Thursday, December 13, 2012

காஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றாக வேண்டும்: நீதிபதி மார்கண்டேய கட்ஜூ


புதுடில்லி: காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பிரச்னை தீர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த தெற்காசிய ஊடகங்கள் கமிஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதே ஒரு கள்ளத்தனமான நடவடிக்கை. இரு நாட்டு கொள்கை என்பதை நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானை ஒரு சட்டபூர்வமான நாடாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காஷ்மீர் பிரச்னைக்கு ஓரே நிரந்தர தீர்வு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதே. மத்தியில் வலிமையான, மதச்சார்பற்ற, நவீன கால மனப்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டும்.

நான் சொல்கிறேன் இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள். உங்களுக்கெல்லாம் தலையில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. டில்லியில் வெறும் ரூ. 2 ஆயிரத்தில் ஒரு ஜாதி மோதலை ஏற்படுத்தி விடலாம். வழிபாட்டுத்தலம் என்று கூட பார்க்காமல் சிலர் இதை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதை நம்பி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலுக்குப்பின்னால் சில விஷமிகள் இருப்பதை அவர்கள் உணர்வதேயில்லை.

கடந்த 1857ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்தியாவில் ஜாதி, இன மோதல்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. மிகவும் கசப்பான உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் மத வெறியர்களாக உள்ளன. இது எவ்வாறு நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்களே. அவர்களின் வருகைக்குப்பின்னரே நாட்டில் மத மோதல்கள் அதிகரித்தன. இந்தியர்களை மத ரீதியாக பிரித்தால் மட்டுமே தங்களால் இந்நாட்டை ஆளமுடியும் என்ற ஆங்கிலேயர்களின் சதியே இந்த மோதல்களுக்கு காரணம். நமது முன்னோர்கள் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளை கற்றனர். ஆனால் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், இந்தி இந்துக்களுக்கு என்றும், உருது முஸ்லிம்களுக்கு என்றும் பிரித்து, இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். இந்தியர்களாகிய நாம், இந்த விளையாட்டெல்லாம் நம்மை முட்டாளாக்க செய்யப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கசப்பான விஷயங்களை நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment