Thursday, April 27, 2017

மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதரின் அருளால் நிகழ்ந்த அதிசயம்!!!






அவர் ஒரு காவல்துறை அதிகாரி! பணியில் நேர்மையாக வாழ்ந்ததால் தமிழ்நாட்டின் பெரும்பாலான காவல்நிலையங்கள் அவருக்கு அறிமுகமாயிருக்கின்றன.ஒழுக்கத்திலும் அவர் விடாப்பிடியாகவும்,அபார மன வைராக்கியத்தோடும் இருந்திருக்கிறார்.மணமாகி அவருக்கு மூன்று மகள்கள்;தனது பெயரைச் சொல்லி எந்த இடத்திலும் பரிந்துரை கேட்கவிடாமல் தனது மகள்களை கட்டுப்பாட்டுடன் வளர்த்திருக்கிறார்.இவர் எந்த ஒரு காவல்நிலையத்தில் பணிபுரிந்தாலும்,இவரிடம் எவரும் சிரித்துப் பேசுவதே கிடையாதாம்;சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தியதால்,பல வருடங்களாக இவருடைய மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வந்திருக்கிறது.


இவரது வேலையில் இருக்கும் கம்பீரம்,செல்வாக்கினை இவரது சகோதரிகளும் சகோதரிகளின் குடும்பமும் பலமுறை தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.இதனால் அந்த சகோதரிகளே ஒருகட்டத்தில் பொறுமையிழந்து இவரையும்,இவரது ஒழுக்கத்தையும் இழிவாக பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.கடந்த 5 ஆண்டுகளில் இவர் மனம் நொந்து போய்விட்டார்;இவரது சகோதரிகளின் பொய்ப்பிரச்சாரத்தை இவரது மகள்களே நம்பிவிட்டதால்,இவரை வீட்டிலிருந்து விரட்டிவிட்டனர்.பாவம்! நேர்மையாக வாழ்ந்து தனது மூன்று மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்து,அவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும்போதெல்லாம் இவரது சுபாவம் தவறாக அவர்களுக்குத் தெரியவில்லை;இன்றோ தன்னைப் பெற்ற அப்பா அப்படிப்பட்டவரா? என்று தனக்குத் தானே கேள்விகள் கேட்கும் மனநிலையில் இல்லை;


இந்த சூழ்நிலையில் தனித்து வாழ்ந்து வரும் அந்த காவல்துறை அதிகாரிக்கு மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணியம்மன் திருக்கோவிலைப் பற்றிய மகாவில்வம்    ப்ரிண்ட் அவுட்டை யாரோ கொடுத்திருக்கிறார்கள்.அந்த ப்ரிண்ட் அவுட்டை தனது நெருங்கிய ஜோதிட நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார்.பலருக்கும் இதுபற்றிய விபரம் தெரியவில்லை;முடிவாக இவரே மகாவில்வம் இணையதளத்தை நாடி வந்து வாசித்திருக்கிறார்.அவரது நீண்டகால ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் மகாவில்வம் பதிவுகளாக வெளியாகியிருக்கின்றன.


மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீதம் 5 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணியம்மன் திருக்கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.ஒவ்வொரு முறையும் 108 மண்விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி,மஞ்சள் துண்டு விரித்து வடக்கு நோக்கி அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் வரை சிவாய நம என்று ஜபித்திருக்கிறார்.ஒவ்வொரு தடவையும் சிவாய நம என்று ஜபிக்கும்போதும் அவரையறியாமல் கண்ணீர் வழிந்திருக்கிறது.

ஆறாம் மாதமும்,ஏழாம் மாதமும் மேலப்பெரும்பள்ளம் அவரால் செல்ல முடியவில்லை;எட்டாம் மாதத்தில் எந்த ஞாயிற்றுக்கிழமையன்று மேலப்பெரும்பள்ளம் செல்ல விரும்பினாரோ,அதற்கு முதல்நாளன்று இவரது மூத்தமகள் குடும்பத்தோடு இவரைத் தேடி வந்திருக்கிறாள்.இவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதோடு,அத்தைகளின் சதித்திட்டத்தை புரிந்து கொண்டதை விவரித்து,இனி தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறாள்.இதை அவரது மருமகனும்(மூத்த மகளின் கணவர்)  வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.மறுநாள் அந்த காவல் அதிகாரியும்,அவரது மூத்தமகளின் குடும்பமும் மேலப்பெரும்பள்ளத்துக்குப் பயணித்தனர்.அங்கே அந்த காவல் அதிகாரிக்கு சில விநோதமான சிவ காட்சிகள் தென்பட்டிருக்கின்றன.
12 ஆம் மாதத்துக்குள் இவரது எல்லா மகள்களும் இவரைத் தேடிவந்து இவரை இவரது மனைவியுடன் சேர்த்து வைத்துவிட்டனர்.இந்த சம்பவத்தை கேட்க,கேட்க எனக்கே அழுகையும் பெருமையும் வந்துவிட்டது.

பெண்சாபத்தை நீக்கும் அருள்மிகு வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணியம்மன் அருளாற்றலைப் பற்றி உங்களுக்கு வழங்குவதில் மகாவில்வம் பெருமை கொள்கிறது.இந்தப் பதிவினை அந்த காவல் அதிகாரியின் அனுமதியோடு வெளியிடுகிறோம்.


விதியை நினைப்பவன் ஏமாளி;அதை வென்று முடிப்பவன் அறிவாளி!!! என்ற பாடல் வரிகளுக்கு இந்த சம்பவம் பொருந்தும் இல்லையா?


(மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோவிலில் 108 மண் விளக்குகள் ஏற்றியபின்னர்,எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே தரப்பட்டுள்ளது;இந்த புகைப்படத்தில் ஸ்வஸ்திக் சின்னம் தெரிகிறதா?இப்படித் தெரியும் ஆலயங்களில் அளவற்ற சிவசக்தி நிறைந்திருக்கிறது என்பதே இதன் உள்ளார்த்தம்!!!)

No comments:

Post a Comment