Saturday, December 15, 2012

திருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள்!!!





அட்டவீரட்டானத்தில் இரண்டாவதாக இருப்பது திருக்கண்டியூர் ஆகும்.இங்கேயும் ஸ்ரீகாலபைரவர்,சிவலிங்க வடிவில் இருக்கிறார்.பெரும்பாலான சிவாலயங்களில் ஏதோ ஒரு மூலையில் நவக்கிரகச் சன்னதி இருக்கிறது;இங்கே சிவபெருமானின் சன்னதிக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது;சைவ ஆராய்ச்சியாளர்கள் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்வார்கள் என்று நம்புவோம்;தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் காவிரிக்கரையில் அமைந்திருக்கிறது.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவையாறும்,வேறு பல பழமையும்,பெருமைகளும் மிக்க சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன;திருக்கண்டியூரிலிருந்து பத்து சதுர கி.மீ.தூரத்திற்குள் 12 அரிய,அபூர்வமான,அற்புதங்கள் நிறைந்த சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.


திருந்து தொண்டர்கள் செப்புமின்
  மிகச் செல்வன் தன் அது திறமெலாம்
கரும் தடம் கண்ணினார்கள் தாம் தொழு
 கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல்நிழல்
 அறம் உரைத்ததும் மிகு வெம்மையார்
வருந்த வன்சிலையால் அம்மாமதில் மூன்றும்
 மாட்டிய வண்ணமே          (சம்பந்தர்)
திருக்கண்டியூர் திருத்தலம் இது.சிவபூஜைக்காக பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்மகூபம் என்ற கிணறு மட்டுமின்றி காவிரிநதியும் புண்ணியத்தீர்த்தமாகத் திகழ்கின்றது.

இந்த ஊழியின் துவக்கத்திலும் சிருஷ்டியை ஆரம்பிப்பதற்காக உருவம் இல்லாத பரமசிவம் ஏகபாத மூர்த்தியாகி வலது புறத்திலிருந்து ஐந்துமுகங்கள் கொண்ட தெய்வத்தைப் படைத்தார்;படைக்கும் தொழிலுக்கு அதிதேவதையாக்கி பிரம்ம பதவியை அருளிச் செய்தார்;இடப்பாகத்திலிருந்து ஒரு முகம் கொண்ட தெய்வத்தைப்படைத்தார்;காக்கும் துறைக்கு அதிபதியாக்கி விஷ்ணு பதவியை வழங்கியருளினார்.செஞ்சடையிலிருந்து ஒரு முகம் கொண்ட தெய்வத்தைத் தோற்றுவித்தார்;(நமது கர்மவினைகளை) அழிக்கும் துறைக்கு அதிகாரியாக்கி ருத்ர பதவியை அளித்தார்.
பரம்பொருளால் தோற்றுவிக்கப்பட்ட ஆறுபதவிகளிலுள்ள ஆறு தெய்வங்களும் ஈசனை வழிபட்டுத் தங்கள் தங்கள் தொழிலைச் செய்யலாயினர்.


ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய தேவதேவன்(திருவாசகம்)
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை(திரு மந்திரம்)
அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே(திருவாசகம்)
என்று இதனை திருமூல முனிவரும்,நந்திதேவரின் அவதாரமான மாணிக்க வாசகப்பெருமானும் போற்றுகின்றனர்.

பைரவரைத் தோற்றுவித்துப் பிரம்மனின் தலை கொய்த லிங்கப் பரம்பொருள் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருக்கண்டியூர் எனப்பட்டது.வெட்டப்பட்ட தலையை படைத்துக் கொள்ளும் வல்லமை இல்லாமல் நான்முகன் ஆன பிரம்மதேவன் ஆணவம் முற்றிலும் நீங்கினான்.திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரரைப் பூஜித்தான்;பிரம்மகூபம் என்ற பெயரில் கிணறு உண்டாக்கி லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டான்;பின்னர்,திருமாலின் உந்தியிலிருந்து வந்த தாமரை மலர் மேல் சென்று அமர்ந்தான்;இதனால்,மஹாவிஷ்ணுவின் மகன் ஆனான்.


நான் என்ற உணர்வோடு,விருப்பு வெறுப்போடு கர்மங்களைச் செய்யும்போது கர்மபலன்கள் பற்றுகின்றன.ஸ்ரீகாலபைரவர் பிரம்மனது தலையைக் கொய்யும்போது சிவநினைவுடன் செய்யாமல் தான் என்ற முனைப்புடன்(ஈகோவுடன்) தன் வல்லமை எண்ணிச் செய்தார்;இதனால்,செய்வினைப்பலனாக பிரம்மகபாலம் அவர் கையோடு ஒட்டிக்கொண்டது;துன்பம் அடைந்த ஸ்ரீகாலபைரவர் திருக்கண்டியூர் வீரட்டானேஸ்வரரைத் தொழுது வழிபட்டார்;திருக்கண்டியூர்நாதன் அவரை காசிக்குச் செல்லுமாறு அருளிச் செய்தார்;


திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் அருளிச் செய்தவாறு காசி சென்ற ஸ்ரீகாலபைரவர் விஸ்வேஸ்வரரை நினைந்து கங்கையில் புனித நீராடியபோது அவரது கையில் இருந்த பிரம்ம கபாலம் கீழே விழுந்தது;கபாலம் விழுந்த இடம் கபால மோட்சம் என்று பெயர் பெற்றது;சர்வேஸ்வரன் ஸ்ரீகால பைரவரை காசியின் காவல் தெய்வம் ஆக்கி அருளினார்.


(பின்குறிப்பு:இந்த சம்பவத்தை இன்றைய ஆன்மீக மாத/வார இதழ்கள் வேறுவிதமாக திரித்து எழுதுகின்றன;2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த சில ஆன்மீக தமிழ் மாத இதழ்களில் இப்படி திரித்து வெளியிட்டிருப்பதைக் கண்டு மனம் கொதித்தது;ஸ்ரீகாலபைரவரின் கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டதும்,என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாராம்;அப்போது திருக்கண்டியூரில் இருக்கும் பெருமாள் கோவில் மகாலட்சுமி ஸ்ரீகால பைரவருக்கு பிச்சையிட்டாளாம்;உடனே,ஸ்ரீகாலபைரவரின் பிரம்ம கபாலம் அவரது கையிலிருந்து கழன்று விழுந்ததாம்;
ஸ்ரீகாலபைரவரின் படைப்பே மகாவிஷ்ணுவும்,அவரது துணைவியான மகாலட்சுமியும்;அப்படிப்பட்ட மகாலட்சுமியே ஸ்ரீகாலபைரவருக்கு எப்படி அன்னமிட்டிருக்க முடியும்?
சாஸ்திரத்தை யுகம்,யுகமாக கற்று மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி புராண உண்மைகளுக்கு நடுவே தமது இஷ்டப்படி மாற்றி எழுதி,பத்திரிகைகளுக்கு அனுப்பினால்,எப்படி சராசரி மக்கள் இவர்களின் ஆன்மீக அர்ப்பணிப்பு மனப்பான்மையை நம்புவார்கள்?)

பிரம்மனது தலையைக் கொய்வதற்காகப் பைரவரைத் தோற்றுவித்த திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரராகிய சிவபைரவர் அல்லது பைரவ நாதர்  நந்தியுடன் தனிக்கோவில் போன்ற பெரிய சந்நிதியில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் உள்ளார்.




பரம்பொருளைப் பழித்து செய்யப்பட்ட நாத்திக தட்ச யாகத்தில் தாட்சாயிணி நெருப்புக் குண்டத்தில் விழுந்து மாண்டு போனதைக் கண்ட சப்த ரிஷிகள் தட்சனின் கொடுமைகள் முற்றுப்பெற அருளுமாறு சிவப்பரம்பொருளை வேண்டி பூஜித்தனர்.வீரபத்திரர்,பத்திரகாளி என்ற இரண்டு தெய்வங்களைப் பராபரன் படைத்தருளினார்;தட்ச யாகத்தில் பங்குபெற்ற பாவத்திற்காக தேவ தேவியர்களையெல்லாம் இருவரும் தண்டித்தனர்; தட்சனது தலையை அறுத்து எறிந்த வீரபத்திரர் வடக்கேயுள்ள கயிலைமலைக்குச் சென்று சிவநினைவில் மூழ்கினார்;ஆனால்,பத்திரகாளியோ நரசிம்மர் போன்று வெறி அடங்காமல் கண்ணில் பட்ட எல்லோரையும் தாக்கித் துன்புறுத்தினாள்;காளியின்  கொடுமைக்கு ஆளான மண்ணுலவாசிகளும் விண்ணுலகவாசிகளும் மகேஸ்வரனைப்பூஜை செய்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டினர்.ஆடல் நாயகனான கனக சபேசர் திருவாலங்காட்டில் வெளிப்பட்டு திருநடனம் ஆடினார்.பத்திரகாளியும் போட்டி போட்டுக்கொண்டு ஆட வந்தாள்;கால் பெருவிரலைக் காது வரையிலும் உயர்த்தி ஆடும் ஊர்த்துவத் தாண்டவம் என்ற நடனத்தை அம்பலவாணர் ஆடினார்.இந்த நுணுக்கமான அரிய நடனத்தை பெண் தெய்வமான காளி ஆட முடியாமல் போனதால் கோபமும் வெறியும் அடங்கி அமைதியானாள்.


திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரரை தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு முறைப்படி வழிபட்டால்,நமது ஆணவமும்,கர்மவினைகளும் காணாமலேயே போய்விடும் என்பது யுகம் யுகமாக நிரூபிக்கப்படும் உண்மை.மேலும்,பிரிந்த குடும்பத்தினர் அனைவருமே ஒன்று சேருவார்கள் என்பது அனுபவ உண்மை.
ஆதாரம்:அட்ட வீரட்டானங்கள்,பக்கங்கள் 56 முதல் 80 வரை;

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment