் காலத்திலும் அதற்குப் பிறகும் இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பது பற்றி எழுதப்பட்டவை. பழங்காலக் கல்வி அமைப்புகள் (நாலந்தா அல்லது தட்சசீலத்தில் இருந்தவை போன்று) பற்றிய விரிவான ஆய்வுபூர்வமான படைப்புகள் நீங்கலாக ஏ.எஸ்.அல்டேகர் போன்றோர் எழுதிய பழங்காலம் பற்றிய பொதுவான பல படைப்புகள் வெளியாகின. அதற்குப் பிந்தைய காலம் பற்றிப் பல படைப்புகள் வெளியாகியுள்ளன: இந்திய அரசால் வெளியிடப்பட்டு சமீபத்தில் மறுபதிப்பும் கண்ட செலக்ஷன்ஸ் ஃபிரம் எஜுகேஷனல் ரெக்கார்ட்ஸ் (இரண்டு தொகுதிகள்), எஸ்.நூருல்லா, ஜே.பி. நாயக் போன்றோரின் படைப்புகள் ஆகியவற்றை இந்த இடத்தில் குறிப்பிடலாம். இவர்கள் தமது படைப்பை, ‘கடந்த 160 வருடங்களிலான இந்திய கல்வியின் வரலாறை விரிவாக, ஆவணபூர்வமாக, இந்தியக் கோணத்தில் எழுதுவதற்கான முயற்சி’ என்று (அந்த நூல் பேசும் காலகட்டம் மற்றும் அது எந்தக் கோணத்தில் ஆராயப்பட்டிருக்கிறது என்பது பற்றிச் சுட்டிக்காட்டும்வகையில்) குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஒருவகையில் அகடெமிக்  ஆய்வு அம்சம் சற்றுக் குறைவாக இருந்தபோதிலும் 1939-ல் பண்டிட் சுந்தர்லால் எழுதிய பிரமாண்டப் படைப்பு மிக அதிக வாசகர்களைச் சென்றடைந்தது. அவர் எழுதிய நூலில் சுமார் 40 பக்கங்கள் கொண்ட 36-வது அத்தியாயத்தின் தலைப்பு ‘இந்திய பாரம்பரியக் கல்வியின் அழித்தொழிப்பு’. ஏராளமான பிரிட்டிஷ் ஆவணங்களை மேற்கோள்காட்டிப் பேசும் அந்த நூல் கிட்டத்தட்ட 100 ஆண்டு கால வரலாற்றை விவரிக்கிறது: ஜூன் 1814-ல் இந்தியாவுக்கான கவர்னர் ஜெனரலுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த அறிக்கையில் ஆரம்பித்து மாக்ஸ் முல்லருடைய கருத்துகள் வரை பேசுகிறது. 1909-ல் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் கேர் ஹார்டி எழுதியவையும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் கையெழுத்து ஆவணப் பிரதிகள் எளிதில் கிடைத்திருக்கவில்லை. எனவே, அன்றைய தேதியில் அச்சில் இருந்தவற்றை மட்டுமே வைத்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் ‘பாரத் மேம் அங்ரேஜி ராஜ்’ (பாரதத்தில் ஆங்கிலேயர் ஆட்சி) என்ற இந்த அத்தியாயம் 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்திய பாரம்பரியக் கல்வி பற்றிய மிக மிக முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது.
13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 19-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி வரையிலான காலகட்டத்து வரலாறு அல்லது கல்வி பற்றி மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் கல்வி பற்றி எஸ்.எம். ஜாஃபர் எழுதிய படைப்பு போன்றவை நிச்சயம் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி பற்றியும் 18 - 19-ம் நூற்றாண்டுகளில் சிதைந்த நிலையில் இருந்த இந்திய பாரம்பரியக் கல்வி பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில தகவல்களும் அத்தியாயங்களும் கல்வி வரலாறு பற்றிய நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. மொத்தம் இருக்கும் 643 பக்கங்களில் நூருல்லாவும் நாயக்கும் சுமார் 43 பக்கங்களை 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்தியக் கல்வி பற்றி எழுதியிருக்கிறார்கள். அந்தக் கல்வியின் வீச்சு, தன்மை பற்றிய பிற்கால பிரிட்டிஷாரின் சில கருத்துகளை அந்த நூலில் கேள்விக்கு உட்படுத்தியும் இருக்கிறார்கள்.
19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் இந்தியாவில் இருந்த கல்வி பற்றி எழுதப்பட்ட பெரும்பாலான படைப்புகளும் அதுதொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் மூன்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, முன்னாள் கிறிஸ்துவ மத போதகரான வில்லியம் ஆடம் எழுதிய ஆவணங்கள். வங்காளம், பிஹார் முதலான பகுதிகளில் 1835-38 காலகட்டத்திலிருந்த பாரம்பரியக் கல்வி பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட இந்த ஆவணங்கள் மிக அதிக கவனம் பெற்றன. இரண்டாவதாக, பம்பாய் பிரஸிடென்ஸியில் 1820-களில் இருந்த இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி பிரிட்டிஷ் அதிகாரிகள் நடத்திய ஆய்வு முடிவுகள். மூன்றாவதாக 1822-25 காலகட்டத்தில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்தியக் கல்வி தொடர்பான மிக விரிவான பிரிட்டிஷ் ஆய்வு முடிவுகள். வடக்கே ஒரிஸாவின் கஞ்சம் பகுதியில் ஆரம்பித்து தெற்கே திருநெல்வேலி வரையிலும் மேற்கே மலபார் வரையிலுமான பகுதிகள் மதராஸ் பிரஸிடென்ஸியில் அப்போது இருந்தன. இதே விஷயம் தொடர்பான பிற்காலத்திய படைப்பு பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி தொடர்பாக ஜி.டபிள்யூ. லெய்(ட்)னர் தொகுத்தவை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் லெய்ட்னரின் படைப்பு பிரிட்டிஷாரின் கொள்கை முடிவுகளை மிகக் கடுமையாக வெளிப்படையாக விமரிசிக்கிறது. இவரது நூல் இவர் சொந்தமாக மேற்கொண்ட ஆய்வு மற்றும் முந்திய பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. பஞ்சாப் பகுதியில் பாரம்பரியக் கல்வியின் நசிவுக்கு மட்டுமல்லாமல் அதன் அழித்தொழிப்புக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளே காரணம் என்று அது சொல்கிறது.
ஆடம்மின் ஆய்வுகளும் வேறு சில மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்களின் ஆய்வுகளும் இந்திய பாரம்பரியக் கல்வியின் அழிவுக்கு பிரிட்டிஷார்தான் காரணம் என்றே தெரிவிக்கின்றன. எனினும், அந்த விமரிசனங்கள் மிகவும் நாசூக்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கனவான்களுக்கும் உகந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன (லெய்ட்னர் பிரிட்டிஷ் அதிகாரிதான் என்றாலும் அவர் ‘ஆங்கிலேயர் அல்ல’).
அக் 20, 1931-ல் மகாத்மா காந்தி லண்டனில் இருக்கும் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் அஃபயர்ஸில் ஒரு நீண்ட உரை ஆற்றினார். அதில், ‘இந்தியாவில் கல்வி கடந்த 50 -100 வருடங்களாக அழிந்துவருகிறது; அதற்கு பிரிட்டிஷாரே காரணம்’ என்று தெரிவித்தார். ஆடம், லெய்ட்னர் போன்ற பலர் தெரிவித்த கருத்துகளுக்கும் இந்தியர்கள் பல காலமாகச் சொல்லிவந்த கருத்துகளுக்கும் காந்தியின் உரை பெரும் வலுவை ஊட்டியது. அதைத் தொடர்ந்து 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய பாரம்பரியக் கல்வி தொடர்பான மேலே சொன்ன ஆவணங்களுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் வந்தது. தனி நபர் என்ற வகையிலும் பிரிட்டிஷ் அரசின் சார்பாகவும் சர் ஃபிலிப் ஹெர்டாக்கிடமிருந்து காந்திக்கு உடனே மறுப்பு எழுந்தது. அவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச் செயலாளராகவும் ஆக்ஸிலரி கமிட்டி ஆஃப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷனின் சேர்மனாகவும் இருந்திருக்கிறார். காந்தியின் கூற்றுக்கு ‘அச்சில் வெளியான துல்லியமான ஆதாரங்கள் இருக்கின்றனவா’ என்று கேட்டார். காந்திஜியும் (இந்தக் காலகட்டத்தில் சிறையில் அதிக காலம் கழிக்க வேண்டியிருந்தது) அவருடைய சக போராளிகளும் அளித்த பதில்களினால் திருப்தியடையாத ஹெர்டாக், நான்கு ஆண்டுகள் கழித்து லண்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷனில் ஆற்றிய மூன்று தொடர் உரைகளில் காந்திஜியின் கூற்றை மறுதலித்து விரிவாகப் பேசினார். 1939-ல் தனது அந்த உரைகளையும் வேறு சில ஆதாரங்களையும் சேர்த்துப் புத்தகமாக வெளியிட்டார்.
காந்திஜியையும் பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களையும் மறுதலித்தவர்களில் ஹெர்டாக் முதல் நபர் அல்லர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையும் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேசியபடி பலரும் பயணித்திருந்த பாதையை அப்படியே பின்பற்றுபவராகவேதான் இருந்தார். விக்டோரிய இங்கிலாந்தின் தந்தை என்று பாராட்டப்பட்ட வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மூலமாக பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் 125 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்ட பாதை அது. ஹெர்டாகைப் போலவே அவருடைய காலகட்டத்தைச் சேர்ந்த டபிள்யூ ஹெச் மோர்லாந்தும் முன்பு இதுபோல் பேசியிருக்கிறார். ‘இப்போது இருப்பதைவிட அக்பர், ஜஹாங்கீர் காலகட்டத்தில் தொழிலாளர்களுக்குப் பஞ்சம் வெள்ளம் போன்றவை இல்லாத இயல்பான காலகட்டத்தில் அதிகக் கூலி கிடைத்தது’ என்று வின்சென்ட் ஸ்மித் கூறியிருந்ததை மோர்லாந்து மறுத்திருந்தார். மோர்லாந்து ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி என்ற நிலையில் இருந்து இந்தியாவின் பொருளாதார வரலாற்று ஆசிரியர் என்ற நிலைக்கு மாற ஸ்மித் முன்வைத்த சவால் ஒருவகையில் காரணமாக அமைந்தது. 1940-கள் வரை, உலகை நாகரிகப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சுமந்தவர்கள் என்ற வகையில், பிரிட்டிஷார் இந்தியாவில் (அல்லது வேறு இடங்களில்) ஆட்சி செய்த 200 ஆண்டுகாலத்தில் அவர்களால் திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத செயல்கள் குறித்த விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்திருக்கவில்லை.
இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ் எஜுகேஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966-ல்தான் இதை முதலில் பார்த்தேன். முன்பே சொன்னதுபோல் 1831-32-லேயே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின் சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள் மதராஸ் பிரஸிடென்ஸி டிஸ்ட்ரிக்ட் ஆவணங்களிலும் பிரஸிடென்ஸி ரெவின்யூ ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன, லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும். எனினும் இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன. இதே காலகட்டத்தைச் சேர்ந்த மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்டங்கள் பற்றிய ஆய்வு ஏடுகள்கூட இந்த ஆய்வுத் தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கவே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆய்வு ஏடுகள் சிற்சில இடங்களில் கல்வி தொடர்பான குறிப்புகளைப் பற்றிப் பேசவும் செய்திருக்கின்றன.
பிரிட்டிஷாரின் ஆட்சியைக் குறைகூறுவதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டம், 19-ம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டம் ஆகியவற்றில் இந்தியாவின் உண்மைநிலை என்ன என்பதை இந்த ஆவணங்களில் இருந்து முடிந்தவரை தெரிந்துகொள்வதற்கான முயற்சியே இது. இந்திய சமூகம், அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்கவழக்கங்கள், பிற நிறுவனங்கள், அவற்றின் பலங்கள், பலவீனங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே. 18-ம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இண்டியன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் த எய்டீன்த் செஞ்சுரி), இந்தியப் பாரம்பரியத்தில் ஒத்துழையாமை அணுகுமுறை (சிவில் டிஸொபீடியன்ஸ் இன் இந்தியன் டிரடிஷன்) என்ற முந்தைய நூல்களின் பாணியிலேயே இந்த நூலும் இந்தியாவின் வேறொரு பரிமாணத்தை சித்திரித்துக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்து நிலைமையோடு இந்த ஆய்வுகளைப் பொருத்திப் பார்ப்பதோடு, பிரிட்டனில் 19-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதையும் லேசாகக் கோடிட்டுக் காட்டுகிறது.
ஏராளமான நண்பர்கள் இந்த ஆய்வுப் பணியில் எனக்கு உதவு செய்திருக்கிறார்கள். பல ஆலோசனைகள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அவர்களுடைய ஆதரவும் ஊக்கமும் இல்லாதிருந்தால் இந்தப் புத்தகம் உருவாகியிருக்கவே முடியாது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் என்ன பாடங்கள் கற்பிக்கப்பட்டன என்பது தொடர்பான என் ஆய்வுகளுக்கு உதவும் வகையில் ஆக்ஸ்ஃபோர்டு ஆவணக் காப்பகத்தை பயன்படுத்திக்கொள்ள உதவியதற்காக அவர்களுக்கு நன்றி. அதுபோலவே இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி அண்ட் ரெக்கார்ட்ஸுக்கும் நன்றி. காந்தி - ஹெர்டாக் இடையிலான உரையாடலுக்கான பிரதிகளைத் தந்து உதவியதற்காக திரு மார்டின் மோயருக்கு விசேஷ நன்றி. 1972 - 73 காலகட்டத்தில் எனக்கு சீனியர் ஃபெலோஷிப் தந்ததற்காக ஏ.என்.சின்ஹா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸுக்கு (பாட்னா) என் நன்றிகள். வாரணாசியைச் சேர்ந்த காந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டடீஸ், புது டில்லியின் காந்தி பீஸ் ஃபவுண்டேஷன், த காந்தி சேவா சங்கம், சேவாகிராம், புது தில்லியைச் சேர்ந்த அசோசியேஷன் ஆஃப் வாலிண்டரி ஏஜென்ஸிஸ் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் என அனைத்து அமைப்புகளும் தேவைப்படும் நேரங்களில் எனக்கு உதவிகள் புரிந்தன. அதற்கு அவர்களுக்கு நன்றிகள் பல.
இந்தப் புத்தகத்தில் பின்னிணைப்பாக இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி தொடர்பான ஆவணங்களை இந்தியா ஆஃபீஸ் நூலகத்தில்தான் முதலில் பார்த்தேன். எனினும் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் இருந்தே அவற்றை மறு பிரசுரம் செய்திருக்கிறேன். முன்பு அது மெட்ராஸ் ரெக்கார்டு அலுவகம் என்ற பெயரில் இருந்தது. இதற்கும் அவர்கள் என் மீது காட்டிய அன்புக்கும் மிக அதிக சிரமம் எடுத்துக்கொண்ட அந்த ஆவணக் காப்பகத்தின் பணியாளர்களுக்கும் நன்றிகள். அலெக்சாண்டர் வாக்கரின் குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. எடின்பர்கில் இருக்கும் ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தில் இருக்கும் வாக்கர் ஆஃப் பௌலாந்து பேப்பர்ஸ் அறிக்கையில் இருந்து அது எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தேசிய நூலகத்துக்கு என் நன்றிகள். ஸ்காட்லாந்து ரெக்கார்டு அலுவலகம், எடின்பர்க் பல்கலை, அலகாபாத்தில் இருக்கும் உத்தரபிரதேச அரசு ஆவணக்காப்பகம் ஆகியவற்றுக்கும் நன்றி.
சேவாகிராமின் ‘ஆஸ்ரம் பிரதிஸ்தான்’ இந்தப் புத்தகத்தை எழுத இடவசதியும் பிற வசதிகளும் செய்துகொடுத்து அவர்களில் ஒருவராகவே என்னை அன்புடன் நடத்தினார்கள். காந்திஜியின் குடிலுக்கு அருகில் அமர்ந்தபடி இந்த நூலை எழுதி முடித்தது மிகப் பெரிய பாக்கியமே.
இந்த மொழிபெயர்ப்பின் மூல ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பான தி பியூட்டிஃபுல் ட்ரீ (அழகிய மரம்) மகாத்மா காந்தி லண்டனில் சாத்தம் ஹவுஸில் அக், 20, 1931-ல் ஆற்றிய உரையில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
‘பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் யதார்த்த நிலையை வளர்த்தெடுக்காமல் அவற்றை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டார்கள். மண்ணைத் தோண்டி வேரை வெளியில் எடுத்து மரத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது.’
18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற துணைத் தலைப்பும் பொருத்தமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் பெருமளவுக்கு இடம்பெற்றிருக்கும் மதராஸ் பிரஸிடென்ஸி ஆவணங்கள் 1822-25-ல் தொகுக்கப்பட்டவை. எனினும் அந்தத் தகவல்கள் அதைவிட பழமையான கல்வி அமைப்பு பற்றியே பேசுகின்றன. அந்தக் கல்வி அமைப்புதான் 18-ம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தது. அதன் பிறகு அது வெகு விரைவில் அழிந்துவிட்டது. ஆடம்மின் ஆய்வறிக்கை 19-ம் நூற்றாண்டின் நான்காவது பத்தாண்டில் நடந்த இந்திய பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி பற்றிப் பேசுகின்றன.
 
 
தரம்பால்
பிப்ரவரி 19, 1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்.
சேவா கிராமம்.

No comments:

Post a Comment