அறுபதாம் கல்யாணம் இங்கே காலம் காலமாக செய்யப்பட்டு வருவதன் மூலமாக நாம் திருக்கடையூரை அறிந்திருக்கிறோம்;அதையும் தாண்டி ஏராளமான ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன;என்றென்றும் பதினாறு வயதுடன் வாழும் வரத்தை மார்க்கண்டேயன் இங்கேதான் பெற்றான்;தொடர்ந்த சிவவழிபாட்டின் மூலமாக இந்த வரத்தை சதாசிவனாகிய ஈஸ்வரமூர்த்தியிடமிருந்து பெற முடிந்தது;
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய்ப் பிறவா உரு ஆனவனே
கண்ணாரும் மணியே கடவூர்தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே( சுந்தரர்)
திருக்கடவூர் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.
வார்ந்த நஞ்சு அயின்று
வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல்(திருவாசகம்)
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு
ஒரு தோழம் தேவர் விண்ணில் பொலிய
அமுதம் அளித்த விடைசேர் கொடி அண்ணல்(சம்பந்தர்)
என பாற்கடலிலிருந்து வந்த விஷத்தை உட்கொண்டு உலகங்களைக் காத்தருளிய பரமேஸ்வரனது திருவருளால் பெறப்பட்ட அமிர்தம் வைக்கப்பட்ட கடம்(கலசம்)லிங்கமான ஊர் ஆதலால் கடவூர் என்றுபெயர் பெற்றது.
மகேஸ்வரது திருவருளால் மரணத்தைக் கடந்த திருவூர் ஆதலாலும் கடவூர் என்று பெயர் பெற்றது.காலனைக் கடந்த காலசம்காரியின் ஊர் ஆதலாலும் கடவூர் எனப்பட்டது.
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த
ஆலினில் கீழ் இருந்து ஆரணம் ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே
என்று மார்க்கண்டேயருக்காக மாதவர் நாயகன் காலசம்காரம் செய்ததை திருநாவுக்கரசர் ஒரு பதிகம் முழுவதும் போற்றித் தல வரலாற்றைச் சிறப்பிக்கின்றார்.
திருக்கடையூர் இரண்டு திருக்கோவில்களைக்கொண்டுள்ளது; திருக்கடையூர் எனப்படும் திருக்கடவூர் வீரட்டம் என்ற திருக்கோவிலும்,அதற்கு சற்றுத் தள்ளி உள்ளே திருமெய் ஞானம் எனப்படும் திருக்கடவூர் மாயானம் என்ற திருக்கோவிலும் உள்ளன.
திருக்கடவூர் மயானப்பெருமான் பிரம்ம விஷ்ணுக்களால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால் பெரிய பெருமான்,பிரம்மபுரீஸ்வரர் என்று திருநாமங்கள்;இரண்டு திருக்கோவில்களுக்கும் தேவார திருப்பதிகங்கள் உள்ளன.
ஜீவராசிகளின் உயிர் பறிக்கும் யமனே உயிர் இழந்து சவமாக இருந்ததால் பூமி தேவி பாரம் தாங்க முடியாமல் தவித்தாள்;திருக்கடவூருக்கு வந்து அமிர்தகடேஸ்வரரையும் காலசம்காரமூர்த்தியையும் வழிபட்டாள்.
திருப்பைஞ்ஞீலியில் பாசத்தை மீண்டும் பெற்ற எமதர்மன் சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் திருவான்மியூருக்கு அருகே உள்ள வேளச் சேரி எனப்படும் வேதசிரேணி என்ற தலத்தில் யமதீர்த்தம் என்னும் திருக்குளம் உண்டாக்கி லிங்கப்பிரதிட்டை செய்து பூஜித்துத் தண்டாயுதத்தை மீண்டும் பெற்றான்.யமனுக்குத் தண்டாயுதத்தை அருளிச் செய்த பரமனுக்குத் தண்டீஸ்வரர் என்று திருநாமம் ஏற்பட்டது;திருக்கோவிலுக்கு தண்டீஸ்வரம் என்றும் பெயர் உண்டானது.
கடலில் எழுந்த ஆலகால விஷத்தின் காற்றுப் பட்டே மகாவிஷ்ணுவின் மேனி முழுவதும் கருமையானது;முக்தி பெற்ற முக்தாத்மாவான சுந்தரர் என்ற சிவகணமோ எங்கும் ப்ரவிய ஆலகால விஷத்தை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உருண்டையாகத் திரட்டி எடுத்துக் கொண்டு வந்தார்.இதனால் ஆலகால சுந்தரர் எனப்பட்டார்.சிவலோகத்தில் இருந்த ஆலால சுந்தரர் ஒரு நொடி மகேஸ்வரனை மறந்த போது மலங்களால்(மாயையால்)பற்றப்பட்டதால் பூவுலகில் சுந்தரமூர்த்தி சுவாமிகளாக அவதாரம் செய்தார்.பூவுலகிலும் அவரது வல்லமை மகாவிஷ்ணுவின் வல்லமையை விடப் பலமடங்கு அதிகமாகவே பெரிதும் வியப்பூட்டும் வகையில் இருந்தது;யானையின்காலைக் கவ்விக் கொண்டிருந்த முதலையின் வாயிலிருந்து யானையை விஷ்ணு காப்பாற்றினார் என்று பெருமையாகக் கூறுகின்றனர்.
ஆனால் சுந்தரரோ
அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்
சொல்லு காலனையே
என அவிநாசித் திருத்தலத்தில் முதலை முழுவதும் விழுங்கி உண்டுவிட்ட பிள்ளையை சில ஆண்டுகளுக்குப்பிறகு அவிநாசியப்பரின் திருவருளால் மீண்டும் உயிரோடு தக்கவளர்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்.இத்தகைய அதிசய ஆற்றல் கொண்ட சுந்தரர் எல்லாம் வல்ல பரம்பொருளால் வலிந்து ஆட்கொள்ளப்பட்டார்.
இத்திருத்தலம் இறந்து போன பிரம்மனுக்கு பரமசிவம் மீண்டும் உயிர்கொடுத்துப் படைப்புத் தொழிலை அருளிச் செய்த திருத்தலமாகும்.மயானம் என்ற பெயருடைய திருத்தலங்கள் ஐந்து.அவற்றில் திருமெய்ஞானம் என்று வழங்கப்படுகின்ற திருக்கடவூர் மயானமும் ஒன்று.
திருக்கடவூர் வீரட்டேஸ்வரரை வழிபடுகிறவர்களுக்கு மரணவேதனை இல்லை;ஆயுள் கூடுகிறது;வறுமை நீங்கி செல்வம் சேர்ந்து வளமான வாழ்வு உண்டாகிறது.மறுபிறவி நீங்கி முக்தி உண்டாகிறது;திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் ஆயுஷ் ஹோமம் செய்வது மிகவும் சிறப்பான பலனைத்தரும்.தந்து பூரண ஆயுளை அளிக்கின்றது.
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான்
கன்றாரும் கரவா கடவூர்த் திருவீரட்டானத்துள்
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீ அலதே
மருவார் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழத்
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே(சுந்தரர்)
ஆதாரம்:அட்டவீரட்டானங்கள்,பக்கங்கள்176,177,182,188,190,191,204.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment