Thursday, April 27, 2017

ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை?



பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,நமது பாட்டானார்களுக்கும் பாட்டனார்களுக்கும் பாட்டனார்கள் ஜோதிடத்திலும்,ஆன்மீகத்திலும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து,அவைகளை ஓலைச்சுவடிகளாக எழுதிக் குவித்துள்ளனர்;அந்த முன்னோர்களின் படைப்புகளில் சிலவற்றின் பெயர்களைக் காண்போம்:-ஜோதிட ராமாயணம்,திருக்குறள்,திருமந்திரம்,நெடுநல் வாடை,சீவகசிந்தாமணி,சிலப்பதிகாரம்,தொல்காப்பியம்,புலிப்பாணி300,காகபுஜண்டரின் பாடல்கள்,கோரக்கரின் ஜோதிடத் திரட்டு,தேவாரம்,திருவாசகம்,கருவூரார் பலத்திரட்டு;

இந்த ஓலைச்  சுவடிகளில் சுமார் எண்பது சதவீதம் தற்போது ஜர்மனியிலும்,அமெரிக்காவிலும்,இங்கிலாந்திலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அவர்களின் பாடத்திட்டங்களிலும்,ஹாலிவுட் சினிமாக்களிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன.டாம்ப் ரைடர்,மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களே இதற்கு ஆதாரங்கள் ஆகும்.ஆனால்,நமது மதச்சார்பின்மை இந்தியாவிலோ இவைகளை கேலியும் கிண்டலும் செய்யும் போக்கு உருவாகிவிட்டது;


விநாயகப்பெருமானை வழிபாடு செய்ய ஏற்ற நாள்:வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும் சிறப்பே! ஏற்ற நேரம் எந்த நேரமாக இருந்தாலும் ஓ/கே!!! ஏனெனில்,கடவுள்களில் மிக மிக மிக எளியவர் இவர் மட்டுமே!!! இவரை விடவும் எளியவர் நம்ம ஸ்ரீகால பைரவர்!!! ஸ்ரீகாலபைரவரை வழிபட கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டே ஆக வேண்டும்.வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.




ஸ்ரீபத்திரகாளியை ஒரு வாரத்தில் எந்த நாளில் வழிபட்டால் முழுமையான அருள் கிடைக்கும்? என்பதை பல ஆண்டுகளாக நமது முன்னோர்கள் வழிபட்டு,வழிபட்டு கண்டறிந்ததே ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் இராகு காலம் என்பதை கண்டறிந்தனர்.


ஸ்ரீசொர்ண பைரவரை வழிபட ஏற்ற நாள் எது? என்பதை நமது ஆன்மீகக்குருப் பரம்பரையினர் வனதியானத்தின் மூலமாகவும்,ஒன்பது ஆண்டுகள் தினசரி தியானத்தின் மூலமாகவும் கண்டறிந்தனர்;அந்த நாளே தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலம் ஆகும்.
இதே நாளன்று ஸ்ரீகால பைரவரையும் வழிபடலாம்;அதே சமயம்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் ஸ்ரீகால பைரவரை வழிபட ஏற்ற நாள் சனிக்கிழமை;ஏற்ற நேரம் சனிக்கிழமை அன்று வரும் இராகு காலம்!


எந்த ஒரு மந்திரத்தையும்,அது வைஷ்ணவ மந்திரமாக இருந்தாலும் சரி,அம்மன் மந்திரமாக இருந்தாலும் சரி,ஐயப்பனின் மந்திரமாக இருந்தாலும் சரி,
முருகக் கடவுளை வழிபாடு செய்ய ஏற்ற நாள் செவ்வாய்க்கிழமை ஆகும்.ஏற்ற நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள்!

குல தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் வியாழக்கிழமை ஆகும்.நமது வாழ்க்கை வேகத்தினால் நாம் ஞாயிற்றுக்கிழமை வழிபடச் செல்கிறோம்;அல்லது மஹாசிவராத்திரி அன்று மட்டுமே வழிபடச் செல்கிறோம்.


அன்னதானம் செய்வதற்கு ஏற்ற நாள் வியாழன்;விருந்து சாப்பிடுவதற்கு  ஏற்ற நாள் வெள்ளி;ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டகச்சனி உள்ளவர்கள் சனிக்கிழமை உடல் ஊனமுற்ற அனாதைகளுக்கு அன்னதானம்,கருவிகள் தானம்,ஆடைகள் தானம்,கல்வி தானம் செய்யலாம்;

ஒருபோதும் நிர்வாணமாக தூங்கக்கூடாது;குளிக்கவும் கூடாது; மேலே போர்வையைப் போர்த்திக் கொண்டும் நிர்வாணமாகத் தூங்குவது பாவம் மட்டுமல்ல;பல்வேறு சிக்கல்கள் வருவதற்கு இந்த ஒரு செயலைச் செய்தாலே போதும்;


ஒரு போதும் வெட்டவெளியில் உறவு கொள்ளக் கூடாது;அது பகலாக இருந்தாலும் சரி,இரவாக இருந்தாலும் சரி.வனப்பகுதியாக இருந்தாலும் சரி,வாகனமாக இருந்தாலும் சரி.கடல் பகுதியாக இருந்தாலும் சரி;இப்படி ஒரு முறை செய்பவர்களையே துஷ்ட சக்திகள் ஆக்கிரமிக்கின்றன.அப்படி ஆக்கிரமிப்புக்குள் இருப்பதைக் கண்டறியும் ஆன்மீக குரு நாதர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் கூட தற்காலத்தில் இல்லை;

ஒருபோதும் கோவிலுக்குள் சரசக் கலையில் ஈடுபடக்கூடாது;கல்வி நிலையங்களிலும்,பணிபுரியும் இடங்களிலும் சரசக் கலையில் ஈடுபட்டால் அந்த இடத்தின் வளர்ச்சி அதோடு சரி;உம்மா கூட தரக்கூடாது;
நள்ளிரவில் சுடுகாட்டு வழியாக பயணிப்பதை முடிந்தவரையிலும் தவிர்க்க வேண்டும்;மீறி வரும் சூழ்நிலை உண்டானால், புதிய எதிர்பாலினத்தவர்களை(நீங்கள் ஆணாக இருந்தால் பெண்,பெண்ணாக இருந்தால் ஆண்) சுடுகாட்டுக்கு அருகே  சந்தித்துப் பேசும் சூழ்நிலை  ஏற்படலாம்;அப்போது முடிந்தவரையிலும் அங்கே  இராமல் உடனே நகர்ந்துவிடுவது நல்லது.


மேலே கூறிய பத்திகளை ஒருசில நிமிடங்களில் வாசித்துவிட்டீர்கள்;இதில் மறைந்திருக்கும் ஆன்மீக வலிமைகளையும்,சக்தியையும் அறிய நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆண்டுகள் பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா?


ஞாயிற்றுக்கிழமை அன்று பூமிக்கு சூரியனிடமிருந்து அளவற்ற  கதிர்வீச்சு கிடைத்துக்கொண்டே இருக்கிறது;திங்கட்கிழமையன்று சந்திரனிடமிருந்தும்,செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய்க்கிரகத்திலிருந்தும்,புதன் கிழமைகளில் புதன் கிரகத்திலிருந்தும்,வியாழக்கிழமைகளில் குருகிரகத்திலிருந்தும்,வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் கிரகத்திலிருந்தும்,சனிக்கிழமைகளில் சனிக்கிரகத்திலிருந்தும் கதிர்வீச்சுக்கள் நமது பூமியை வந்தடைகின்றன.ஒவ்வொரு நாளும் வரும் இராகு காலத்தில் ராகு பகவானின் கதிர்வீச்சு பூமி முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது;

இராகு பகவானை ஜோதிடப்படி நிழல்கிரகம் என்று நாம் வர்ணித்தாலும்,இராகுவானது பூமியின் சுற்றுப்பாதையும்,சந்திரனின் சுற்றுப்பாதையும் இரண்டு இடங்களில் குறுக்கிடுகின்றன;அந்த இரண்டு இடங்களில் ஒரு மையமே ராகு எனவும்,இன்னொரு இடமே கேது எனவும் மதிப்பிட்டுள்ளார்கள் நமது முன்னோர்கள்;நமது நவீன வானவியல் ஆராய்ச்சிகளும் அதை நிரூபித்துவிட்டன;

இராகு காலத்தில் நல்ல செயல்களை ஆரம்பிக்கக் கூடாது;எம கண்டத்தில் கெட்ட செயல்களை துவங்கிடக் கூடாது என்பது ஜோதிட விதி;இந்த விதியிலும் விதிவிலக்கு உண்டு;அது என்னவெனில்,ராகு மஹாதிசை யாருக்கெல்லாம் நடைபெற்று வருகிறதோ அவர்களுக்கு இராகு காலத்தில் தான் சுபகாரியங்கள் மற்றும்  முக்கிய காரியங்களை ஆரம்பிக்க வேண்டும்;அவ்வாறு துவங்கும் அனைத்துச் செயல்களும் மகத்தான வெற்றி பெறும் என்பது எமது கடந்த பத்தாண்டுகால ஜோதிட ஆராய்ச்சி உண்மை ஆகும்.அதே போல,எமகண்ட நேரத்தில் பிறருக்குத் தீங்கு செய்யும் கெட்ட செயல்களைச் செய்யத் துவங்கினால்,அது செய்ய ஆரம்பிப்பவரையே திருப்பித் தாக்கும்;இவைகளைப் பற்றி புராதன ஜோதிட நூல்கள் விரிவாக எழுதியிருக்கின்றன;நாத்திகமும்,உலகமயமாக்கலும் நம்மை அகங்காரம் பிடித்தவர்களாக மாற்றிவிட்டதால்,இந்த  உண்மைகள் ஜோதிடப் பயிற்சி மையங்களில் மட்டுமே சொல்லித்தரப்படுகின்றன;


ஜோதிடம் ஒரு அறிவியலாக இருப்பதால் தான்,அமெரிக்காவின் சர்வதேச உளவு அமைப்பான சி.ஐ.ஏ.தனது ஒற்றர்களை ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றது;இந்த தேர்ந்தெடுத்தல் பணியானது கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது;

தமிழ்நாட்டில் இன்றும் கூட ஒரு தினசரி பத்திரிகை தனது அலுவலகப்பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது உரிய பட்டப்படிப்புடன் ஜாதக நகலையும் சேர்த்து அனுப்புவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறது;

தமிழ்நாட்டின் பிரதான திராவிடக் கட்சிகளில் ஒன்றில்,ஜோதிடம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது அனைவருமே அறிந்த உண்மை ஆகும். ஆந்திராவில் சினிமாக்களின் மூலமாக தன்னை ராமனாக நிலை நிறுத்தியவர் ஒருவர் இருந்தார்;அவர் ஆரம்பித்த அரசியல் கட்சியானது,துவக்கப்பட்ட ஒன்பதே மாதங்களில் ஆளும் கட்சியானது;உலக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை என்று இன்றும் கின்னஸ் தெரிவிக்கிறது.

கடவுளையே நம்பாத தாத்தாவின் கோட்பாடுகளை முகமூடியாக அணிந்து,கறுப்புத் துண்டையே தோளில் போர்த்தியிருந்தவர்,இன்று மஞ்சள் துண்டு அணிந்தால் மட்டுமே ஆயுள் அதிகரிக்கும் என ஆஸ்தான ஜோதிடர் தெரிவித்ததால்,மஞ்சளுக்கு மாறியே விட்டார்;ஆக,நாத்திக அறிஞர் என்று சொல்லிக்கொள்பவருக்கும் ஜோதிடமே நல் வழிகாட்டி ஆகும்.(தானும்,தன் குடும்பத்தாரும் மட்டும் ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசனையைப்பின்பற்றி,ஆயுள் முழுக்க சொகுசாக வாழ வேண்டும்;தன்னை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய அப்பாவித் தமிழினம் நாத்திகக் கொள்கையில் உறுதியாக இருந்து சீரழியவேண்டும் என்ற உன்னத நோக்கமே காரணம்!)

நம் கர்மவினைகளைத் தீர்க்கும் சக்தி (கலிகாலத்தில் மட்டும்) அன்னதானத்துக்கு உண்டு; அன்னதானத்தை எப்போதும்,எங்கேயும் செய்யலாம் என்ற பொதுவிதி இருந்தாலும்,நாம் குறைந்த காலத்தில் அதிகமான நற்பலன்களை அடையவே விரும்புகிறோம்;இதற்கு சிவபுராணம் வழிகாட்டுகிறது.


நமது ஊரில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம்பேர்கள் வீதம் ஓராண்டுக்கு தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ அதைவிட அதிகமான புண்ணியம்,காசியில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;

நாம் காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒரு வருடம் முழுவதும் தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகபுண்ணியம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில்  இருக்கும் திரு அண்ணாமலை(திருவண்ணாமலை)யில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நபருக்கு மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அதுவும்,துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை இது:நாம்  பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகப் புண்ணியம் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் ஒரே ஒருவருக்கு காலை,மதியம்,மாலை என்று மூன்று வேளைகளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அது சரி! இந்த உண்மையைக் கண்டுபிடிக்க எதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின?


துவாதசி திதி வரும் நாட்களின்  பட்டியலை ஒரே நாளில் பஞ்சாங்கத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம்;ஒரு தமிழ் மாதத்தில்  இரண்டு முறை துவாதசி திதி வரும்;வளர்பிறை துவாதசி,தேய்பிறை துவாதசி.எனவே,ஒரு வருடத்துக்கு 24 துவாதசி திதிக்கள் வருகின்றன.

அடுத்து இவைகளில் ஒரு முழுநாளில் துவாதசி திதி என்பது வெறும் 12 முதல் 18 நாட்களே வருகின்றன;ஏன் அப்படி? இந்து தர்ம காலக் கணக்குப்படி, ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான கால கட்டமே ஒரு முழு நாள் ஆகும்.நாம் பின்பற்றும் காலண்டரும்,கணக்கும் கிறுஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டது;நள்ளிரவு மணி 12 ஆனதும் அடுத்த நாள் துவங்குவதாக மேல்நாடுகள் பின்பற்றுகின்றன;இது முழுத் தவறு.

அடுத்தபடியாக எப்போது துவாதசி திதி அன்னதானம் செய்வது?


காலையில் ஆறு மணி முதல் எட்டு மணிக்குள்ளும்;மதியம் பனிரெண்டு மணி முதல் இரண்டு மணிக்குள்ளும்;இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் அன்னதானம் செய்வது சிறப்பு.இதை உணர்ந்து கொள்ள சுமார் ஏழு முதல் ஒன்பது தடவை அண்ணாமலைக்குச் செல்ல வேண்டியிருந்தது;நான் ஒன்றும் செல்வ வளம் மிக்கவன் அல்ல;எனது சம்பளத்திலும்,வருமானத்திலும் சேமித்தேன்;சேமித்தப் பின்பு, துவாதசி வரும் நாளில் விடுமுறை எடுத்து,எதற்காக அண்ணாமலைக்குச் செல்கிறேன்? என்பதை எவரிடமும் சொல்லாமலும்,பயணிப்பதையே ரகசியமாக வைத்துக்கொண்டும் புறப்படுவது வழக்கம்.(காரணம்,கண் திருஷ்டியால் சில முறை அண்ணாமலைப்பயணம் ரத்தாகியிருக்கிறது). அண்ணாமலைக்கு  எனது ஊரிலிருந்து 480 கி.மீ.தூரம் பயணித்து,இரண்டு இரவுகளும்,ஒரு பகலும் அண்ணாமலையில் தங்கியிருந்து அன்னதானம் செய்து கண்டறிந்த உண்மை இது.சும்மா இல்லை;இந்த ஆராய்ச்சி செய்யும் போதெல்லாம் பஞ்சாங்கமும்,அடிப்படை ஜோதிட அறிவும்,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் அருளாசியும் மட்டுமே துணையாக இருந்தன;

சிவமஹாபுராணத்தில் இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,காசியில் நம் வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தை விட அதிக புண்ணியமும்,மறுபிறவியில்லாத முக்தியும் கிடைக்கும் என்ற ஒருவரியே கை.வீரமுனியாகிய எம்மை இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்யத் தூண்டியது;

இந்த ஆராய்ச்சியின் முடிவை மகாவில்வத்தில் விரிவாக சென்ற வருடங்களில் ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறோம்.ஆனால்,இந்த ஆன்மீகமும் ஜோதிடமும் கலந்த ஆராய்ச்சி செய்யும் போது மறுபிறவியில்லாத முக்தி கிடைக்குதோ இல்லையோ,வாழ்க்கையில் இருந்து வந்த அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது;ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த பலன்களைத் தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவாதசி திதி வரும் நாட்களின் பட்டியலை மகாவில்வத்தில் வெளியிட்டு வருகிறோம்;கூடவே அதற்கான விளக்கத்தையும்!


ஆரம்பத்தில் இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒருவருக்கு இன்று மதியமும்,இரவும் மட்டும் அன்னதானம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பியதுண்டு;ஊருக்குத்  திரும்பிய சில நாட்கள் / வாரங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை;

அடுத்தகட்டமாக,இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;இன்று மதியம்,இரவு;நாளை காலை என்று மூன்று வேளைகளுக்கும் ஒரு துறவி வீதம் அன்னதானம் செய்துவிட்டு  ஊருக்குப்புறப்பட்டோம்;பலன்கள் கிடைக்கவில்லை;



மூன்றாவதாக ஒரு நாள் பகல் முழுவதும் துவாதசி திதி இருக்கும் நாளைத் தேர்ந்தெடுத்து அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;மூன்று வேளையும் தலா மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;காலையில் மூன்று சாதுக்கள்,மதியம் மூன்று சாதுக்கள்;இரவு மூன்று சாதுக்கள் என்று அன்னதானம் செய்துவிட்டு,இரவில் கிரிவலம் சென்றுவிட்டு,ஊருக்குச் சென்றோம்.மறு நாளே சில பலன்களை உணர முடிந்தது.
நான்காவதாக மிகப் பெரிய அளவில் திட்டமிட்டோம்;சுமார் நூறுபேர்களுக்குத் தேவையான பணத்தை சம்பளத்திலும்,ஜோதிட தட்சிணைகளிலும் சேமித்தோம்;முழு துவாதசி திதி வரும் நாளுக்கு முதல் நாள் இரவே இங்கு வந்தோம்;மறு நாள் காலையிலும் இரவிலும் கிழக்குக் கோபுர வாசலில் சுமார் ஒன்பது பேர்களுக்கு(காலையில் ஒன்பது சாதுக்கள்,இரவில் ஒன்பது சாதுக்கள்) அன்னதானம் செய்துவிட்டோம்;காலை ஒன்பது மணிக்கே நூறு பேர்களுக்கு உணவகத்தில் ஆர்டர் கொடுத்தோம்;உணவகங்களில் ஆர்டர் கொடுப்பது,டோக்கன் வாங்கிக் கொண்டு அந்த டோக்கன்களை சாதுக்களுக்கு விநியோகம் செய்வது அண்ணாமலையில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது ஆர்டர் கொடுக்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது;சரியாக மதியம் பனிரெண்டு மணியளவில் ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து,அதில் நூறு பேர்களுக்குரிய உணவுப் பொட்டலங்களை நிரப்பினோம்;கிரிவலப் பாதை முழுவதும் அன்னதானம் செய்து விட வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தின் அருகிலேயே அனைத்து உணவுப்பொட்டலங்களையும் தானமாகக்  கொடுத்துவிட்டோம்.அப்போதுதான் ஒரு உண்மை உறைத்தது; அக்னி லிங்கத்தின் அருகில் ஏராளமான அன்னதான மடங்களும்,ஆஸ்ரமங்களும் இருக்கின்றன;எனவே,பெரும்பாலான சாதுக்கள் அக்னி லிங்கத்தின் அருகிலேயே முகாமிட்டிருக்கிறார்கள் என்பது!!!



நாம் ஒரே ஒரு துவாதசி திதியைத் தேர்ந்தெடுத்து,அண்ணாமலைக்கு வரத் திட்டமிடுகிறோம்;ஜோதிட அறிவினாலும்,சிவபுராணத்தின் வழிகாட்டுதலாலும் அண்ணாமலைக்கு வருகை தந்து அன்னதானம் செய்கிறோம்;ஆனால்,ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் அக்னி லிங்கத்தின் அருகில் இருக்கும் இந்த ஆஸ்ரமங்கள் அன்னதானத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றன;என்று எண்ணும்போது பொறாமை வந்தது;சில நாட்களிலேயே அந்த பொறாமையும் காணாமல் போனது; ஏனெனில்,குடும்பஸ்தராகிய நாம் எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில்,எத்தனையோ சிரமங்களுக்கும் மத்தியில் விடாப்பிடியாக நமது சொந்தப் பணத்தினை சேமித்து வைத்து,இங்கே வந்து அன்னதானம் செய்வதன் மூலமாக நாம்,நமது குழந்தைகள்,நமது பேரக் குழந்தைகள்,நமது பெற்றோர்கள்,நமது தாத்தா பாட்டிகள் என நமது பரம்பரைக்கே புண்ணியத்தைச் சேர்க்கிறோம் என்று நினைக்கையில் பொறாமை கரைந்து போனது;

ஐந்தாவதாக முழுமையாகவும்,முறையாகவும் திட்டமிட்டு இன்னொரு துவாதசி திதிக்கு அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;எம்மோடு நான்கு (ஜோதிட)வாடிக்கையாளர்கள் அப்போது வந்தார்கள்;காலையிலும்,மாலையிலும் கிழக்குக்கோபுர வாசலில் அன்னதானம் செய்தோம்;மதிய நேரத்தில் வழக்கம் போல ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து சுமார் 120 பேர்களுக்கான உணவுப்பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கிரிவலம் புறப்பட்டோம்;மன்னிக்கவும்,ஆட்டோவில் அன்னதான வலம் செய்யப் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,அரசு கலைக்கல்லூரி இருக்கிறது;அதற்கு கொஞ்சம் முன்பாகவே நிறுத்திக் கொண்டு எண்ணி ஒன்பதே ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;பிறகு,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா ஒன்பது  பேர்களுக்கு அன்னதானம் செய்ய முடிந்தது;குபேர லிங்கத்திலும்,ஈசான லிங்கத்திலும் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்தோம்;எங்கள் ஏக்கம் அண்ணாமலையாருக்குத் தெரிந்தது போலும்! சில சாதுக்களை அரை மணி நேரம் கழித்தே தரிசிக்க முடிந்தது;இந்த பயணத்து முதல் நாள் கோயம்பத்தூருக்கு அருகில் இருந்து ஒரு மகாவில்வம் வாசகர் நீண்ட நேரம் பேசினார்;பேச்சுவாக்கில் ஈசான லிங்கத்தின் அருகில் சுமார் பதினாறு சித்தர்களின் ஜீவசமாதிகள்  இருப்பதாகவும்,அந்த பதினாறு பேர்களில் ஈராறு பேர்கள் பெண் சித்தர்கள் என்பதையும் தெரிவித்தார்;அங்கே அன்னதானம் செய்வது மிகவும் கடினம்.ஏனெனில்,எப்போதாவதுதான் நம்மால் அன்னதானம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்துவிட்டு,கிரிவலம் அன்று இரவு சென்றோம்;இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்;கிரிவலம் முடித்தப்பின்னரும்,அன்னதானம் செய்யலாம்;அன்னதானம் செய்தப் பின்னரும் கிரிவலம் செல்லலாம்;எந்தக்கட்டுப்பாடும்,விதிமுறைகளும் கிடையாது;துவாதசி திதி இருபத்து நான்கு மணி நேரம் இருக்கும்;அந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் ஒரு முழு நாளில் மூன்று பொழுதுகள்(காலை,மதியம்,இரவு) வரும் விதமாக அமைய வேண்டும்;அவ்வளவு தான்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில்,அண்ணாமலையில் அன்னதானம் செய்வதை ஒரு பழக்கமாகவே தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்;அதனால்,அன்னதானம் செய்வதற்காகவே ரூபாய் ஐந்துக்கும்,பத்துக்கும் உண்டக்கட்டிச் சாதமும் இங்கே கிடைக்கிறது;இதை பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதில்லை;எனவே,மனதார சிறந்த உணவையே அன்னதானமாகச் செய்ய வேண்டும்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய சில வாரங்களில் வழக்கு தொடுத்து என்னை சித்திரவதைப் படுத்திய என் மனைவி சமாதானமாகிவிட்டாள்;வழக்கை வாபஸ் வாங்கினாள்:சுமாராக ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த குடும்பப் பிரச்னை முடிவுக்கு வந்தது;எனக்குத்  திருமணம் ஆனதிலிருந்து மதிக்கவே மதிக்காமலும்,உதவி செய்யாமலும் இருந்த எனது பெற்றோர் என்னைத் தேடி வந்தனர்;எனது முன்கோபமும் காணாமல் போயிருந்தது;என்னைப்பற்றி அவதூறாகப் பேசுவதையே பொழுது போக்காக வைத்திருந்த எனது அப்பா இப்போது என்னை விட்டுக் கொடுக்காமல் பேசத்துவங்கினார்;மாதம் ரூ.இரண்டாயிரம் வருமானம் வந்தது;  துவாதசி திதி அன்னதானத்தை அண்ணாமலையில் முறையாகச் செய்தப் பிறகு, இப்போது வாரம் ஆயிரம் ரூபாய் வருமானம் வரத் துவங்கியது;நான் கடன் வாங்கியவர்களின் பட்டியல் ஒரு கட்டுக்குள் வரத் துவங்கியது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் கடன்களை முழுமையாக அடைத்துவிட்டேன்;எனது நீண்டகால மன உளைச்சல்கள் காணாமல் போயிருந்தன;என்னை விரோதியாக பார்த்து வந்த எனது மனைவியின் குடும்பத்தார் இப்போது என்னிடம் மரியாதையாக பழக ஆரம்பித்தார்கள்;எனது சோக வரலாற்றை அறிந்து என்னைப் பார்த்தாலே ஓடும் சொந்தங்கள்,நான் இல்லாத போது என்னை நையாண்டி செய்து வந்த எனது சொந்தங்கள் அனைத்துமே இப்போது எம்மிடம் ஜோதிட ஆலோசனை கேட்குமளவுக்கு வந்திருக்கின்றனர்;கடும் கருமவினைகள் தீர்ந்துவிட்டன.



வெறுமனே பணம்,பணம் என்று சம்பாதிப்பவர்களே தமிழ்நாட்டில் அதிகம்;கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்க முயலவேண்டும்;முடியாவிட்டால்,முன்னோர்கள் செய்த கர்மாக்களையும்,நாம் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த தவறுகளையும் ஜோதிடப்படி கண்டறிந்து,அதை இறைவழிபாடு,அன்னதானம்,ஸ்ரீகால பைரவர் வழிபாடு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு,  மந்திர ஜபம் மற்றும் ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுதல்;அந்த பயிற்சி வகுப்புக்களில் போதிக்கப்பட்டவைகளை விடாப்பிடியாகப் பின்பற்றுதல் போன்றவைகளையும் செய்து வர வேண்டும்.அப்போதுதான் நமது முதுமைக் காலமும்,நமது குழந்தைகளின் எதிர்காலமும்,அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.


பணம்,பணம் என்று வெறி பிடித்து அலைபவர்களுக்கு அன்பு,பாசம்,விட்டுக்கொடுத்தல்,குடும்ப ஒற்றுமை,தியாகம் போன்ற மனித உணர்ச்சிகள் சிறிதும் இராது;குடும்பம் என்ற அமைப்பைச் சிதைப்பதே இவர்கள் தான்!எப்படியெல்லாம் பணம் அள்ளலாம் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இராது;நிறைய பணம் சம்பாதிப்பவர்களும்,சம்பாதித்துக்  கொண்டிருப்பவர்களும் ஜோதிடம் பார்ப்பது,அதில் சொல்லப்படும் ஆன்மீக & ஜோதிட ஆலோசனைகளைப் புறக்கணிக்கவே பார்ப்பார்கள்;ஏனெனில்,அவர்களைப் பொறுத்த வரையில் இது தண்டச் செலவுதான்;அவர்கள் மீண்டும் மீண்டும் பண வெறி பிடித்த பிசாசுகளாக பிறப்பு  எடுக்கத் தான் செய்வார்கள்;அவர்கள் வாழ்க்கையில் நோய்,கடன்,எதிரி,வழக்கு,மாந்திரீக கோளாறுகள் என்று வந்தாலும் திருந்துபவர்கள் மிக மிகக் குறைவுதான்;

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பரப்பப் பட்ட நாத்திகக் கருத்துக்களின் விளைவாகவும்,கம்யூனிஸத் தத்துவங்களாலும்,மூட நம்பிக்கைகளாலும்,தமிழ்நாட்டின் பூர்வீக மக்கள் நாத்திகத்தை தமது உயிர் மூச்சாகப்பின்பற்றி வருகின்றனர்;இதனால்,பரிகாரங்களை பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை;நம்பினாலும் பரிகாரங்களைச் செய்வது அபூர்வம்;ஆனால்,தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களும்,சாஸ்திர ஞானத்தை பரம்பரையாக பரப்பியவர்களுமே தங்கள் மற்றும் தங்களின் குழந்தைகளின் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை திறமையான & ஒரிஜினல் ஜோதிடர்கள் மூலமாக கண்டறிந்துவிடுகிறார்கள்.அவ்வாறு கண்டறிந்தப் பின்னர்,பொருத்தமான அல்லது தகுதி நிறைந்த குருநாதர்கள் மூலமாக உரிய நேரத்தில் அல்லது உரிய வயதில் பரிகாரங்களைச் செய்து விடுகிறார்கள்.மற்றவர்களில் இவ்வாறு இருப்பவர்கள் மிகக் குறைவே!


நாம் வாழும் காலமோ கலிகாலம்;பணம் அல்லது அதிகாரம் அல்லது காமம் அல்லது அகங்காரம் இவைகளில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளே நம் ஒவ்வொருவரையும் இயக்கி வருகின்றன.இந்த இயக்கத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு,ஆன்மீகமயமான பாதுகாப்புடன் முடிந்தவரையிலும் நியாயமாக சம்பாதிக்கவே இந்த ஆன்மீக ஆராய்ச்சிக் கட்டுரையை தங்களுக்கு வழங்குகிறேன்.

No comments:

Post a Comment