எதிரில்லா அஞ்செழுத்தும் அஞ்சுமுகமாக
ஏகமாய் ஒரு நூற்று இருபத்தஞ்சாய்
எதிரில்லா விஞ்சையாய்க் கலைக்கியானமாகி
இதமதிதம் இரண்டுக்கும் முன்னேயாகி
எதிரில்லாத் தோற்றுவித்து எழுவகையுமாகி
எழுவகையின் தோற்றத்தில் லோகமாகி
எதிரில்லா மந்திரத்தின் மகிமைதன்னை
எண்ணுகிறேன் ஒவ்வொன்று இருபத்தஞ்சே
கருவூராரின் பாடல் எண்:252
விளக்கம்: “நமச்சிவாய” என்ற ஐந்து எழுத்தை ஐந்து முகமாகப் பிரித்துப் பார்க்க இருபத்தைந்தாம்.இதை ஐந்து முகமாகப் பார்க்க(25 X 5) நூற்று இருபத்தைந்தாகும்.இதற்குச் சமமான மந்திரங்கள் இல்லை எனலாம்.
ஏழுவகைத் தோற்றமும்,ஏழு வகைத் தோற்றத்தில் உருவான உலகமும் இதனுள் அடங்கும்.கலைக்கியானம் என்பதும் ஐந்தெழுத்தில் அடங்கும்.
அஞ்சுமுகம் ஒவ்வொன்றும் இருபத்தஞ்சும்
அறுபத்து நாலுசித்தும் ஆடிநிற்கும்
பஞ்சமுக மாயிருந்த பூரணத்தைச் சேர்க்கும்
பராபரனாம் வாழ்நாளும் ஆறுதலம்பாயும்
துஞ்சாது ஒருநாளும் வளர்ந்து தோன்றும்
சுத்தருக்கு இந்தமுறை தொடர்ச்சியாகும்
பிஞ்சாகும் காயாகும் பூவுமாகும்
பேசரிய பலகோடி அண்டமாமே
கருவூரார் பாடல் எண்:253
விளக்கம்:ஐந்து முகம் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து அட்சரமாகும்.(அட்சரம் என்றால் ஆதார எழுத்து என்று பெயர்).இதனால், அறுபத்து நான்கு சித்துக்களுமுண்டாகும்.இதுவே பூரணம் என்ற முழுமையை உண்டாக்கும்.பராபரனான வாழ்நாளில் ஆறுதலமும் பாயும்.ஒவ்வொரு நாளும் வளர்ச்சியே அன்றிக் குறை வராது.
சுத்தமான மனது உடையவர்க்கு இந்த முறை நன்மையை அடையச் செய்யும்.பிஞ்சாகி,காயாகிப் பூவுமாகும்.பலகோடி அண்டத்திற்கும் மேலானது “நமச்சிவாய” என்ற ஐந்தெழுத்து.
ஆமப்பா அச்சரங்கள் அஞ்சுபின்னை
அய்ம்பத்தோர் அட்சரமாய் விரிந்துநிற்கும்
ஓமப்பா ஒவ்வொன்றாய் வழுத்தவென்றால்
உரையேது கரையேது உரைப்பராரோ
வேமப்பா கருவுடனே சேர்ந்துதானால்
வேரேது தூறேது வெல்வாரேது
நாமப்பா அறிந்தமட்டுஞ் சொல்லோங்கேளு
நாதாக்கள் தவறாமல் பார்த்திட்டாரே
கருவூரார் பாடல் எண்:254
விளக்கம்:ஐந்து எழுத்தே ஐம்பத்தோரு எழுத்தாக விரிந்து நிற்கும்.ஒவ்வொன்றாக விரித்துச் சொல்ல முடியாது.அதற்கு எல்லை என்பது இல்லை;கடைசிவரை சொல்பவர் யாருமில்லை.இவ்வாறான எழுத்தின் முறை,முறையான கருவுடன் சேர்ந்தால் அதற்கும் எல்லை என்பது இல்லை;யாரும் வெற்றி கொள்ள முடியாது.
நான் தெரிந்து கொண்டவரைச் சொல்லுகிறேன்.மேல்நிலையை அடைந்த நாதாக்கள் இவ்வாறான முறைகளைத் தவறாமல் பார்த்தார்கள்.
கலியுகம் பற்றி கருவூராரின் பாடல் இது;பாடல் எண்:174
காணிந்த கலியுகத்தின் மகிமை சொல்வோம்
கற்றவரைத் தூஷணித்துத் தாந்தானென்று
பூணிந்த பெண்ணாசை வலையிற் சிக்கிப்
புலையர் முதல் மறையோரைப் புணர்ச்சி செய்து
வீணென்ற ஆணவத்தால் கள்ளையுண்டு
மேல்வரம்பு கீழ்வரம்பு இரண்டுமின்றி
நாணென்ற சொல்லத்துத் தெருக்கள் தோறும்
நாதாந்தப் பொருளெல்லாந் துறந்திட்டாரே
விளக்கம்:கலியுகத்தின் மகிமைகளைக் கூறுகிறேன்.கற்று உணர்ந்த பெரியவரை மதிக்காமலும்,இகழ்வாய்ப் பேசியும்,தான் என்ற ஆணவம்,கர்வம் கொண்டு பெண் மோகம் என்னும் பெருவலையில் சிக்கிப் புணர்ச்சியில் ஈடுபட்டு,அறிவை மயக்கக்கூடிய கள்ளைக் குடித்தும் மேல் நிலையை அடையாமலும்,கீழ்நிலை என்ற சாமானியனைப் போல் இல்லாமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் தெருவில் சுற்றித்திரிந்து உண்மைப்பொருளான நாதாந்தப் பொருளை இழந்தார்கள்.
ஓம் கருவூர் தேவாய நமஹ
பாடல் ஆதாரம்:நன்றிகள் கோடி= கருவூரார் பலதிரட்டு(கருத்துரையுடன்),
பதிப்பாசிரியர்: ஆர்.சி.மோகன்
வெளியீடு:தாமரை நூலகம்,7,என்.ஜி.ஓ.காலனி,
3 வது தெரு,வடபழனி,சென்னை-26.
நாம் நமது நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் நமது குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு தினமும் 108 வீதம் ஓம்நமச்சிவாய ஜபிக்க வேண்டும்.இளவயதான இப்போதே தினமும் 108 முறை ஓம்நமசிவாய ஜபித்துவந்தால்,ஒரு சில மாதங்களில் காட்டுக்குச் செல்லும் மனநிலைக்கு ஆளாகிவிடுவோம்.அப்பேர்ப்பட்ட ஓம்நமசிவாய மந்திரத்தை அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஜபிக்க நம்மை = நமது பிறவியை=நமது ஆத்மாவை இப்போதிருந்தே தயார் செய்ய வேண்டும்.அப்படித் தயார் செய்ய நாம் செய்ய வேண்டியது தினமும் குறைந்தது 108 முறை அதிகபட்சம் 1ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பது மட்டுமே!!!
சுமார் 10 வருடங்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் விடாமல்(சில பல காரணங்களால் விட்டு விட்டு ஜபித்தாலும்) ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,நமது ஜப எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துவிடும்.அப்படிக் கடந்து விட்டால்,18 சித்தர்களும் நம்மை நேரடியாக வந்து ஆசிர்வாதிப்பார்கள் என்பது நாடி ஜோதிடத்தில் கிடைத்த உண்மை ஆகும்.
ஒரு குடும்பஸ்தனை/இல்லத்தரசியை 18 சித்தர்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக வருகை தந்து ஆசி கொடுக்க அவன்/ள் தமது வாழ்நாளில் 1,00,00,000 ஒருகோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டுமாம்.
ஓம்சிவசிவஓம்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் இதில் பிரச்சனை என்ன வென்றால் நமது கர்ம வினையும் க்ரஹ சாரங்களும் நம்மை சில நேரம் இம் மாதிரி நல்ல காரியங்களில் இடுபடுவதை தடுக்கின்றன ஆனால் இறைவன் அருளால் உங்கள் பூர்வ ஜென்ம வினையானது உங்களை இம் மாதிரி நல்ல காரியங்களில் ஈடுபட வேய்கின்றது அதனால் நாங்களும் பலன் அடைகிறோம் நன்றிகள் பல
ReplyDelete