Friday, August 24, 2012

ஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்!!!


திருச்சி: திருச்சி- கல்லணை சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் விஸ்வநாதர் கோவில், மூலவர் லிங்கத்தின் மீது, சூரியக்கதிர்கள் வழிபாடு நடத்தியது பக்தர்களை பரவசமடையச் செய்தது.திருச்சி- கல்லணை சாலை காவிரி தென்கரை சர்க்கார் பாளையத்தில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட, பழமையான காசி விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலாகும்.ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8, 9ம் ஆகிய தேதிகளில், தொடர்ந்து சூரிய உதயத்தின்போது, மூலவர் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் நேரடியாக படுவது இக்கோவிலின் சிறப்பம்சம். இந்நிகழ்வை சூரிய வழிபாடு என புராணங்கள் தெரிவிக்கின்றன.சிவலிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் சிவலிங்கத்தை வழிபடும்போது பக்தர்கள் வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு கோவிலில் சூரிய வழிபாடு நேற்று துவங்கி நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.நேற்று அதிகாலை சூரிய உதயத்தின்போது சூரியக்கதிர்கள் கோவிலின் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாட்டை தரிசித்து பரவசம் அடைந்தனர்.தொடர்ந்து இரண்டு நாள் சூரிய வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, அர்ச்சகர் சாமிநாதசிவம், உபயதாரர்கள் சுந்தர மீனாட்சி, ராஜாராம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment