அந்த நண்பருக்கு வயது 35 ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது;ஏற்கனவே இரண்டு
குழந்தைகள் அவருக்கு! அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது,ஒருமுறை எம்மை சந்தித்தார்;அப்போது
நாங்கள் நான்கு ஜோதிடர்கள் ஒன்றாக காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தோம்;
மதுரை,ஈரோடு,வேலூர்,சென்னை போன்ற நகரங்களில் ஜோதிட ஆராய்ச்சி மையங்கள்
இருக்கின்றன;அவைகள் அறக்கட்டளைகளின் கீழ் இயங்கிவருவதால்,அங்கே ஜோதிடர்கள் தமது அனுபவத்தைப்
பகிர்ந்து கொள்ள விடுமுறை நாட்களில் சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;
ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற சிறுநகரங்களில் ஜோதிடப் பயிற்சியே கிடைப்பது
அரிது;இரண்டு ஜோதிடர்கள் சந்தித்துக் கொண்டால்,ஒருவரை பார்த்து இன்னொருவர் சந்தேகப்படுவது
அல்லது பம்முவது(பயப்படுவது)தான் காலம் காலமாக நடந்து வரும் உண்மை;அதையும் மீறி சில
ஜோதிடர்களை ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை ஒருங்கிணைப்பது
வழக்கம்;அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அல்லது சிவகாசி சாலையில் அமைந்திருக்கும்
மூவர் ஜீவசமாதியில் ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டு அதை ஆராய்வது வழக்கம்;
இதன் மூலமாக
அங்கே வரும் ஜோதிடர்கள்,ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிட ஆர்வலர்களுக்கு ஜோதிட விழிப்புணர்ச்சி
ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன;ஜோதிடர்களின் வறுமையும் குறையத் துவங்கியது;ஒரு நாளில்
சுமாராக ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஜோதிட கலந்துரையாடல் செய்வது வழக்கம்;
அப்படி ஒரு நாளில் தான்,35 வயது நண்பர் அங்கே வந்தார்;வந்து,எங்களின்
ஜோதிடப் புலமையைக் கவனித்துக் கொண்டே இருந்தார்;மறுநாள் எம்மை தனிமையில் சந்தித்தார்;
யோகமான ஜாதகம் நமக்கு இல்லை எனில் எப்படி வசதியாக வாழ்வது? என்று கேட்டார்;
யோகமான கிரக அமைப்பில் பிறந்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால்
போதும் என்று கூறினோம்;
அது முடியாவிட்டால் என்ன செய்ய?
நீங்கள் கேட்பது புரியவில்லை;என்றோம்;
யோகமான பெண்ணை திருமணம் செய்ய முடியாவிட்டால்,எப்படி வசதியாக வாழ்வது?
என்று கேட்டார்;
உங்கள் ஜாதகத்தில் மறைந்திருக்கும் தோஷங்கள்,சாபங்களை நீங்களே நிவர்த்தி
செய்தால் போதும்;வசதியான,வளமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று விளக்கினோம்;
சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போன அவர்,அடுத்த கேள்வியை வீசினார்;
அப்படி நிவர்த்தி செய்ய எவ்வளவு காலமாகும்?
குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்;அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கூட ஆகலாம்; என்றதும்,இடைமறித்து,அடுத்த
கேள்வியை வீசினார்;
“அதுவரைக்கெல்லாம் என்னால் பொறுக்க முடியாது;சீக்கிரம் வாழ்க்கையில்
செட்டில் ஆகணும்”அதுக்கு ஏதும் வழி இருக்கா? என்றார்;
எமக்கு சிரிப்புத் தாளவில்லை;வேகமாக பணம் சம்பாதித்தால்,அது வேகமாகப்
போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய அரசியலில் படுவேகமான உயர்ந்து,படுவேகமான
வீழ்ந்தவர்களின் வரலாற்றை விவரித்தோம்;
ஒரு கேவலமான பார்வை எம்மை அவர் பார்த்தார்;அதில் நீ எனக்கு உதவ மாட்டாய்;உதவ
முடிந்தாலும் செய்ய மாட்டாய் என்ற அவரது எண்ணம் புலப்பட்டது;பல்லைக் கடித்துக் கொண்டு
போய்ட்டு வாரேன் என்று போய்விட்டார்;சில மாதங்கள் கடந்தன;ஒருநாள் மீண்டும் அவர் வந்தார்;
“எனது மனைவிக்கு இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது” என்றார்;
அப்படியா! சுகப் பிரசவம் நடைபெற வாழ்த்துக்கள் என்றோம்;
டாக்டர் மேடம்,குறிப்பிட்ட நேரம் குறித்துவிட்டு வாங்க என்று கூறியிருக்கிறார்;என்பதை
மெதுவாகவும்,எதிர்ப்பார்ப்போடும் கூறினார்;
அப்போது நிறைய ஓய்வு நேரம் இருந்தபடியால்,அவரிடம்,
“அப்படியா! ரொம்ப நல்லது;இப்போ நீங்க ஃப்ரீதானே?”என்று கேட்டோம்;
அதற்கு என்று காத்திருந்தவர் போல,படுவேகமாக ஆமாம் ஆமாம் என்று கூறினார்;
உங்கள் டாக்டர் மேடம் எனென்ன தேதிகள் கூறியிருக்கிறார்? என்று கேட்டோம்;
இந்த மாதம் 7,8,9 கூறியிருக்கிறார்;என்று அவர் உற்சாகம் கொப்பளிக்க விவரித்தார்;
சுமாராக 30 நிமிடங்கள் கரைந்தன;
“9 ஆம் தேதியில் இரண்டு நேரங்களை குறிப்பிட்டு,இந்த நேரத்தில் உங்கள்
குழந்தை பிறந்தால்,சில ஆண்டுகள் வரை நீங்களும்,உங்கள் மனைவியும் கஷ்டப்படவேண்டும்;அல்லது
தினமும் சண்டையிட வேண்டும்;அதன் பிறகு,நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்” என்றோம்;
அந்த நேரம் தான் எனக்கு வேண்டும்’ என்றார் படு உற்சாகமாக;
“தம்பீ! உங்களுடைய கஷ்டம் புரியுது;உங்களைப் பற்றியும்,உங்கள் வாழ்க்கை
முறையைப் பற்றியும் விசாரிச்சதுல,நீங்கள் சிறு வயசில் இருந்தே பணத்தால் ரொம்ப அவமானப்பட்டு
இருக்கீங்கனு கேள்விப் பட்டேன்;. . .”
அடிவயிற்றில் இருந்து கணீர் குரலில்,
“அண்ணே! நான் என்ன கஷ்டம்னாலும் பட்டுக்கறேம்ணே!நான் கோடீஸ்வரன் ஆகணும்;அந்த
நேரத்தைக் குடுங்க.டாக்டர் மேடத்திடம் கொடுக்கணும்”என்று அவசரப்படுத்தினார்;நாம் சொல்வதைக்
கவனிப்பதாக இல்லை;
(இன்றைய கால கட்டத்தில் இவரைப் போலத்தான் பலர் இருக்கின்றனர்;சிறுவயது
முதல் உறவுகள்,நட்புகளின் பணத்திமிரால் பல்வேறுவிதங்களில் அவமானப்படுகின்றனர்;பரிதாபமாக
இருக்கின்றது.உலகமயமாக்கல்,ஊழலால் நேர்மையாளர்கள் படும் கஷ்டம்,அரசியலின் சூழ்நிலை
போன்றவை அப்பாவிகளையும் பேராசை மிக்கவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது)
குழந்தை பிறக்க இருக்கும் நேரத்தை எழுதிக் கொடுத்தோம்;பத்து நாட்கள்
கடந்தன;
அந்த 35 வயது நண்பர் போன் செய்தார்;
“அண்ணே! நீங்க சொன்ன நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தை பிறந்துடுச்சு;நான்
கோடீஸ்வரன் ஆயிடுவேன்ல”என்று ஒரு தகவலோடு,ஒரு சந்தேகக் கேள்வியையும் எழுப்பினார்;
நாம் பொறுமையாக, “தம்பீ! நீங்க கோடீஸ்வரன் ஆன பிறகு,எம்மை மட்டுமல்ல;யாரையும்
மதிக்க மாட்டீங்க;யாரிடமும் பழகவும் மாட்டீங்க”என்று கூறினோம்;அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை;அடுத்த
22 நிமிடத்தில் நேரில் வந்தார்; “அப்போ நீங்களே என் குழந்தைக்கு ஜாதகம் எழுதிடுங்க”
என்றவர், ‘ஜாதகம் எழுதறதுக்கு எவ்வளவு தட்சிணை?’என்றார்.நாம் சொன்னதும் முழுத் தொகையையும்
கொடுத்துவிட்டு பொறுமையின்றி புறப்பட்டுவிட்டார்;
45 நாட்களில் வந்து தமது குழந்தை ஜாதகத்தை வாங்கிவிட்டுப் போனார்;
குழந்தை பிறந்தது முதல் 1 வருடம் 7 மாதம் வரை வீட்டில் ஒரே சண்டையாக
இருக்கும்பா என்றோம்;சரிங்கண்ணே! நான் சமாளிச்சுக்கிறேண்ணே என்றார் எரிச்சலுடன்!
ஆறு மாதங்கள் கடந்தன;
ஒரு நாள் ஓடி வந்தார்; இடம் பொருள் பார்க்காமல், “ அண்ணே! உங்கள் கிட்ட
ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ணே. . .” என்று இழுத்தார்;
தம்பீ! இப்போ ராஜபாளையத்துக்கு போய்க்கிட்டு இருக்கேன்;நீங்கள் மாலையில்
வர்றீங்களா? என்றோம்;
நானும் உங்க கூட வர்றேனே? என்ற வார்த்தைகளில் கெஞ்சல் தெரிந்தது;
சரி வாங்க என்று அடுத்து வந்த தனியார் பேருந்தில் ஏறினோம்;
உட்கார சீட் கிடைத்தது;பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை;உட்கார்ந்த உடனே
அவர் அழுத அழுகையில் பேருந்தில் இருந்த அனைவருமே திரும்பிப் பார்த்தனர்;இவரோ,அதையெல்லாம்
கண்டுகொள்ளாமல் ஓவென பெரும் கூச்சல் போட்டு அழ ஆரம்பித்தார்;
கண்டக்டரோ பேருந்தை அவசரமாக
நிறுத்திவிட்டு என்னவென்று விசாரிக்க வந்துவிட்டார்;கூடவே டிரைவரும்! எமக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது;இந்த
சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது?என்று தெரியாமல் அந்த கணத்தில் தடுமாறித்தான் போனோம்;
அழுகையை நிறுத்திய அந்த நண்பர்,கண்டக்டரிடம், “அண்ணே! எனக்கு குடும்பக்
கஷ்டம்;நீங்க தப்பா நினைக்காதீங்க” என்று உறுதியான குரலில் சொல்லிவிட,பேருந்து புறப்பட்டது;
அழுகையை நிறுத்தியவர்,எம்மிடம் நீங்கள் சொன்னது மாதிரி தினமும் என்னை
ரொம்பக் கேவலமா என் பொண்டாட்டி திட்டுறா;கையில் எது கிடைச்சாலும் எடுத்து என் மேலே
வீசுறா; இது எத்தனை நாளில் நிற்கும்? என்றார்;
குழந்தை பிறந்து எவ்வளவு நாள் ஆகுதுபா? என்று கேட்டோம்;
மனதில் கணக்கு போட்டவாறு, 4 மாசம் என்றார்;
“குழந்தைக்கு 1 வயது 7 மாசம் முடியும் வரை இதுதான்பா நடக்கும்” என்றோம்;
உடனே அதையும் மனக்கணக்கு போட்டு,கண்களை அகலமாக விரித்துக் கொண்டு, “இன்னும்
ஒரு வருசம்,3 மாசமா? அதுவரைக்கும் என்னால் தாக்குப் பிடிக்க முடியாதுண்ணே!”என்றார்;
நமக்கு முணுக்கென்று கோபம் வந்தது;
அன்னைக்கு நான் பாத்துக்குறேன்னு சொன்னே? என்று பதிலுக்கு நாம் கத்தினோம்;
அந்த நண்பரோ கொஞ்சமும் அசரவில்லை; அதைவிட அதிகமான குரலில் கத்தியவாறு,
“ஆமாம்! நான் தான் சொன்னேன்;. . .”என்றவர் சட்டென குரலினை தாழ்த்தியவாறு
“பரிகாரம் ஏதும் இருக்கா?”என்றார்;
“தம்பீ! இதுக்கு பரிகாரம் இல்லை;நீங்கள் உள்ளூரிலேயே லாட்ஜில் தங்கிக்குங்க;இது
மட்டும் தான் வழி”என்றோம்;
எமது குரலில் இருந்த தீர்க்கமான பதிலைக் கேட்டு,அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவர்,(வன்னியம்பட்டி
ஸ்டாப் அது=ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் நடுவே இருக்கும் ஸ்டாப் அது)
மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போயேவிட்டார்;
பேருந்தில் இருந்தவர்கள் பார்த்த பார்வை இருக்கிறதே? என்னை வட்டிக்கு
விடுபவனைப் போல பார்த்தார்கள்;
3 ஆண்டுகள் கடந்தன;அந்த 35 வயது நண்பர் இப்போது கார் வாங்கிவிட்டார்;ஊருக்கு
வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில்(ராஜீவ் காந்தி நகர்) ஒரு பெரிய வீடு கட்டினார்;இப்போது
எம்மை எங்கு பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை;கலியுகத்தின் அடையாளங்களில் ஒன்று இது;இன்று
ஏற்றுமதித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!