Wednesday, December 30, 2015

உணவே மருந்து- 2; கார்ப்பரேட் கலாசாரம் தந்த வாழ்க்கை முறை...

இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறை...கார்ப்பரேட் கலாசாரம் உருவாக்கி வைத்திருக்கும் "கௌரவ” உணவுப்பழக்கம்...காற்றில் பரவிக்கிடக்கும் கதிரியக்க வலை....இவற்றின் ஆக்கிரமிப்பில் நம்மிடம், நம் முன்னோர்களிடம் இருந்த விஷயங்கள் எல்லாம் கூட நமக்கு "எங்கேயோ கேட்ட விஷயங்களாய்” ஆகிப்போனதன் பலன் தான் இந்த கட்டுரைத் தொடரின் ஆணிவேர். 

காலைல இருந்து வேலை செஞ்சது உடம்பு அலுப்பா இருக்கு... ஒரு இஞ்சிக் கஷாயம் வச்சு குடிச்சா காலைல உடம்பு கலகலன்னு இருக்கும் என்ற முன்னோர்களின் வழி வந்த நாம்... 

”காலைல இருந்து உட்கார்ந்திருந்தது ரொம்ப டயர்டா இருக்கு.... ஒரு எனர்ஜி டிரிங் சாப்பிட்டா ரெப்ரஷ் ஆயிடலாம்” என்று சொல்லப்பழகி விட்டோம். அதை விட கொடுமையான விஷயம், அதை பெருமை என நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி நம்ப வைக்கப்பட்டோம் என்பதும் உண்மை. 

கரித்தூளையும், உப்பையும் சேர்த்து பல் துலக்குவதை அவமானம் என்று நம்பவைத்தவர்கள், இன்று "உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா... சார்க்கோல் இருக்கிறதா” என்று நம்மிடமே கேள்வி கேட்டு, அதையும் காசு கொடுத்து வாங்க வைத்து விட்டது தான் சோகம். 

"இதை” சாப்பிட்டால் இதய நோய் வராது என்று விளம்பரங்கள். மருத்துவ ஆய்வுகள் சொல்வதாகச் சொல்கிறார்கள். அடுத்த நான்கு வருடத்தில் "அதை”சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மற்றொரு ஆய்வு சொல்கிறது. இடைப்பட்ட நான்காண்டுகளில் நாலு கோடிக்கு மேற்பட்டவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு மருந்தோ-செயற்கை உணவோ வரும் முன்பு அவைகள் சோதனை சாலைகளில் எலிகள்-முயல்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுமாம். ஆனால், இப்போதெல்லாம் கார்ப்பரேட்கள் அம்மாதிரியான சோதனைகளை ஆய்வகங்களில் செய்வதற்கு பதிலாக இந்தியா போன்ற நடுத்தர மக்கள் நிறைந்த நாடகள் மீதுதான் சோதனை செய்கின்றன. 

இருபது வருடங்களுக்கு முன்பு "மாரடைப்பு” மரணம் எங்கோ நிகழும். "கேன்சர்” என்பது எங்கோ கேள்விப்பட்ட வார்த்தையாக இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு, கேன்சர் மரணங்கள் நமது ஊரில், நமது தெருவில், நமது வீட்டிலே கூட நிகழும் பேரபாயம் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது. யார் சொல்வதை நம்புவது, யார் சொல்வதை நிராகரிப்பது, எது ஆரோக்கியம், எது கெளரவம், எது நல்லது, எது கெட்டது... எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லாவிட்டாலும் சில தெளிவுகளையாவது இனி வரும் கட்டுரை தொடர்கள் நிச்சயம் கொடுக்கும் என நம்பலாம்.


No comments:

Post a Comment