உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பியிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சென்னை கிளை அது. கைநிறையச் சம்பளம், வீடு, மருத்துவம் எல்லா வசதிகளையும் தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியிருக்கிறது அந்த நிறுவனம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தன்னுடைய ஊழியர்களுக்காக ஒரு மருத்துவ முகாமை அந்த நிறுவனம் நடத்தியது. ஊழியர்களின் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவைப் பார்த்த நிர்வாகத்துக்கோ பெரும் அதிர்ச்சி. ஊழியர்களில் பலருடைய உடலை நீரிழிவு, மிகை - குறைந்த ரத்தஅழுத்தம், உடல்பருமன் பிரச்சினைகள் வெளியே தெரியாமல் தின்றுகொண்டிருந்தன.
இத்தனைக்கும் அந்த நிறுவனத்தில் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி மையம், ஏரோபிக்ஸ் கூடம், நீச்சல் குளம் போன்ற பல்வேறு வசதிகள் இருந்தன. இத்தனை வசதிகள் இருந்தும் தங்கள் ஊழியர்களுக்கு உடல் சார்ந்து இத்தனை பிரச்சினைகள் இருப்பதற்கு என்ன காரணம், இதை எப்படிச் சரிசெய்வது எனப் பல கேள்விகள் நிர்வாகத்தின் மனதில் ஓட, பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியது அந்த நிறுவனத்தின் நிர்வாகம்.
“உங்கள் கேள்விகள் எல்லாவற்றுக்குமான ஒரே பதில் உணவு முறைதான்” என்றார் அவர். அந்த ஊட்டச்சத்து நிபுணர் கோமதி கௌதமன்.
பிரச்சினைகள் பலவிதம்
“அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் 25 முதல் 45 வயதுவரை உள்ளவர்களே அதிகம் பணிபுரிகின்றனர். 35-லிருந்து 45 வயதுவரை இருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, தைராய்டு, பி.சி.ஓ.டி. என 150 ஊழியர்களுக்கு வெவ்வேறு பிரச்சினைகள் இருந்தன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடற்பயிற்சியோ, வேறு வகையான முயற்சிகளோ எதுவுமே பயன்தரவில்லை என்ற நிலையில்தான், ஊட்டச்சத்து நிபுணரான என்னுடைய உதவியை அவர்கள் நாடினார்கள்” என்கிறார் கோமதி கௌதமன்.
அட்டவணைக்கு ஏற்ற உணவு
“ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பிரச்சினைகள் இருந்ததால், ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக ஒரு மருத்துவ அட்டவணையை முதலில் தயாரித்தோம். அந்த அட்டவணையை ஒட்டி ஒவ்வொருவருக்கும் உரிய சரிவிகித உணவு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி சரிவிகித உணவை யார் தயாரித்துக் கொடுப்பது? அல்லது, எந்த உணவகத்திலிருந்து வரவழைப்பது? எங்கள் ஊழியர்களுக்கு ஏற்ற சரிவிகித உணவைத் தயாரிக்கும் பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்னும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நான்கு வேளை உணவைப் பிரத்யேகமாகத் தயாரித்து வழங்கிவருகிறோம்” என்கிறார் கோமதி கௌதமன்.
30-லிருந்து 150-க்கு
தொடக்கத்தில் 30 ஊழியர்களே சரிவிகித உணவு தேவை என்று கேட்டனர். அவர்கள் அந்த அதைச் சாப்பிடத் தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பரிசோதனை செய்து பார்த்தபோது உயர் ரத்தஅழுத்தம், உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் மட்டுப்பட்டிருப்பது தெரிந்தது. பரம்பரை காரணங்களால் நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் பிரச்சினைகளோடு இருந்தவர்களிடமும் நல்ல மாற்றங்கள் தெரிந்தன.
படிப்படியாக அந்த ஒரு நிறுவனத்தில் மட்டுமே 150 ஊழியர்களுக்குச் சரிவிகித உணவைப் பரிமாறும் நிலை உருவானது. உணவால் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் வெளியிலும் பரவ ஆரம்பித்தது. இன்றைக்கு பேபால், போலாரிஸ், ரானே மெட்ராஸ் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 300 ஊழியர்களுக்கு ஒருநாளைக்குத் தேவையான சரிவிகித உணவைத் தயாரித்து வழங்கிவருகிறார் கோமதி.
சரிவிகித உணவு
புரதம் அதிகம் தேவைப்படுவோருக்குப் புரதச்சத்தும் நார்ச்சத்து அதிகம் தேவைப்படுவோருக்கு நார்ச்சத்து மிகுந்த உணவும் அளிக்க வேண்டும். இதுபோன்று ஒருவருடைய உடல்நிலைக்கு ஏற்ற சரிவிகித உணவு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா என்று அவரிடம் கேட்டால், “விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பி.எம்.ஐ. அளவின் அடிப்படையில் ரத்தஅழுத்தம், நீரிழிவின் வகை ஆகியவற்றைக் கொண்ட ஒரு மருத்துவ அட்டவணையைத் தகுந்த மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையோடு உருவாக்கிக்கொள்ள முடியும். அந்த அட்டவணையின் அடிப்படையிலும் ஒருவருக்கான சரிவிகித உணவின் பட்டியலை, (உணவின் அளவு மற்றும் கலோரி அளவோடு) நாங்கள் அறிவுறுத்துவோம்.
நாங்கள் தயாரிக்கும் உணவில் சர்க்கரை, மைதா போன்றவற்றை அறவே தவிர்க்கிறோம். பாரம்பரியத் தானியங்களால் செய்யப்பட்ட உணவு, கோதுமை தோசை, வரகு, சாமை, தினை போன்றவற்றால் ஆன உணவுப் பண்டங்களைத்தான் சுழற்சி முறையில் வழங்கிவருகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம்” என்கிறார் கோமதி.
சரிவிகிதம் முக்கியம் மக்களே!
சரிவிகித உணவை உண்பது எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியம் எப்போது சாப்பிட வேண்டும் என்பதும். நீங்கள் எந்தப் பணியைச் செய்பவராக இருந்தாலும் சரி, இரவில் தாமதமாகச் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட்டுவிட (அரை வயிறு அளவுக்கு) வேண்டும். சாப்பிட்டு ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
வீட்டில் விசேஷம், பார்ட்டி போன்ற காரணங்களால் உங்களுக்கு ஒவ்வாத புதிய உணவு வகைகளை, எளிதில் ஜீரணமாகாத உணவை உண்பதற்கு முயற்சிக்காதீர்கள். அதனால் எந்தப் பலனும் இல்லை. ஒருநாள்தானே என்று உங்களை நீங்களே சமாதானம் செய்துகொள்ளாதீர்கள்.
அவசர அவசரமாக உண்பதும் அதிகமாக உண்பதும் வயிற்றுக்கு உபாதையாக முடியும்.
இரைப்பைக்கு ஓய்வு அவசியம். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உணவு செரித்துவிட்டால். அது நல்ல நித்திரைக்கு வழிவகுக்கும்.
அதிகக் காரம், அதிகப் புளிப்பு மிகுந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
தயிர், நீர்ச்சத்து நிறைந்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும். மதிய உணவில் கீரைகளைச் சேர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக, இரவு உணவில் சேர்த்தால் ஜீரணக் குறைபாடு ஏற்படும்.
உணவைப் பொறுமையாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது குளிர்பானங்களோ, நீரோ அருந்தக் கூடாது.
இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானம் அருந்துவது நல்லது. மாலையிலும் சுக்கு மல்லி கலந்த பானம் சிறந்தது
No comments:
Post a Comment