Thursday, April 27, 2017

ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் வழிமுறை!!!








சித்தர்களின் தரிசனத்துக்கு ஏங்கித் தவிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தினத்தந்தியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அகத்தியர் ஜீவநாடி என்ற தொடர் வெளிவந்தது.சென்னையில் வாழ்ந்து வந்த அகத்திய மைந்தன் திரு.ஹனுமத்தாஸன் அவர்கள் தமது கடந்த 30 ஆண்டுகால அகத்திய ஜீவநாடி அனுபவங்களை அதில் தொடர்ந்து எழுதினார்;அதே காலகட்டத்தில் தினத்தந்தியில் இலவச இணைப்புகளில் ஒன்றில் அதிசய சித்தர்கள் என்ற பெயரில் சதுரகிரியில் நிகழ்ந்த சித்தர்கள்+சதாசிவன் சார்ந்த புராண அதிசயங்களையும் தொடராக எழுதினார்;2008க்கும் முன்பாக சக்திவிகடனில் சதுரகிரியின் பெருமைகளை குடந்தை ஸ்யாமா என்பவர் தொடராக எழுதினார்;இவைகளெல்லாம் பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குவதற்கான முன்னோட்ட விழிப்புணர்வு என்றே கூறலாம்.


சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்;சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்களாக இருந்தாலும்,சித்தர்களின் எண்ணிக்கை சிலபல ஆயிரங்களைத் தொடும்;அஷ்டமாசித்துக்களை தமது மனப் பயிற்சியாலும்,தகுந்த குருவின் வழிகாட்டுதலாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்களே சித்தர்கள் ஆவார்.அஷ்டமாசித்துக்களைப் பற்றி அறிய புத்தகங்கள்,வலைப்பூக்கள்,இணையதளங்கள் என்று இருந்தாலும் தகுந்த குரு இல்லாமல் இந்த அஷ்டமாசித்துக்களை அறிய முடியாது;



அகத்தியருக்கும் முற்பட்ட சித்தர் ஒருவர் இருக்கிறார் எனில்,அவரே ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.பல கல்பகோடியுகங்களாக இமயமலையில் வசித்து வந்த இவரை தமிழ்நாட்டுக்கு வர வைத்தவர்கள் சித்தர்களே! இவர் இன்றைய மதுரையை ஒட்டியுள்ள திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வெகுகாலமாக தவம் செய்திருக்கிறார்;இதனால்,திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் ஆத்மத்துடிப்புடன் இயங்கிவருகின்றன;இன்னும் பல மகான்களின் நடமாட்டம் இன்றும்,என்றும் இருக்கிறது;இவரது அருளால் உயர்ந்த சிவநிலையை எட்டியவர்கள் ஏராளம்.நமக்குத் தெரிந்து என்று பார்த்தால் சூட்டுக்கோல் சுவாமிகளைச் சொல்லலாம்;



இன்றும் திருப்பரங்குன்றம் தியாகராஜ பொறியியல் கல்லூரிக்கு அருகில் சூட்டுக்கோல்மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று ஒரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரலாம்;அவ்வாறு சில வருடங்கள் ஜபித்து வந்தால் சூட்டுக்கோல் மாயாண்டிசுவாமிகளின் நேரடி தரிசனத்தைப் பெறலாம்;சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது;இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார்.இந்த இடத்தில் தான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பல ஆண்டுகள் தவமிருந்து ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற்றார்.


ஸ்ரீகாக புஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் இங்கே வருகை தந்து சூட்டுக்கோல் மாயாண்டுசுவாமிகளின் ஜீவசமாதி அல்லது அவர் பல ஆண்டுகளாக தியானம் செய்த குகையில் ஒரு மணி நேரம் வரை சிவாய நம என்று ஜபித்து வர வேண்டும்.பூர்வ புண்ணியம் உள்ளவர்கள் ஆயில்யம் நிற்கும் நாளில் இங்கே இரவில் தங்கி,தூங்காமல் ஒரு இரவு  முழுவதும் சிவாய நம ஜபித்து வரலாம்;இவ்வாறு மாதம் ஒரு நாள் வீதம் விடாமல் ஜபித்துவர அவரவர் பூர்வஜன்ம மனவலிமைப்படி ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசி கிட்டும்.ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரமே பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம் ஆகும்.


மதுரையைத் தவிர,தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது.அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்:

1.சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம்.இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது.இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.


2.கடலூர் மாவட்டம் சிதம்பரம் டூ கடலூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.


3.காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.


4.விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி.இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்தான்!!!


5.நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும்.இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக(யுகங்களாக) தவம் செய்திருக்கிறார்.இங்கே தான் உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.


6.ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை ஆகும்.வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார்.இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.


7.திருப்பரங்குன்றம்மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே.இங்கே ஏராளமான சித்தர்கள்/துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.


8.நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன.இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.(பொழுதுபோக்காகச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்;விபரீத விளைவுகள் உண்டாகும்.ஜாக்கிரதை!!)


9.இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.


10.புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.


11.சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர்.இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி.பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவராக அருள்பாலித்து வருகிறார்.இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது.ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும்  இங்கே பரவிக்கிடக்கிறது.


12.அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம்.ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்கசுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.


13.கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கே சென்றும்    சிவாய நம ஜபித்து வர,ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.


14.கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது.தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து  சிவாய நம ஜபிக்க,வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.


15.சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.
16.நாகநாத சித்தரும்,அவரது சீடர் யோகி குமரகுருவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆலயத்தை கொழும்பில்(இலங்கை) கட்டியுள்ளனர்.தற்போது திரு.குமரகுரு என்பவரின் குடும்பம் அந்தக் கோவிலை நிர்வகித்துவருகிறது.இதோ மேலே இருக்கும் படம் இலங்கையில் இருக்கும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் புகைப்படம் ஆகும்.

ஆதாரம்:சற்குரு ஸ்ரீகாகபுசுண்டர்,பெருநூல்காவியம் 1000,மூலமும் உரையும்.எழுதியவர் பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி,ஸ்ரீமனோன்மணி ஞான சித்தர்பீடம்,சீர்காழி.

ஹேவிளம்பி வருடத்தின் ஆயில்யம் நட்சத்திர நாட்கள் பட்டியல்:

3.5.2017 புதன்கிழமை காலை 9.45 முதல் 4.5.2017 வியாழன் காலை 9.11 வரை

30.5.2017 செவ்வாய் மால 5.53 முதல் 31.3.2017 புதன் மாலை 5.15 வரை

27.6.2017 செவ்வாய்

24.7.2017 திங்கள் காலை 10.08 முதல் 25.7.2017 செவ்வாய் காலை 9.14 வரை

20.8.2017 ஞாயிறு மாலை 6.07 முதல் 21.8.2017 திங்கள் மாலை 5.10 வரை

17.9.2017 ஞாயிறு

14.10.2017 சனி

11.11.2017 சனி

8.12.2017 வெள்ளி

4.1.2018 வியாழன்

1.2.2018 வியாழன்

28.2.2018 புதன்

27.3.2018 செவ்வாய்





தொடர்ந்த ஆத்மசாதகம் செய்பவர்கள் மட்டும் இந்த நாட்களில் இரவில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி அல்லது பிற மலைப்பகுதியில் இரவில் தங்கி சிவாய நம என்று ஜபித்து வரலாம்; ;மற்றவர்கள் பகலில் ஒரு மணி நேரம் மட்டும் சிவாய நம என்ற சிவமந்திரத்தை ஜபித்துவந்தாலே போதுமானது;

*படங்களில் காணப்படுவது திருப்பரங்குன்றத்தில் காணப்படும் ஜீவசமாதிகள் ஆகும்.தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு அருகில் இவை அனைத்தும் அமைந்திருக்கின்றன.

No comments:

Post a Comment