மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் வழியில் எட்டு கி.மீ.தூரம் பயணித்தால் ஒரு கிராமம் வரும்.அந்த கிராமத்தின்பெயர் மங்கநல்லூர்.மங்க நல்லூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வழுவூர் வீரட்டானம் கோவிலுக்குப்பயணிக்கலாம்;அல்லது மங்கநல்லூருக்கு சிறிது தூரம் முன்பாக வழுவூர் என்ற பழைய பலகை இருக்கும்;அந்த பலகை காட்டும் பாதையில் இரண்டு கி.மீ.தூரத்தில் பயணித்தால் வழியில் ஒரு ரயில் தண்டவாளமும்,அதைக்கடந்தால் ஒரு அழகிய கிராமமும் அதையும் கடந்தால் பாழடைந்த ஆனால் மிகப் பிரம்மாண்டமான ஆலயமும் தென்படும்;இந்த ஆலயமே வழுவூர் ஆகும்.சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாலபைரவர் வீரதீரச் செயல் செய்த இடம் இதுதான்;வழுவூர் அட்டவீரட்டானங்களில் ஏழாவது வீரட்டானம் ஆகும்.
பிரம்மாவின் புதல்வர்கள் 48,000 ரிஷிகள் இங்கே பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தனர்;அப்படி தவம் செய்து வரும்போது தாங்களே பெரியவர்கள் என்ற எண்ணத்தில் சதாசிவத்தை வழிபாடு செய்யாமல் இருந்தனர்;இவர்களுக்கு பாடம்புகட்ட வேண்டி சிவபெருமானும்,மஹாவிஷ்ணுவும் இங்கே வருகைதந்தனர்;சிவபெருமான் பிச்சாடனர் வடிவம் எடுத்து வந்தார்;மஹாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்து இந்த பகுதிக்கு வந்தார்;இதனால் கோபமுற்ற( கலியுகம் என்பதால் இந்த வரலாற்று உண்மையில் சில விஷயங்களை எடிட் செய்தே வெளியிடவேண்டியிருக்கிறது)மஹாவிஷ்ணுவின் மோகினி வடிவமும்,சிவபெருமானின் பிச்சாடனர் வடிவமும் இணைந்து ஐயப்பன் இங்கே பிறந்தார்;எனவே,ஐயப்பன் பிறந்த இடம் வழுவூர் தான்!
48,000 ரிஷிகளும் கோபத்தில் சிவனுக்கு எதிராக அபச்சார யாகம் நடத்தினர்;யாக குண்டத்திலிருந்து எழுந்த பாம்புகள்,மழு,யானை போன்றவைகள் சிவபெருமானின் அணிகலன்களாக மாறின;இந்த சம்பவம் நிகழ்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்குப்பின்னர்,இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது;
யானை வடிவில் ஒரு அசுரன் தினமும் இங்கே வருகை தந்து சிவபூஜை செய்து வந்தான்;அவ்வாறு தினமும் வழிபட்டதால்,பிறப்புஇறப்பு இல்லாத முக்தியைப்பெற்றான்;அதனாலும் இந்த ஊருக்கு வழுவூர் என்ற பெயர் உண்டானது;
பராசக்தியின் அழுக்கிலிருந்து முழுமுதற்கடவுள் விநாயகர் பிறந்ததாக நாம் காலம் காலமாக கேள்விப்பட்டிருக்கிறோம்;அது வடிகட்டினப்பொய் என்பது இந்த கோவிலின் ஸ்தலபுராணங்களை வாசிக்கும்போது அறியமுடிந்தது;
விநாயகப்பெருமானின் நிஜ புராணம் இங்கேதான் நிகழ்ந்திருக்கிறது;அதைக் கொஞ்சம் பார்ப்போமே! அசுர உடலும் யானை முகமும் கொண்டிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரன் வானவர்களுக்கு மிகுந்த தொல்லைக் கொடுத்தான்;விஷ்ணு முதலான தேவர்கள் சிவபூஜை செய்து வழிபட்டனர்;கஜமுகாசுரனிடமிருந்து தங்களைக் காத்தருளுமாறு சிவப் பரம்பொருளை வேண்டினர்;குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு உருவமும் இல்லாத கயிலைநாதன் யானை வடிவம் கொண்டார்;உமையை பெண்யானையாக உருக் கொளச் செய்தார்;தொழுகின்றவர்களின் துன்பம் தீர்ப்பதற்காக கணபதி என்ற சிவநாமம் கொண்ட யானையை அருள் நோக்கினால் ஈசன் படைத்து அருளினார்;மூன்று கண்களும் ஒற்றைத்தந்தமும் கொண்டு பிறந்த யானைக்குட்டியைக் கண்ட தேவர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தனர்.
பிடி அதன் உரு உமை கொள
மிகு கரி அதன் வடிகொடு
தனது அடிவழிகொடு
தனது அடி வழிபடும் அவர் இடர் கடி
கணபதி வர அருளினன்
மிகு கொடை வடிவினர் பயில்
வலிவலம் உறை இறையே(சம்பந்தர்)
கணபதி என்னும் களிறும்(அப்பர்)
என்று ஈசனை நேரில் வாழ்ந்த அருளாளர்கள் அருளிச் செய்த தெய்வீகத் தேவாரத்தொடர்கள் கணபதி என்ற யானை பிறந்த முறையைப்பாடுகின்றன.
ஒற்றைச் சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை முக்கண்
மிக்கு ஒவாதே பாய் மாதானத்து உறு புகர் இறையைப்
பெற்றிட்டே(சம்பந்தர்)
ஒற்றை மருப்பின் முக்கண்
நாரைப் பதியுள் சிவ களிறே(நம்பியாண்டார் நம்பி)
என்று தெய்வ மழலை திருஞான சம்பந்தரும் பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியும் ஒரு தந்தமும் மூன்று கண்களும் கொண்டு பிறந்த யானைக் கன்றின் தோற்றத்தைப்போற்றுகின்றனர்.
வழுவூர் செல்லும்போது பூசாரியிடம் இந்தக்கோவிலின் பெருமைகள் என்ன? என்பதை மறவாமல் கேளுங்கள்;கஜசம்கார மூர்த்தி என்ற பெயரில் ஸ்ரீகாலபைரவர் சிவபெருமானாக காட்சியளிக்கிறார்;சிலர் ஸ்ரீகாலபைரவர் தோன்றுவதற்கும் முன்பே சதாசிவனே வீரதீரச் செயல் செய்ததாகக் கூறுகின்றனர்;ஆனால்,இங்கே மூலவராகிய சிவபெருமானின் லிங்கத்திற்குள் இருப்பது சாட்சாத் ஸ்ரீகால பைரவப் பெருமானே!
யானையின் தலை மட்டும் முழுமையாக ஒரு திருவடியின் கீழ் இருக்க மற்றொரு திருவடியின் அடிப்பகுதி(உள்ளங்கால்) வெளிப்புறம் தெரியும் வண்ணம் காலைத் தூக்கி நின்று கைகளை விரித்துப் பின்னாலிருந்து யானையின் தோலைப் போர்த்திக் கொள்ளும் அருமையான திருக்காட்சியைக் காண்பதற்கு கோடி கண்கள் இருந்தாலும் குறைவே!
தீபாராதனை காட்டும் போது ஒளிவிடுகின்ற கஜசம்கார மூர்த்தியின் திருமேனியைக் கண்டால் மனிதப்பிறவி பெற்ற பலனை,தமிழ்நாட்டின் அற்புதத் திருத்தலங்கள் 33,000ஐயும் தரிசித்த பலனை முழுமையாக உணர முடியும்;மஹாவிஷ்ணு தேடித் தேடித் திரிந்தாலும் காணமுடியாத திருப்பாதத்தினைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்களின் புண்ணியத்திற்கு உலகில் ஈடு இணண இல்லை;
இதற்கு மேல் வழுவூர் வீரட்டேஸ்வரர் பற்றி எழுத பக்கங்கள் போதாது; அவ்வளவுப்பெருமைகள் இருப்பதால் பாகங்களாக அடுத்தடுத்து நமது ஆன்மீகக்கடலில் வாசிக்கலாம்;மாசி மகத்தன்று சிறப்பான பூஜைகளும்,வழிபாடுகளும் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருகின்றன;
காகபுஜண்டரின் அருள் பெற்ற திரு.தருமலிங்க சுவாமிகள் அவர்கள் தமது பைரவ ரகசியம் என்ற நூலில் வழுவூர் பற்றி மிகச் சுருக்கமாக அதே சமயம் நுட்பமான ஒரு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்.ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள்,நமது கடுமையான கர்மவினைகளைத் தீர்க்க விரும்புவோர் இவரது ஆன்மீக வழிகாட்டுதலைப்பின்பற்றினால்,வெகு எளிதாகவும்,விரைவாகவும் ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறலாம்.
யாருக்கெல்லாம் தியானம் கைகூட வில்லையோ? அது எந்த விதமான தியானமாக இருந்தாலும் சரி; அவர்கள் வழுவூர் வீரட்டானத்திற்கு மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்கள் வர வேண்டும்;மூலவராகிய கஜசம்கார மூர்த்தியின் சன்னதியின் முன்பாக சுமார் முப்பது நிமிடம் வரையிலும் (அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரையிலும்);தாம் அறிந்த தியான வழிமுறைப்படி தியானம் செய்ய வேண்டும்;மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு நாள் என்று பத்து நாட்கள் வருகை தந்து தியானம் செய்து வர வேண்டும்.இப்படி பத்து நாட்கள் வரையிலும் தியானம் செய்து விட்டால்,அதன்பிறகு அவர்களின் தியானம் சுலபமாகக் கைகூடும் என்று அவர் உபதேசிக்கிறார்.
நாம் என்ன செய்யலாம்? ஸ்ரீகால பைரவரின் அவதார நட்சத்திரமான பரணி நட்சத்திர நாளில் அல்லது ஸ்ரீசதா சிவனின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் அல்லது நமது பிறந்த நட்சத்திர நாளில் அல்லது மாதாந்திர அமாவாசை நாளில் இவ்வாறு வந்து தியானம் செய்வோம்;இந்த ஜன்மத்தையே சுத்தமான பிறவியாக ஆக்கிடுவோம்;
நன்றி:அட்டவீரட்டானங்கள்,பக்கங்கள்157,158,166,172,173.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment