அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரணசக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
மழலை வரம் அருளும் மகேசனின் அன்னப் பிரசாதம்!
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய பொருட்களால் வழிபடுவது விசேஷம். சித்திரையில் மருக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசு நெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசு நெய் மற்றும் தாமரை தீபம், தை மாதத்தில் கருப்பஞ் சாறு, மார்கழியில் பசு நெய் மற்றும் நறுமண பன்னீர் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதேபோல், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்பார்கள். அதாவது, அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்றும் சொல்வது உண்டு.
சிவலிங்க பாணத்தின் நீள்வட்ட வடிவமானது, எல்லையற்ற ஒன்றைக் குறிக்கும். அதாவது, பிரபஞ்ச சக்தியை உணர்த்துவது. அரிசியின் வடிவமும் நீள்வட்டம்தான். ஆகாயத்தில் தோன்றும் காற்றின் துணையுடன் நெருப்பு எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. ஆக, அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாதவனை போதும் என்று சொல்ல வைப்பதும் அன்னம் மட்டுமே! ஆக, உன்னதமானவருக்கு உன்னதமானதைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைத் தருவது ஐப்பசி அன்னாபிஷேகம்.
அன்னாபிஷேக தினத்தில் ஈசனின் திருமேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடிலிங்க தரிசனத்துக்குச் சமம். அன்று லிங்கத்தின் மேல் சாற்றப்பட்ட அன்னம் வீரியம் மிக்க கதிர்வீச்சு கொண்டதாக இருக்கும் என்பது ஐதீகம். அன்று, பாண லிங்கத்தின் மேலுள்ள அன்னம் தவிர்த்து, ஆவுடை மற்றும் பிரம்ம பாகத்தின் மேலுள்ள அன்னம், மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தயிர் கலந்து கொடுப்பதும் வழக்கத்தில் உண்டு. பிறகு, அந்தப் பிரசாதத்தில் ஒரு பாகம், அருகிலுள்ள திருக்குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்
யாவருக்கும்
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்
யாவருக்கும்
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது.
No comments:
Post a Comment