திருஅண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் தென்மாதி மங்கலம் என்னும் கிராமத்திலிருந்து பிரிந்து மலையோரம் பயணித்தால் சில கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது பர்வதமலை ஆகும்.இந்த மலையை பெண்களின் திரு அண்ணாமலை என்று சொல்லலாம்;சிவனின் மனைவி பார்வதி இங்கே தவமிருக்க வந்திருக்கிறார்;அவருக்குத் துணையாக பர்வத மலையின் அடிவாரத்தில் பச்சையம்மனும்,காவலுக்கு ஏழு முனிகளும் வந்து இன்றும் மறைமுகமாக இருக்கிறார்கள்;ஒவ்வொரு பவுர்ணமிக்கும் பர்வதமலைக்குப் பயணிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.பாதி தூரம் கரடுமுரடான பர்வதமலையில் பயணித்ததும்,செங்குத்தான மலை ஒன்று நம்மை வரவேற்கிறது.சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு நெட்டுக்குத்தாக அங்கே இருக்கும் இரும்புச் சங்கிலிகளைப் பிடித்தவாறு மேலே பயணிக்க வேண்டியிருக்கிறது.இங்கே இன்னும் ஏராளமான சித்தர்கள் தவம் செய்துவருகிறார்கள்.நள்ளிரவில் மேளச்சத்தங்கள்,வழிபாடு செய்யும் ஒலிகள் அடிக்கடி அருகிலிருக்கும் கிராமங்களுக்கு கேட்டவண்ணம் இருக்கின்றன.
இங்கே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பரமஏழை ஒருவன்,இந்த பர்வதமலைக்கு வந்திருக்கிறான்.ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் அமாவாசை இரவுகளுக்கும் சித்தர்கள் இங்கே வருவார்கள்;அவர்களை தரிசித்தாலே தமது வறுமை நீங்கிவிடும் என்று எண்ணி ஒரு பவுர்ணமி இரவுக்கு பர்வதமலைக்கு வந்திருக்கிறான்;அப்போது இவ்வளவு கூட்டம் வருவதில்லை;தனியாக மலையேறிவிட்டு,பர்வதியம்மனை வழிபட்டுவிட்டு தனியாகவே கீழே இறங்கி வரும்போது,ஒருவர் இந்த ஏழையோடு வந்திருக்கிறார்.
அவர் இந்த பரமஏழையைப்பற்றி பேச்சினூடே விசாரித்திருக்கிறார்;தான் பரமஏழை ;சித்தர் யாரையாவது இங்கு வந்தால் தரிசிக்க முடியும் என்றும்,அப்படி தரிசித்தால் தனது வறுமை அடியோடு நீங்கிவிடும் என்றும் தெரிவித்திருக்கிறான்.பேசிக்கொண்டே வரும்போது அவனது அரிவாளை வாங்கி,ஆங்காங்கே கூர் பார்த்துக்கொண்டே வந்திருக்கிறார் உடன் வந்தவர்.ஒரு இடத்தில் இருவரும் பிரிய நேர்ந்திருக்கிறது;
தனது வீட்டிற்குத் திரும்பிய அந்த பரமஏழை,தனது அரிவாளை கீழே போடப் போக,அது நிலவொளியில் தகதகத்திருக்கிறது;வியப்புடன் அதை எடுத்துப் பார்த்தால் இரும்பு அரிவாளாக இருந்த அது,வெள்ளி அரிவாளாக மாறியிருக்கிறது.ஆமாம்! அந்த பரமஏழையுடன் பேசிக்கொண்டே வந்தவர் ஒரு சித்தர்.தனது ரசவாத சக்தியால் அந்த பரமஏழையின் ஏழ்மையை தனது ரசவாத சக்தியால் நீக்கியிருக்கிறார்.
நன்றி:சித்தர் உலக ரகசியங்கள்,பக்கங்கள் 17,18.
ஆன்மீகக்கடலின் கருத்து: நம்மில் பலர் ஆர்வக்கோளாறின் காரணமாக சித்தர்களை தரிசிக்க சதுரகிரி,அண்ணாமலை,பர்வதமலை என்று அடிக்கடி பயணித்துக்கொண்டிருக்கிறோம்;யாருக்கு பூர்வபுண்ணியமும்,தகுதியும் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே சித்தர்களை தரிசிக்க முடியும்.எல்லோருக்கும் ஒருபோதும் சித்தர் தரிசனம் கிடைக்காது;வீண் முயற்சி செய்வதற்குப்பதிலாக,ஆன்மீகக்கடலின் ஆராய்ச்சி முடிவுகளை முயன்று பார்க்கலாம்.
மேலும் விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment